தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்.!- தங்கம் தென்னரசு சொல்வதென்ன?
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் இல்லை என சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"தமிழ்நாட்டிற்கும் சென்னையினுடைய சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படையாக எதிர்கால ஆதாரமாக விளங்கக்கூடிய பரந்தூர் விமான நிலையத்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விதி எண் 55 கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் சபாநாயகரிடம் கொடுத்திருந்தோம்.
எங்களுடைய விவாதத்தைத் திட்டமிட்டு தடுத்திருக்கிறார்கள்.
இன்று அதனை எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருந்தனர். எல்லா எதிர்கட்சிகளும் பரந்தூர் விமான நிலையத்தின் அவசியத் தேவை குறித்து, பொருளாதார வளர்ச்சி குறித்து எப்படி நாம் விமானப் போக்குவரத்தில் மற்ற மாநிலங்களைவிட இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் எடுத்துரைத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது விவாதிக்க இருந்தோம்.
ஆனால் அவைக் கூடிய உடன் நம் முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். எதிர்கட்சியினர் குரலை முற்றிலுமாக நிராகரித்து இருக்கின்றனர்.
எங்களுடைய விவாதத்தைத் திட்டமிட்டு தடுத்திருக்கிறார்கள். விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என எல்லோருக்கும் தெரியும். பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கியமாக விமான நிலையம் அமைந்திருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு 3-ம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் இன்று 5-ம் இடத்திற்கு பின் தங்கி வந்திருக்கிறது. இந்தச் சூழலில் தான் நமக்கு ஒரு பசுமை வழி விமான நிலையம் வர வேண்டும் என்று நினைத்தோம். சென்னையைச் சுற்றி இன்று ஏராளமான தொழிற்சாலைகள் வந்திருக்கிறது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கக்கூடிய தொழிற்சாலைகள் மூலம் எலக்ட்ரானிக்ஸில் இன்று தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய விமான நிலையம் வரும் என்பதால் தான் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலைகளை அமைத்திருக்கிறோம்.

அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது!
இதையெல்லாம் கருத்தில்கொண்டு தான் திமுக ஆட்சியில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக நாம் 2030-க்குள் உயர்த்துவோம் என்று இலக்கை நிர்ணயித்தார்கள். அந்த இலக்கின் அடிப்படையில் தான் அதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த விமான நிலையத்திட்டத்தை அறிவித்தோம்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. இன்று அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


