Roman Telescope: பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்களைத் தேடும் நாசாவின் $4 பில்லியன் ‘ரோமன்’ டெலஸ்கோப்!

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மர்மமான டார்க் மேட்டர் (Dark Matter), டார்க் எனர்ஜி (Dark Energy) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாசா (NASA) தயாரித்துள்ள நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் டெலஸ்கோப் (Nancy Grace Roman Space Telescope), வரும் ஆகஸ்ட் 30 அன்று ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

சுமார் $4 பில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டெலஸ்கோப், 2.4 மீட்டர் பிரைமரி மிரர் மற்றும் 300 மெகாபிக்சல் வைட் ஃபீல்டு இன்ஸ்ட்ரூமென்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதுவரை விண்வெளியை ஆராய்ந்து வரும் புகழ்பெற்ற Hubble டெலஸ்கோப்பை விட சுமார் 100 மடங்கு பெரிய வான்பரப்பை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும் திறன் கொண்டது இது.

Roman Space Telescope

முக்கிய அம்சங்கள்

Hubble தொலைநோக்கியைப் போலன்றி, ரோமன் டெலஸ்கோப் ஒரே நேரத்தில் மிகப் பெரிய வான்பரப்பைப் பதிவு செய்யும் பரந்த பார்வைக் திறனைக் (Wide Field of View) கொண்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கேலக்ஸிகளை (விண்மீன் திரள்களை) ஆய்வு செய்ய முடியும். இதில் உள்ள வைட் ஃபீல்டு இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் சாதாரண வெளிச்சம் முதல் அகச்சிவப்பு கதிர்கள் வரையிலான ஒளியைப் பதிவு செய்ய முடியும். மேலும், கொரோனாகிராப் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நட்சத்திரங்களின் ஒளியைத் தடுத்து, அவற்றைச் சுற்றியுள்ள மங்கலான பொருள்களை ஆய்வு செய்ய இயலும்.

ஆய்வு நோக்கங்கள்

பிரபஞ்சம் வேகமாக விரிவடைவதற்கான காரணமான டார்க் எனர்ஜி குறித்தும், ஈர்ப்பு விசை மூலம் ஒளியை வளைக்கும் முறை (Gravitational lensing) மூலமாக டார்க் மேட்டர் பரவல் குறித்தும் இந்த டெலஸ்கோப் தரவுகளைச் சேகரிக்க உள்ளது. மேலும், ஈர்ப்பு அலைகளைப் பயன்படுத்தும் கிராவிடேஷனல் மைக்ரோலென்சிங் முறையைப் பயன்படுத்தி நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களைக் (Exoplanets) கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Roman Space Telescope

Hubble மற்றும் ரோமன் இரண்டும் ஒரே அளவிலான பிரைமரி மிரரைக் கொண்டிருந்தாலும், Hubble குறிப்பிட்ட பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதிலும், ரோமன் பிரமாண்டமான பரப்பை ஒரே நேரத்தில் சர்வே செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன.

வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட பின், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சன்-எர்த் எல்2 (Sun-Earth L2) பகுதியில் இந்த டெலஸ்கோப் நிலைநிறுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.