சென்னையில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஆந்திராவில் மீட்பு - தாய், டாக்டர் சிக்கிய பகீர் பின்னணி!
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி பவித்ரா. இவருக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ரௌடியான `குள்ள கணேஷ், வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் இருக்கிறார். அதனால் வறுமையில் வாழ்ந்து வரும் பவித்ராவால்,மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கிறார். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குழந்தையை விற்பனை செய்யும் பெண் புரோக்கர்கள் ஆண்டாள், தனலட்சுமி, துர்கா ஆகியோர் , பவித்ராவிடம் குழந்தையை விற்றால் மருத்துவமனையின் கட்டணத்தையும் உனக்கும் பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளை கூறியிருக்கிறார்கள்.
புரோக்கர்களின் ஆசைவார்த்தைகளை நம்பிய பவித்ராவும் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை 9 லட்சம் ரூபாய்க்கு விற்க பவித்ரா சம்மதத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பெண் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய புரோக்கர்கள் ஆண்டாள், தனலட்சுமி, துர்கா ஆந்திராவில் குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றனர்.
சட்டவிரோத குழந்தை விற்பனை குறித்து வில்லிவாக்கம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி. சரத்கர் மேற்பார்வையில் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர் தனன்ஜெயன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இரவில் வந்த புகாரையடுத்து அடுத்த சில மணி நேரத்திலேயே குழந்தை விற்பனை நெட்வொர்க் குறித்த முழுவிவரங்களை தனிப்படை போலீஸார் சேகரித்தனர்.
முதலில் குழந்தையின் அம்மா பவித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், குழந்தையை புரோக்கர்களிடம் விற்றதை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின்படி புரோக்கர்கள் ஆண்டாள், தனலட்சுமி, துர்கா என அடுத்தடுத்து குழந்தை விற்பனையில் தொடர்புடையவர்களைப் போலீஸார் பிடித்தனர். பின்னர் ஆந்திராவில் விற்கப்பட்ட குழந்தையை உடனடியாக போலீஸ் டீம் மீட்டு சென்னை வந்தது. அந்தக் குழந்தையை சட்டவிரோதமாக வாங்கி தம்பதியையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். குழந்தையின் தாய் உள்பட 9 பேர் மீது வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
குழந்தை விற்பனை கும்பல் சிக்கியது எப்படி என நம்மிடம் பேசிய போலீஸார், ``சிறையில் இருக்கும் ரௌடி குள்ள கணேஷின் மனைவி பவித்ரா கர்ப்பமாக இருந்ததால், அவரை பெண் போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்தச் சூழலில்தான் பவித்ராவுக்கு குழந்தை பிறந்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. ஆனால் வீட்டில் குழந்தை இல்லை. அதனால் சந்தேகமடைந்துதான் பவித்ராவிடம் விசாரணை நடத்தினோம். விசாரணையில் குழந்தையை புரோக்கர்கள் மூலம் விற்றதை பவித்ரா ஒப்புக் கொண்டார். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குழந்தையை விற்ற கும்பலைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.

மருத்துவமனையின் கட்டணம் செலுத்த வழியில்லாத பவித்ரா, வில்லிவாக்கத்தில் பக்கத்து வீட்டில் தனலட்சுமியிடம் வட்டிக்கு பணம் கேட்டிருக்கிறார். அப்போது தனலட்சுமி, இந்தக் குழந்தையை விற்றால் உனக்கும் பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறி வேளச்சேரியைச் சேர்ந்த புரோக்கர் ஆண்டாள் என்பவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இவர், தனக்குத் தெரிந்த இன்னொரு புரோக்கர் துர்கா மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி, செல்வரசி தம்பதிக்கு குழந்தையை விற்க பேரம் பேசியிருக்கிறார்.
கணேசமூர்த்திக்கும் செல்வரசிக்கும் திருமணமாகி குழந்தை இல்லை. கணேசமூர்த்தி ஆந்திராவில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்து வருவதால் அங்கு தங்கியிருக்கிறார். குழந்தைக்காக ஏங்கிய இந்தத் தம்பதி பவித்ராவின் குழந்தையை 9 லட்சம் ரூபாய்க்கு வாங்க சம்மதித்திருக்கிறார்கள். உடனடியாக பணத்தை வாங்கிய புரோக்கர்கள், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தியதோடு குழந்தையைகணேசமூர்த்தி, செல்வரசியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
உடனடியாக கணேசமூர்த்தி, செல்வரசி குழந்தையோடு ஆந்திராவுக்கு சென்றுவிட்டனர். இந்தத் தகவல் கிடைத்ததும் குழந்தையை ஆந்திராவிலிருந்து மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம். எங்களின் விசாரணையில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜசேகர், மருத்துவமனையின் அட்மின் அலுவலர் விசாலாட்சி ஆகியோருக்கும் குழந்தை விற்பனை குறித்த தகவல் முன்கூட்டியே தெரியவந்திருக்கிறது. அதனால்தான் அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்திருக்கிறோம். பாலுக்காக குழந்தை அழுது கொண்டே இருப்பதால் இந்த வழக்கில் பவித்ராவை மட்டும் சிறைக்கு அனுப்பாமல் குழந்தையின் நலன்கருதி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என உயரதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் இந்த வழக்கில் கைதான 8 பேரை சிறையில் அடைக்கவுள்ளோம் என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


