Nepal: ``ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் நிலை தெரியவில்லை..!” - கலங்கும் தெருவாசிகள்!
கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கடந்த 23-ம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்கு கைலாஷ் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேபாளத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் கும்பகோணம் ஏஜென்சி மூலம் மூன்று மினி பஸ்களில் 57 பேர் சென்றுள்ளனர். இதில் ஒரு பஸ் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பியுள்ளது. பின்னால் வந்த மற்றொரு பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கும்பகோணம் சுற்றுலா ஏஜென்சியால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு பஸ்கள் மற்றும் அதில் வந்தவர்கள் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் சென்ற ஏஜென்சியால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உட்பட 57 நபர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் யாத்ரா ஏனென்சியின் உரிமையாளர் மகன் சையத் உமர் பாரூக்கின் நிலையும் என்னவென்று தெரியவில்லை என்கிறார்கள்.

இந்தச் சூழலில், கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, மகள் ஆகிய மூன்று பேரின் நிலை தெரியாததால், அவர்கள் வசித்த தெருவில் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் பேசுகையில், ``கும்பகோணம் கர்ண கொள்ளை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சாய்நாத் (73). இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி ஜெயலட்சுமி (64) மற்றும் திருமணம் ஆகாத இவர்களது ஒரே மகள், டாக்டர் கேதாரா கௌரி (32). இவர்கள் மூன்று பேரும் ரொம்ப சந்தோஷமாக கைலாஷ் யாத்திரை போயிட்டு வர்றோம்னு சொல்லிட்டு போனாங்க.
நல்லபடியா சேர்ந்த தகவலையும் சொன்னாங்க. ஆனால் திடீர்னு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவர்கள் சென்ற ஏஜென்சியின் இரண்டு பேருந்துகள் காணவில்லை என்கிறார்கள். இதில் இவர்கள் மூன்று பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களது வீடு பூட்டி கிடப்பதைப் பார்க்கும் போதும், எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாததும் எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. எல்லோரிடத்திலும் நல்லா பழகுவாங்க. தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் கேதாரா கௌரி ரொம்பவே அக்கறையா இருப்பாங்க. இந்த தெருவில் வசிக்கும் அந்த மூணு பேர் மட்டுமல்ல... எல்லோரும் பாதுகாப்பா திரும்பி வரணும், இதற்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

