Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் - எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக் பிரமாண்டம்?

கோவா, போர்த்துக்கீசியர்களின் பிடியிலிருக்கும் சமயத்தில் தன் தம்பி ராயா (யஷ்) தான், அடுத்து கோவாவை ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார் அக்கா கங்கா (நயன்தாரா). பிறகு கோவாவில் சர்க்கஸ் அமைக்க வரும் நாடியாவுக்கும் (கியாரா அத்வானி) ராயாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையில் துரோகங்கள், அதிகார ஆசை, சூழ்ச்சி ஆகியவை ராயாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட, நாடியாவே கங்காவைக் கொலை செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்.

Toxic Review

தனது சகோதரியைக் கொலை செய்த காரணத்தினால், நாடியாவையும், தங்களுக்குப் பிறந்த குழந்தையையும் ராயா, சந்திக்கவே விரும்பாமல் ஒதுக்கி வைக்கிறார். இந்த வருத்தத்தினால் தனது உயிரையும் மாய்த்துக் கொள்கிறார் நாடியா. சில வருடங்களுக்குப் பிறகு மகன் வளர்ந்து தாயாரின் மரணத்திற்கு, தந்தையைப் பழி தீர்க்கக் கிளம்புகிறார். மகன் நினைத்ததைச் செய்து முடித்தாரா, இதில் இருக்கும் ட்விஸ்ட் என்ன என்பதைக் காடு, மலை, பனிப் பகுதி என நீண்...ட தூரத்திற்குப் பயணித்துச் சொல்கிறது இந்த டாக்சிக் படம்.

இரக்கமில்லாமல் மக்களைக் கொன்று குவிக்கும் டாக்சிக் குணம் கொண்ட அப்பா கதாபாத்திரத்தில் யஷ் இளமை, முதுமை என இரண்டு தோற்றங்களில் வருகிறார். மிரட்டும் கோப முகம், ஆர்ப்பாட்டமில்லாத உடல்மொழி, பதற்றமின்றி கூல் டோனில் போடும் ஆக்ஷன் என நமக்குப் பரிச்சயமான ராக்கி பாயாக வலம் வருகிறார். ஆனால், வயதான வேடத்தில் செயற்கையான ஒப்பனையை மட்டும் கவனித்திருக்கலாம். இதனைத் தாண்டி மகன் யஷ், மழித்த முகம், பரபரப்பு மிகுந்த உடல்மொழி என ஆங்காங்கே சுற்றி வருகிறார். அவற்றில் சிலவற்றை ஓகே எனக் கடந்தாலும், பெரும்பாலான இடங்களில் மிகை நடிப்பே எட்டிப் பார்க்கிறது.

Toxic Review
Toxic Review

அக்கா கங்காவாக நயன்தாரா, தம்பியின் நலனுக்காக அக்கறை காட்டும் கதாபாத்திரத்தில் நிதானமான நடிப்பைத் தாராளமாக வழங்கியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். காதல், பெருந்துயரம் என உணர்வுகளில் அழுத்தமாகப் பயணித்திருக்கிறார் கியாரா அத்வானி. இவர்களைத் தாண்டி ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோரும் இருக்கிறார்கள். ஆனால், நினைவில் இடம்பிடிக்கும் அளவிற்கு அழுத்தமாக அவர்களின் கதாபாத்திரங்கள் எழுதப்படவில்லை.

1950-களின் கோவா, எப்போதும் குண்டு சத்தங்களுடன் நிலவும் பரபரப்பு ஓட்டம் என்பதை கேங்ஸ்டர் சினிமாவுக்கான டார்க் ஒளியமைப்பில் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. இதோடு, காடு, பனி மூடிய மலைகள் என ஏறி இறங்கி, விஷுவல்களில் பிரமாண்ட தன்மையையும் கொண்டு வந்திருக்கிறார். படத்தொகுப்பாளர் உஜ்வால் குல்கர்னி, படம் முழுவதும் எங்கேயும் கத்திரி போடாமல் விட்டிருக்கிறார். இது படத்தின் நீளத்திற்கும் பிரச்னையாகியிருப்பதோடு, பார்க்கும் நம்மையும் சோர்வு எனும் பனிச்சரிவில் சிக்க வைக்கிறது. அதோடு ஒரு சில காட்சிகள் திடீரென கட்டாகி முடிவதும் நிறைவான அனுபவத்தை வழங்கவில்லை.

Toxic Review
Toxic Review

பின்னணி இசையில் ரவி பஸ்ரூர் சில இடங்களில் காட்சிகளைக் கைநீட்டித் தூக்கிவிட முயன்றிருக்கிறார். ஆனால், பெரும்பாலான இடங்களில் காட்சிகளின் உணர்வைக் கடத்த வேண்டிய பின்னணி இசை, சைலன்ட்டாக தலைமறைவாகி இருப்பது பெருத்த ஏமாற்றம்! பாடல்களுக்கு விஷால் மிஷ்ரா, ரவி பஸ்ரூர், தனிஷ்க் பாக்சி, ஃபஹீம் அப்துல்லா, அர்சலன் நிசாமி என ஆறு பேர் இசையமைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பாடல்களில் எங்குமே சர்ப்ரைஸ் டச் இல்லை. ஆக்ஷன் காட்சிகளில் கச்சிதமான பணியைச் செய்திருக்கிறார்கள் ஸ்டன்ட் குழுவினர். பிரமாண்ட செட்கள், பனிப்பொழியும் இடங்கள், எல்லா இடத்திலும் ஆக்ஷன் என அந்தக் குழு கொடுத்திருப்பது அட்டகாச உழைப்பு!

ராயாவின் சிறு வயது, இளமைப் பருவம், முதுமைப் பருவம் என மூன்று கட்டங்களில் இந்த டாக்சிக் கதை நிகழ்கிறது. தாயின் மரணத்திற்குத் தந்தையைப் பழிதீர்க்க மகன் நினைக்கிறார் என்கிற சாதாரண கருவை வைத்து இந்தப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ். ஆனால், அவற்றில் புதுமை என்கிற பெயரில் ஒரு ட்விஸ்ட்டை மட்டும் சேர்த்திருக்கிறார், அவ்வளவே!
Toxic Review
Toxic Review

ஆரம்பத்திலேயே கதை, கதாபாத்திரங்கள், டாக்சிக் கதை நடக்கும் உலகம் என எதைப் பற்றியும் அவசியமான விவரிப்புகளைத் தராமல் வம்படியாக ஆக்ஷன் காட்சிகளுக்கு ஓடுகிறது திரைக்கதை. இதனால், கதாபாத்திரத்தோடும், அதன் எமோஷன்களோடும் ஒன்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இப்படியான பிரச்னை படம் முழுக்கவே தொடர்வது ஏமாற்றமே!

அதோடு கதையின் லாஜிக் விஷயங்களையும் துளியும் கவனிக்காமல் விட்டிருப்பதால் தெளிவில்லாத திரைக்கதையே இறுதி வடிவம் பெற்றிருக்கிறது. இதனால் நமக்கு டாக்ஸிக் உலகைப் புரிந்துகொள்வதிலேயே சிரமம் ஏற்படுகிறது.

சரிவான பாதையிலேயே நகரும் படம், ஒரு கட்டத்திற்குப் பிறகும் அழுத்தமான காட்சிகளைத் தேடாமல், வெற்று ஆக்ஷன் காட்சிகளே போதும் எனக் கடிவாளம் கட்டிக்கொண்டு ஓடுகிறது. இப்படித் தட்டையாக நகரும் முதல் பாதியின் முடிவுக்குப் பிறகு, இரண்டாம் பாதியில் கதையையும் வேறொரு உலகத்திற்கு நகர்த்துகிறார்கள். இது ஏனோ இன்னொரு படம் பார்த்த உணர்வையே உண்டாக்குகிறது.

Toxic Review
Toxic Review

ஆனால் அக்கதையும் எவ்வித பிடிப்பும், நம்பகத்தன்மையும் இல்லாமல் சோம்பலை மட்டுமே இலவச இணைப்பாகத் தருகிறது. இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட் மட்டும் லேசான ஆறுதல்!

மேலும், ஒரு பெண் இயக்குநரே பெண்களை வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே படம் முழுக்கப் பயன்படுத்தியிருப்பதும், அதனை நிகழ்த்தும் நாயகனுக்கு ஹீரோயிச வரவேற்பு கொடுத்திருப்பதும்தான் இப்படத்தின் உச்சபட்ச டாக்சிக் விஷயம்!

படத்தின் பெரும்பகுதியைத் தேவையில்லாத கவர்ச்சி எபிசோடுகளிலேயே நகர்த்தியிருப்பதே இதற்கு சாட்சி. இவையெல்லாம் மட்டுமே பேன் இந்தியா படத்திற்கான ஃபார்முலா கிடையாது இயக்குநரே!

மிரட்டலான மேக்கிங்கை மட்டும் கண்ணில் காட்டும் இந்த `டாக்சிக், கடைசி வரை எமோஷனைக் கண்ணில் காட்டாமல் பனிக்குள் மூடி வைத்துக்கொள்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.