உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்க... பண வரவை ஈர்க்கும் 15 எளிய வாஸ்து பரிகாரங்கள்!
நல்ல ஆரோக்கியமும் செல்வ சுபிட்சமும் நிறைந்த வீடுதான் ஆனந்தம் நிறைந்த வீடாக இருக்கும். ஆனால், சிலரது வீடுகளில்... காரணம் அறியாதமுடியாதபடி இறுக்கம் சூழ்ந்திருக்கும். நன்கு உழைத்து லாபம் ஈட்டினாலும், வீட்டில் பணம் தங்காது. சுப காரியங்களிலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்கு வாஸ்து குறைபாடுகளும் காரணமாக அமையும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்!
இன்றைக்குச் சிலரைப் பார்க்கலாம்.
‘புது வீடு போனதில் இருந்தே சிரமம்தான். எங்கப்பா படுத்துட்டார். ஒரே கஷ்டம்தான்’, ‘ச்சே! இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே கடன் தொல்லை. போன வீட்டில் இருந்தப்ப நிம்மதியா காலம் போச்சு!’, ‘எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்கவே மாட்டேங்குது. கற்பூரம் மாதிரி தேவையே இல்லாம கரைஞ்சு போகுது’ _ இப்படி எல்லாம் புலம்புவார்கள். காரணம், இவர்களது வசிப்பிடங்கள் வாஸ்து முறைப்படி அமையாமல் இருக்கலாம்.
இப்படியான நிலை மாறி வீட்டில் சந்தோஷமும் சுபிட்சமும் செல்வ கடாட்சமும் நிலைத்திருக்க; வீட்டுக்குள் பண வரவை ஈர்க்கவல்ல எளிய பரிகாரங்களை வாஸ்து சாஸ்திரம் சார்ந்த நூல்கள் விளக்குகின்றன. அவை பற்றித் தெரிந்துகொள்வோம்.

1. நல்ல வெளிச்சமும் காற்றும் நிறைந்திருக்கும் வீட்டில் நோய் பாதிப்புகள் இருக்காது. ஆகவே, ஜன்னல் கதவுகள் திறந்திருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
2. வீட்டின் தென்மேற்கு பகுதியை உயரமாகவும் வடகிழக்கு பகுதியை தாழ்வாகவும் திறந்த வெளியாக வைக்கவேண்டும். வடக்கு திசையை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும் என்பார்கள். இந்த ஈசான்ய மூலையில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைப்பது, மிகவும் நல்லது.
4. வீட்டில் பூஜையறைக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. பூஜை அறையை வடகிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். பூஜையறையில் வடக்குச் சுவரில் சாளரம் இருப்பது சிறப்பு. சிலர், அலமாரிகளிலேயே பூஜை மாடம் அமைத்திருப்பார்கள். அந்த அலமாரிகளுக்கு இரண்டு கதவுகள் அமைக்க லாம். வெளிப் புறம் திறப்பது போலவும், சிறு சிறு மணிகள் கொண்டதுமாக அந்த அலமாரிக் கதவுகளை அமைப்பதால், வீட்டில் எப்போதும் சுபிட்சம் நிறைந்திருக்கும்.

5. வலம்புரிச் சங்கு, சகலவிதமான தோஷங்களையும் போக்க வல்லது என்பார்கள். வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங் களும் அகன்று விடும் என்கின்றன ஞானநூல்கள்.
6. வாரம் இருமுறை வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவது விசேஷம். இதனால், நேர்மறை சக்திகள் வீட்டில் நிறைந்திருக்கும். சாம்பிராணியுடன் வெண் கடுகு, மருதாணி விதைகளையும் தூபம் போட்டால், வீட்டிலுள்ள வறுமை, திருஷ்டி மெல்ல நீங்கிவிடும்.
7. வெள்ளிக் கிழமைகளில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். அந்த அன்னையின் அருளால் வாஸ்து தோஷங்கள் விலகும்.
8. செவ்வாய் பகவானின் அருளாலேயே சொந்த மனை- நிலம் அமையும் என்பார்கள். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் செவ்வாயின் அகமகிழ்வார். ஆகவே, செவ்வாய்க் கிழமைகளில், செவ்வரளி சாற்றி சுப்ரமணியரை வழிபடுவது சிறப்பு.

9. வீட்டில் வடக்குத் திசையில் சிறிய பணப் பெட்டி அல்லது உண்டியலை வைப்பது சிறப்பு. இதனால் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும். வாஸ்துபடி எப்போதும் ஒருவரின் கையில் பணம் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்கவேண்டும்.
10. வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென்மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது. பீரோ வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும்.
11. பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பணப் பெட்டி என்றால், மிகவும் விசேஷம். பணம் செலவழியாமல் தேங்கும்; பெருகும். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
12. நகைகள், பணம் சேமிக்கப்படும் பாதுகாப்பு அலமாரியானது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பது விசேஷம்.
13. உங்கள் இடத்தின் தென்கிழக்கு திசையில் குறையில்லாத செப்பு ஸ்வஸ்திக்கை வைக்கவும். இது பணப்புழக்கத்தில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி நல்ல பண வரவை உறுதி செய்யும்.
14. உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், இயன்ற வரையிலும் 500 ரூபாய் நோட்டாக வையுங்கள்.
15. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். இதன் மூலம் கொடுத்த பணம் தங்குதடையின்றி மீண்டும் வரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


