காதலியின் 3,400 முத்தங்களால் விபரீதம்: வைரலான வீடியோ; காரைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்வார். இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காக, தனது சுவிஃப்ட் காரை வித்தியாசமான முறையில் மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருடைய பெண் தோழி ஒருவர் சுமார் 3,400 முறை லிப்ஸ்டிக் தடவிய உதடுகளால் காரின் வெளிப்பகுதி முழுவதும் முத்தமிட்டு அலங்​கரித்துள்ளார்.

இந்த விசித்திரமான அலங்காரத்திற்காக 3.5 மணி நேரமும், ரூ.800 முதல் 900 வரையிலான லிப்ஸ்டிக்கும் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு லிப்ஸ்டிக் முத்தங்களால் நிறைந்த காரை, நகரத்தின் முக்கியச் சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்று வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

கிஸ் கார்

இந்த "முத்தக் கார்" வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, சுமார் 55 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. ஆதித்யாவின் ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தது. இருப்பினும், இந்த வைரல் வீடியோ குவாலியர் போக்குவரத்து காவல்துறையினரின் கவனத்திற்கும் சென்றது.

படேல் நகர் - சிட்டி சென்டர் பகுதியில் அதிவேகமாகச் சென்ற காரின் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், தாதிப்பூர் பகுதியில் காரை அடையாளம் கண்டு பறிமுதல் செய்தனர்.

மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆதித்யாவுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட கார் உரிமையாளர் ஆதித்யா, தன் தவற்றை உணர்ந்து காவல் நிலைய வளாகத்திலேயே வைத்து காரில் இருந்த ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தக் குறிகளைத் தானே துடைத்துச் சுத்தப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் ட்ரெண்டைப் பின்பற்றி வைரலாக வேண்டும் என்ற ஆசையில் செய்த இந்தச் செயல், போக்குவரத்து விதியை மீறும் குற்றமாக மாறும் என்பதை அறியாமல் செய்துவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆதித்யா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார். இனி வருங்காலங்களில் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதாகவும், இதுபோன்ற ஆபத்தான அல்லது விசித்திரமான ஸ்டண்டுகளில் ஈடுபட மாட்டேன் என்றும் காவல்துறையினரிடம் உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.