சுப்ரமணியபுரம் : நம்பிக்கைத் துரோகம்! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 19

“உன் சித்தப்பனுக்கு சாவு என் கையாலதான். அவனுக்காக உயிர் பிச்சை கேட்டுகிட்டெல்லாம் நீ வராத!”

என்று தன்னைப் பார்க்க வரச்சொல்லிவிட்டு, தன் முன்னால் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும் காதலி துளசியைப் பார்த்துக் கத்துகிறான் அழகர். அவளது அழுகைக்கு என்ன அர்த்தம்? என் சித்தப்பனை ஒன்றும் செய்துவிடாதே என்ற வேண்டுகோளா அல்லது எத்தனை அழகான ஒரு காதலையும், உன்னோடு ஒரு நல்வாழ்க்கையையும் கனவு கண்டுகொண்டிருந்தேன், அதெல்லாம் போச்சே என்ற வேதனையா?

இரண்டுமே இல்லை!

தமிழ் சினிமா எத்தனையோ காதல்களைப் பதிவு செய்திருக்கிறது. காதலில் ஏய்ப்புகளைப் பார்த்திருக்கிறோம். பொருளாதார லாபக்கணக்குகளைப் பார்த்திருக்கிறோம். எமோஷனல் பிளாக்மெயில்களைப் பார்த்திருக்கிறோம், முக்கோணக் காதல் சிக்கல்களைப் பார்த்திருக்கிறோம். எல்லாமே பெரும்பாலும் ஒருவரை இன்னொருவர் தவிக்கவிட்டுப் பிரிந்து செல்வதாகத்தான் அமைந்திருக்கும். ஆனால், காதலில் இப்படியொரு துரோகத்தை இதுவரை நாம் பார்த்ததே இல்லை.

சுப்ரமணியபுரம்

மூன்று காரணங்களுக்காக சுப்ரமணியபுரம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

முதலாவது, அச்சுப் பிசகாத 1980-களின் தமிழ்நாட்டின் மறு உருவாக்கம். முன்னதாகவும் அழகி, ஆட்டோகிராஃப் போன்ற பல படங்களில் இப்படியான சின்னச்சின்ன முயற்சிகள் ஓரங்கமாக, வெற்றிகரமாக முயற்சிக்கப்பட்டிருக்கின்றன. இம்சை அரசன் 23-ம் புலிகேசி, மதராசப்பட்டினம் போன்ற படங்களில் முழு நீளமாக பீரியட் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றின் காலம் நாம் பார்த்திராத ஒரு காலம். அதனால், அவற்றுக்கு ஒரு கிரியேட்டிவ் சுதந்திரம் இருந்தது. சுப்ரமணியபுரத்துக்கு அது இல்லை. சுப்ரமணியபுரத்தில் நாம் பார்த்த மதுரை, கொஞ்சகாலத்துக்கு முன்பாக நாம் நிஜத்தில் வாழ்ந்து, உணர்ந்த மதுரை. இதில் கொஞ்சம் தவறியிருந்தாலும், படம் ஒரு பெரிய கலைச்சரிவைச் சந்தித்திருக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட ஏரியா, குறிப்பிட்ட வீடு என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல் கேமரா அலைந்து திரிந்துகொண்டிருந்தது.

ஒரு காட்சியில் துளசி பஸ்ஸ்டாண்டில் காத்திருந்து, பஸ் ஏறிச் செல்வார். அந்த பஸ் கொஞ்ச தூரம் ஓடிக்கொண்டிருக்கும். பஸ்டாண்ட், அருகிலிருக்கும் கடைகள், சில்வர் நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட பேருந்து மட்டுமல்ல, அந்த பஸ் ஓடும் தூரம் வரைக்கான தெருச்சுவர்களில் டார்டாய்ஸ் கொசுவர்த்தி, எஸ்.வி.எஸ் பட்டணம் பொடி என விளம்பரங்களும் கூட அன்றைய நாட்களை பிரதியெடுத்திருந்தது.

இப்படி ஒன்றைச் சாத்தியப்படுத்திட சசிகுமாருக்குத் துணை நின்றது, படத்தின் கலை இயக்குநர் பி.ரெம்பான். இது இவருக்கு அறிமுகப் படம். அடிபம்புகள், சேட்டக் ஸ்கூட்டர், கருப்பு டெலிபோன்கள், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தின் ஜிகினா கட்டவுட்டுகள், சவுண்டு சர்வீஸ், அம்பாசிடர் கார்கள், போலீஸ் வேன் என்று ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருந்தார்.

சுப்ரமணியபுரம்  `சினி'ஸ்கோப் 19
சுப்ரமணியபுரம் `சினிஸ்கோப் 19

சுப்ரமணியபுரம் `சினிஸ்கோப் 19

இரண்டாவது காரணம், உயிரோட்டமான கதாபாத்திரங்கள். அழகர், பரமன் கதாபாத்திரங்களையும் விட இன்னும் அசலான பாத்திரங்களாக துளசி குடும்பத்தினர் இருந்தார்கள். மூன்று அண்ணன் தம்பிகளின் வெவ்வேறான குணமும், அவர்களுக்கிடையேயான உறவும் நிஜமான குடும்பங்களைப் பிரதிபலித்தன.

மூத்தவன் சிதம்பரம் ஓர் அரசு ஊழியன். இரண்டாமவன் சோமு ஓர் அரசியல்வாதி, ஒரு முறை கவுன்சிலராக இருந்து அதன் பதவி சுகத்தை அனுபவித்தவன். மூன்றாமவன் கனகு அந்த இருவருக்கும் உதவியாக இருக்கிறான். மீண்டும் பதவிக்கு வரமுடியாத சோமு பெரும் மனவுளைச்சலில் இருக்கிறான். அவனது மனைவி அவனைத் தேற்றுவதற்குப் பதிலாக, கேலி செய்கிறாள், அவமானப் படுத்துகிறாள். செய்யக்கூடாதவற்றையெல்லாம் செய்து அவன் மீண்டும் பதவியை அடையும் போது, அவளுக்கு சந்தோஷம்.

’ஆமாப்பா, உங்க மருமவன் தலைவராயிட்டாருல்ல…’ என்று அப்பாவிடம் போனில் பெருமை கொழிக்கிறாள். அது எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையில்லை. போலவே பதவியில்லாத போது சோமுவின் மனம்படும் பாடுகளை அண்ணனும், தம்பியும் புரிந்துகொள்கிறார்கள். அதற்காகக் காய் நகர்த்துகிறார்கள். சோமுவின் பெண் துளசியின் காதல் தெரியவருகையில் அதை சோமுவுக்குத் தெரியாமலேயே கையாளுகிறார்கள். இப்படிப் படம் நெடுக கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பிரமாதமாக அமைந்திருந்தது.

ஓரிடத்தில் அழகர், முனிஷின் ஆட்களால் துரத்தப்படுகிறான். அவர்களிடமிருந்து மயிரிழையில் தப்பி, ஒரு வீட்டுக்குள் புகுந்துகொள்வான் அழகர். அந்த வீட்டிலிருக்கும் பெண், கத்திக்கூப்பாடு போட்டு அவனைக் காட்டிக்கொடுக்க முயலுவாள். அவள் காலில் விழுந்து கெஞ்சி தப்பிப்பான். பின்னர் பரமனிடம், “ஒரு பொம்பளை கால்ல விழுந்து கெஞ்ச வைச்சிட்டானுக பரமா” என்று புலம்புவான். உயிருக்குப் பயந்து ஓடியதைவிடவும், ஒரு பெண்ணில் காலில் விழுந்து கெஞ்சியது அவனுக்கு அதிக அவமானத்தைக் கொடுத்திருப்பதை உணரமுடியும்.

இன்னொரு காட்சியில் கனகு, துளசியின் காதலைப் பற்றி தன் அண்ணனிடம் பேசிக்கொண்டு வருவான், ‘பொட்டப்புள்ளைக்கு ஏண்ணே அம்புட்டு சலுகை? விசயம் தெரிஞ்சதும் கையைக் காலை உடைச்சி வீட்டுல போட்டுருக்க வேண்டாமா?” என்கிறான். இப்படியான சில பிற்போக்குத்தனமான இடங்கள் இருந்தன. ஆனால், அது படத்தின் குரலாக இல்லாமல், அந்தப் பாத்திரங்களின் குரலாகவும், அந்தக் காலகட்டத்தின் குரலாகவுமே வெளிப்பட்டன.

சுப்ரமணியபுரம்  `சினி'ஸ்கோப் 19 | அழகர் - துளசி
சுப்ரமணியபுரம் `சினிஸ்கோப் 19 | அழகர் - துளசி

மூன்றாவது காரணம், துரோகம். துரோகக் கதைகள் எந்த உறவுகளுக்குள் நடந்தாலும் அவை எப்போதுமே வீரியமிக்கவைதான். அதிலும், காதலில் இப்படியொரு துரோகத்தை யாரும் எதிர்பார்த்திடவில்லை. துளசிக்கு அதில் விருப்பமில்லைதான். அது அவளுக்கும் துயரம்தான். ஆனாலும் செய்கிறாள். குடும்பத்துக்காக யோசித்தாளோ, எமோஷனல் பிளாக்மெயிலுக்காகப் பணிந்தாளோ அல்லது பயந்தாளோ… சித்தப்பா கனகு சொல்லிக் கொடுத்தபடிச் செய்துவிடுகிறாள். அழகர் குத்திக் கொல்லப்படுகிறான். கனகுவுக்குப் அதில் பெருமை. ‘நம்ம ரத்தம்னு நிரூபிச்சிட்டடா’ என்று அணைத்தபடி அவளை அழைத்துப்போகிறான். அனேகமாக அது ஜாதிப் பெருமையாக இருக்கலாம்.

சுப்ரமணியபுரத்தை எழுதி, இயக்கியிருந்தது சசிகுமார். அத்தோடு பரமன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருந்தார். சசிகுமாரும், அமீரும், சேது படத்தின் போதிருந்தே இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர்கள். நடிப்புக்கும், இயக்கத்துக்கும் சசிகுமாருக்கு இதுவே முதல் படம். கூடவே சவாலான கதைக்களம் வேறு. அத்தனையிலும் வெற்றி பெற்றார். அவரது கம்பெனி புரடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்திருந்ததும் அவரேதான்.

திரைக்கதையைப் பொறுத்தவரை கனகு செய்த எளிய உதவிகளுக்கு கைமாறாக, பரமனும், அழகரும் அப்படி ஒரு ’சம்பவம்’ செய்ய முடிவெடுப்பார்களா என்பதும் போதாமையாக இருக்கிறது. அதுதான் அப்படி என்றால், சிறையில் பழகிய ஒரு நண்பருக்காக அடுத்தொரு சம்பவம், தம்மை பெயிலில் எடுக்காத ஒரே காரணத்துக்காக, கனகுவை சம்பவம் செய்ய திட்டமிடுதல் என, ஏதோ பவாரியா கேங் போல இருவரும் செயல்படுவது சற்று அதிகப்படியாகத்தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் ’பழக்கம்’ எனும் காரணம் சொல்லப்படுகிறது.

சுப்ரமணியபுரம்  `சினி'ஸ்கோப் 19 | கனகு
சுப்ரமணியபுரம் `சினிஸ்கோப் 19 | கனகு

’மருதைக்காரய்ங்க பழக்கத்துக்காக உசிரைக்கொடுக்கவும் தயங்க மாட்டாய்ங்க, எடுக்கவும் தயங்க மாட்டாய்ங்க’ எனும் வசனத்திலிருந்து கதை உருவாகியிருந்தாலும், ஒரு சினிமாவாக காரண காரியங்கள் போதவில்லை என்பதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. போலவே, கனகு, அழகரையும், பரமனையும் அவனது திட்டத்துக்குச் சம்மதிக்க வைப்பதுதான் பிரதான கதை தொடங்கும் இடம். அது இடைவேளைக்கு அருகேதான் வருகிறது. அது மிகத் தாமதம்தான்.

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், அழகர்-துளசி காதலையும் சொல்வதற்கு மட்டுமே முதல்பாதி முழுவதையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதல் பாதி படம், தெருமுனை சந்திப்புகள், தியேட்டர் காட்சிகள், கோவில் திருவிழா, சில அடிதடி ரவுடித்தனங்கள், போலீஸ்ஸ்டேஷன் என்று கதையைப் பற்றிய கவலையின்றி, பார்வையாளர்களின் நாஸ்டால்ஜிக் உணர்வை நம்பியே நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகான படம் பரபரவென மின்னல் வேகத்தில் சென்று முடிந்தது. சசிகுமார், இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இயங்கி வந்தாலும், ஈசன் எனும் ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். பாலுமகேந்திராவின் கடைசி படமான தலைமுறைகள் படத்தையும் சசிகுமார் தயாரித்தார்.

அழகராக சிறப்புற நடித்திருந்தது ஜெய். சென்னை 28 வெற்றிக்குப் பிறகு வெளியான ஜெய்யின் இரண்டாவது படமான இது, அவரின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. கதாநாயகி துளசியாக சுவாதி நடித்திருந்தார். பதக்கச் சங்கிலி, பாவாடை-தாவணி, அழகரைத் தேடி அலைபாயும் கண்கள் என ’சிறுபொன்மணி’யாகவே வலம் வந்தார்.

கனகுவாக நடித்திருந்த சமுத்திரக்கனி, இந்தப் படத்துக்குப் பின்னர் ஒரு வெற்றிகரமான நடிகராகவும், இயக்குநராகவும் இருக்கிறார். ஆனால், 2003-லேயே புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த ’நெறஞ்ச மனசு’ எனும் படத்தை இயக்கியவர் சமுத்திரக்கனி எனும் விபரம் பலருக்கும் தெரியாது. காசியாக கஞ்சா கருப்பு நடித்திருந்தார். நகைச்சுவைக்காக மட்டுமின்றி, கதையின் முக்கியமான, நடிப்புக்கு அதிக வாய்ப்பிருக்கும் ஒரு பாத்திரமாக அமைந்தது காசி. அதில் மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கஞ்சா கருப்பு.

சுப்ரமணியபுரம்’
சுப்ரமணியபுரம்’

ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர். நம்ப முடியாதபடிக்கு, அந்தப் பீரியட் கால மதுரையை அப்படியே அள்ளிக்கொண்டுவந்து தந்தார். படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இது முதல் படம். ஜேம்ஸ் வசந்தன், பட்டமேற்படிப்பு முடித்திருந்த சமயத்தில், மாணவனாக இருந்த சசிகுமாரைச் சந்திக்கிறார். அப்போது சசிகுமார், ஜேம்ஸிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார், ”நான் படித்து முடித்துவிட்டு சினிமாவுக்கு வருவதற்குள் நீங்கள் சினிமாவில் பெரிய இசையமைப்பாளராகி வெற்றிகரமா இருப்பீங்க. அந்த சமயத்துல நான் உங்களிடம் வந்தா, எனக்குப் படம் பண்ண மறுத்துவிடக்கூடாது சார்”.

ஓர் மாணவனுக்குள் எப்படியொரு தன்னம்பிக்கை இருந்திருக்கிறது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தன்னைப் பற்றி கண்ட கனவையும் சாதித்திருக்கிறார். ஜேம்ஸைப் பற்றி எடைபோட்டதும் சரியாக இருந்திருக்கிறது. 1980-களில் நடக்கும் காட்சிகளின் நாஸ்டால்ஜிக் உணர்வுகளையும், இடைவேளைக்குப் பின்பு வன்முறை நிறைந்த இந்தக் கதைக்குப் பொருத்தமான பரபரப்பான இசையையும் கொடுத்திருந்தார் ஜேம்ஸ் வசந்தன். யுகபாரதியின் வரிகளில், வேல்முருகன் பாடிய, ‘மதுர குலுங்க குலுங்க’ பாடலில் மண்ணின் இசையைக் கொடுத்தவர், தாமரை எழுதி, பெல்லி ராஜ், தீபா மிரியம் பாடிய ’கண்கள் இரண்டால்’ பாடல் மூலமாக 80-களின் இளையராஜா காலத்துக்கே நம்மைக் கூட்டிப்போனார்.

காதலில் ஏமாற்றம் வரலாம், பிரிவு வரலாம், ஒருவர் இன்னொருவரை விட்டும் போகலாம். காதலின் காரணமாக கொலைகளும் கூட நடக்கலாம். ஆனால், காதலில் ஒருவர் இன்னொருவரை காட்டிக்கொடுப்பது என்பது நம்ப முடியாதது.

அம்மாவைக் கொன்ற பிள்ளை, பிள்ளையைக் கொன்ற தாய் என்றெல்லாம் சமயங்களில் நாளிதழ் செய்திகளைக் காண்கிறோம். எத்தனை சிந்தித்தாலும், அதன் முரண்பாடுகளை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது. அப்படியான ஒரு முரண்பாடான செய்தியைத்தான் சுப்ரமணியபுரம் நம்மிடையே விட்டுச் செல்கிறது.!

(தொடரும்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.