வயலில் அழுகும் தக்காளி; உண்மையில் குப்பையா? உள்ளே இருக்கும் பெரிய பிசினஸ் - விவசாயிகளுக்கு டிப்ஸ்!
தக்காளி விலை குறையும் நேரங்களில், அறுவடை செய்தாலும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.
குறிப்பாக அறுவடைக் கூலி, போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை அதிகமாகும்போது, தக்காளியை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டு செல்வதே விவசாயிகளுக்குக் கூடுதல் செலவாகிவிடுகிறது.
இதனால் வயலிலேயே தக்காளியை விட்டுவிடுவதும், சாலையோரங்களில் கொட்டிவிடுவதும் நடக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரிப்பதும், அதற்கேற்ற தேவை இல்லாமல் போவதும்தான். இதற்கு என்ன தீர்வு? தக்காளி வீணாவதைத் தடுக்க என்ன செய்யலாம்? இதற்கான வழிகளை முனைவர் கற்பூர சுந்தர பாண்டியன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
விலை ஏற்ற இறக்கத்துக்கு நடுவே... சேதமாகும் தக்காளி!
தக்காளி விலை என்பது உற்பத்தி மற்றும் சந்தை வரத்தைப் பொறுத்து அடிக்கடி மாறக்கூடியது. வரத்து குறைந்தால் விலை உயரும்; வரத்து அதிகரித்தால் விலை சரியும். இதனால் ஒருபுறம் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் தக்காளி கிடைத்தாலும், மறுபுறம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவாகிறது.
இதுமட்டுமல்லாமல், அறுவடைக்குப் பிறகு தக்காளியை முறையாகக் கையாளாததும் அதன் சேதத்துக்கு முக்கியக் காரணமாகிறது. Post-Harvest Handling முறையில் சரியான கிரேடிங், சேமிப்பு மற்றும் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
குறிப்பாக, போக்குவரத்தின்போது கிரேட்களில் தக்காளியை அடுக்கி வைக்கும்போது, மேலே வைக்கப்படும் கிரேட்களின் எடை காரணமாகக் கீழே இருக்கும் தக்காளிகள் அழுத்தத்துக்கு உள்ளாகிச் சேதமடைய வாய்ப்புள்ளது.
இதுபோன்ற முறையற்ற கையாளுதலால் ஏற்படும் சேதமும் தக்காளி வீணாவதற்கு முக்கியக் காரணமாகிறது. மழை பெய்யும் காலங்களில் அறுவடை செய்வதற்கான சிரமமும் செலவும் மேலும் அதிகரிக்கிறது.
விலையைத் தீர்மானிப்பது யார்?
தக்காளி விலை ஏற்ற இறக்கத்துக்கு முக்கியக் காரணம் சந்தையின் தேவை மற்றும் வரத்துதான். மழை பெய்து சந்தைக்குத் தக்காளியின் வரத்து குறைந்தால் விலை அதிகரிக்கிறது.
அதே நேரத்தில், வரத்து அதிகமாகிவிட்டால் விலை குறையத் தொடங்குகிறது. திருமணம், விழாக்கள், ஹோட்டல்களின் தேவை போன்ற காரணங்களால் நுகர்வு திடீரென மாறுவதும் விலையைப் பாதிக்கிறது.
இதனால், தக்காளி விலை குறையும் நேரத்தில், அதை அறுவடை செய்து விற்பதால் கிடைக்கும் பணத்தைவிட, அறுவடை செய்வதற்கும் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும் ஆகும் செலவு அதிகமாகிவிடுகிறது. அதனால், விவசாயிகள் தக்காளியை வயலிலேயே விட்டுவிடுகிறார்கள்.

20 நாள்கள் வரை தாக்குப்பிடிக்கும் தக்காளி!
தற்போது சந்தையில் கிடைக்கும் ஹைபிரிட் ரகத் தக்காளிகளின் (ஒட்டு ரகத் தக்காளி) தோல் தடிமனாக இருப்பதால், அவை பழைய நாட்டுத் தக்காளிகளைப் போலச் சீக்கிரம் கெட்டுப்போவதில்லை.
சரியான முறையில் வைத்துப் பராமரித்தால், அறை வெப்பநிலையிலேயே சுமார் 20 நாள்கள் வரை தக்காளியைப் பயன்படுத்த முடியும்.
மேலும், குளிர்சாதனப் பெட்டியில் தக்காளியை 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தால், அதன் பயன்பாட்டுக் காலத்தை மேலும் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீட்டிக்க முடியும்.
தக்காளிக்கும் சுவாசம் உண்டு!
அறுவடை செய்த பிறகும் தக்காளி தொடர்ந்து சுவாசிக்கும் உயிருள்ள பொருள்தான். ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். சுவாசம் அதிகரித்தால் தக்காளி வேகமாகப் பழுத்து, சுருங்கி, அழுகத் தொடங்கிவிடும்.
பொதுவாகப் பாலிதீன் கவரில் கட்டி ஃப்ரிட்ஜில் வைப்பதைவிட, ஒரு Airtight Container-ல் வைத்துச் சேமிக்கலாம். ஆனால் தக்காளி தொடர்ந்து சுவாசிக்கும் தன்மை கொண்டது என்பதால், “காற்றுப்புகாத டப்பாவுக்குள் வைத்தால் அதன் respiration எப்படி நடக்கும்?” என்ற கேள்வி வரலாம்.
“அப்படியானால் துளையுள்ள பெட்டி வேண்டுமா?” என்ற சந்தேகமும் வரலாம். தக்காளிக்கும் சீரான அளவில் respiration தேவை.

அதுதான் அதன் இயல்பான உயிர்ச்செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறவும், தரம் குன்றாமல் இருக்கவும் உதவுகிறது. அதற்காகத் தனியாகத் துளையிட்ட பெட்டி கட்டாயமில்லை.
வீட்டில் அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து தக்காளியை எடுத்துப் பயன்படுத்தும்போது, அதன்மூலம் காற்றுப் பரிமாற்றமும் இயல்பாக நடைபெறும். இதன்மூலம் தக்காளியை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
விலை ஏறும்போது மட்டும் லாபமா?
தக்காளி விலை அதிகமாக இருக்கும் காலங்களில் விவசாயிகளுக்கு நிச்சயமாக நல்ல விலை கிடைக்கும். குறிப்பாக, உழவர் சந்தையில் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் விவசாயிக்கும் நல்ல விலை கிடைக்கவும், நுகர்வோருக்குக் குறைவான விலையில் தக்காளி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் விலை குறையும் காலத்தில் கிடைக்கும் தக்காளியை அப்படியே வீணாக்காமல் பாதுகாப்பதற்கான வழிகளும் இருக்கின்றன.
தக்காளிக்கு இன்னொரு முகம்!
விலை குறையும் நேரத்தில் தக்காளியை அப்படியே விற்பனை செய்ய முடியவில்லை என்றால், அதை வேறு பொருளாக மாற்றிப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம்.
தக்காளியிலிருந்து பியூரி, பேஸ்ட், ஜாம், சாஸ், கெட்சப், ஊறுகாய், சூப் பவுடர் போன்ற பல பொருள்களைத் தயாரிக்க முடியும். இவ்வாறு மதிப்புக்கூட்டல் செய்வதன் மூலம், தக்காளி வீணாவதைத் தடுத்து, அதை 6 முதல் 7 மாதங்கள் வரை பயன்படுத்தும் வகையில் மாற்ற முடியும்.
இதில் விவசாயிகள் தனித்தனியாகச் செயல்படுவதைக் காட்டிலும், FPO (Farmer Producer Organization) மூலம் ஒன்றிணைந்து மதிப்புக்கூட்டல் யூனிட்களை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

இதற்காக அரசின் நிதியுதவிகளைப் பயன்படுத்தி, குளிர்சாதனச் சேமிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் வசதிகளை ஏற்படுத்திக்கொண்டால் விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்குக் கூடுதல் மதிப்பைப் பெற முடியும்.
வீணாகும் தக்காளிக்கும் மதிப்பு இருக்கிறது!
விலை வீழ்ச்சியாலோ அழுகிப்போயோ ரோட்டிலும் குப்பையிலும் கொட்டப்படும் தக்காளி, உண்மையிலேயே முழுமையாக வீணானது கிடையாது; அதற்குள்ளே ஒரு பெரிய பிசினஸ் வாய்ப்பும் மருத்துவக் குணமும் ஒளிந்திருக்கிறது.
தக்காளியின் தோலில் ‘லைகோபீன்’ (Lycopene) என்கிற மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும், சிவப்பு நிறத்தைத் தரும் இயற்கை நிறமியும் (Natural Colorant) இருக்கிறது.
உணவு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி வீணாகும் தக்காளிகளைச் சேகரித்து, அதிலிருந்து லைகோபீன் மற்றும் இயற்கை நிறமிகளைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், தக்காளி குப்பைக்குப் போவதும் தடுக்கப்படும்; விவசாயிகளுக்கும் நஷ்டம் குறையும்; தொழிற்சாலைகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.
ஸ்ப்ரே மூலம் தக்காளியைப் பாதுகாக்கும் புதிய முயற்சி!
தக்காளியின் ஆயுளைக் கூட்டி, சேமிப்புக் காலத்தை அதிகரிக்க ‘சிட்டோசன்’ (Chitosan) மற்றும் ‘கற்றாழை ஜெல்’ (Aloe Vera Bio-coating) போன்ற இயற்கையான உண்ணக்கூடிய ஸ்ப்ரே பூச்சு (Edible Spray Coating) முறைகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
உணவுக்குப் பாதுகாப்பான இந்த மெல்லிய பயோ-கோட்டிங்கைத் தக்காளியின் மேல் ஸ்ப்ரே செய்வதன் மூலம், தக்காளி விரைவாகப் பழுத்து அழுகிப்போவதைத் தாமதப்படுத்தி, அதன் ஃப்ரெஷ்னஸைப் பல நாள்கள் நீட்டிக்க முடியும். இந்த நவீன தொழில்நுட்ப முறை ஆராய்ச்சி
நிலையைக் கடந்து பயன்பாட்டுக்கு வரும்போது, தக்காளி வீணாவதைத் தடுக்கும் மிகச்சிறந்த கேம்-சேஞ்சராக அமையும்.

விலை வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி... தக்காளிக்கு வேண்டும் மாற்று வழி!
தக்காளி விலை குறையும் ஒவ்வொரு முறையும், விவசாயி விளைவித்ததை வயலிலேயே விட்டுவிடுவது மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. அதேபோல், விலை ஏறும் நேரத்தில் மட்டுமே லாபத்தை எதிர்பார்ப்பதும் நீண்டகாலத் தீர்வாகாது.
சந்தையின் நிலவரத்தை முன்கூட்டியே அறிந்து பயிரிடுவது, அறுவடைக்குப் பிறகு தக்காளியைச் சரியான முறையில் கையாளுவது, குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துவது, FPO மூலம் மதிப்புக்கூட்டல் செய்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதுதான் தக்காளி வீணாவதைத் தடுப்பதற்கான முக்கியமான தீர்வுகள்.
விலை குறைந்தால் வீணாகும் பொருளாகவும், விலை உயர்ந்தால் அதிக விலை கொடுத்து வாங்கும் பொருளாகவும் தக்காளியைப் பார்க்காமல், எல்லாக் காலத்திலும் அதற்கு ஒரு மதிப்பு உருவாக்குவதுதான் அடுத்த கட்டமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

