‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?
தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன.
இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றி, அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ஒன்டாரியோ ஏரி
இந்த ஏரியின் நடுவில்தான் அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லை இருக்கிறது. அமெரிக்காவின் பக்கம், இந்த ஏரி நியூயார்க் மாநிலம் பக்கம் உள்ளது. கனடாவின் பக்கம், ஒன்டாரியோ மாகாணத்தில் இருக்கிறது.
இதனால், இந்த ஏரியையொட்டி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் (அப்போது கனடா பிரிட்டனுக்குக் கீழ் இருந்தது) 1909-ஆம் ஆண்டு எல்லை நீர் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் பரஸ்பர நாடுகளைப் பாதிக்கும் வகையில், அதன் நீரோட்டத்தை மாற்றவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.
நாடுகளைப் பாதிக்கும் வகையில் அந்த ஏரியின் நீரை மாசுப்படுத்தக் கூடாது.
இரு நாடுகளுமே அந்த ஏரியைப் போக்குவரத்திற்காகவும், வணிகத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ட்ரம்ப் என்ன சொல்லியுள்ளார்?
பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்ட பின் ட்ரம்ப், “ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுகிறோம். இது உடனடியாக அமுலுக்கு வருகிறது.
கனடாவைத் தாங்கிச் சுமப்பதால், கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஆண்டுக்குச் சராசரியாக 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இனிமேலும் அதைச் செய்ய முடியாது.
‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுவது நீண்ட நாள்களாக நான் யோசித்து வந்ததில் ஒன்று.

‘மெக்சிகோ வளைகுடா’ என்று இருந்ததை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றினோம். இப்போது அது இயல்பாகவே புழக்கத்திற்கு வந்துவிட்டது.
இப்போது நம்மிடம் ஒரு வளைகுடாவும், ஒரு ஏரியும் உள்ளது. இனி நமக்குத் தேவை ஒரு பெருங்கடல் மட்டும்தான். எனவே, அடுத்து அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலின் பெயரை நாம் மாற்ற வேண்டியிருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
கனடாவின் ரியாக்ஷன்
ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
“ ‘ஒன்டாரியோ ஏரி’ என்ற பெயர் ‘ஒன்டாரி இயோ’ எனும் வெண்டாட் பழங்குடியின மொழியிலிருந்து வந்ததாகும். அதற்கு ‘மிகவும் அழகான ஏரி, மிகப்பெரிய ஏரி’ என்று பொருள்.
இந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் உள்ளது. அதாவது கனடாவின் கூட்டமைப்பு உருவாவதற்கும், அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கும் முன்பிருந்தே இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா மாறிவருகிறது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கைகள், தேசிய நினைவிடங்கள், ஏன் நீர்நிலைகளின் பெயர்கள் கூட மாறிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், என்றென்றும் அதை ‘ஒன்டாரியோ ஏரி’ என்று அழைப்பதுதான் உண்மைக்கு அழகு என்பதைக் கனடா மக்கள் நன்றாகவே அறிவார்கள்.”

ட்ரம்பின் அறிவிப்பு செல்லுபடியாகுமா?
அமெரிக்காவிலும், அமெரிக்க அரசாங்கத்திலும் ஒரு இடத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும்... எப்படி குறிப்பிட வேண்டும் என்று மாற்றுகிற அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உண்டு.
இதனால், இனி அமெரிக்கா ஒன்டாரியோ ஏரியை அமெரிக்கா ஏரி என்று அழைக்கலாம்.
ஆனால், இந்தப் பெயர் மாற்றத்தைக் கனடாவின் மீதோ, உலக நாடுகள் மீதோ அமெரிக்கா திணிக்க முடியாது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

