இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - நீலம் பண்பாட்டு மையம்
கேளம்பாக்கம் தையூரில் 22 வயதான பிரவீன் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்ய இளைஞர்கள் பலர் ஓ.எம்.ஆர் பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு இளைஞர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இந்த ஆணவக் கொலைச் சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து நீலம் பண்பாட்டு மையம், "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அருகே தையூர் சின்னம்மா நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரவீன்குமார், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே நின்றிருந்தபோது காரில் வந்த கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர் கவுதம், தவெக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சதீஷைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள சதீஷை உடனடியாகக் கைது செய்வதுடன், இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள முழுமையான சதித்திட்டத்தையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.
கொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பிரவீன்குமார் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இக்கொலை நடைபெற்றிருப்பது ஆணவக்கொலை என்ற கோணத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரத்தில் கொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அரசியல் செல்வாக்கு, கட்சிப் பின்னணி அல்லது அதிகாரத் தொடர்பு எதுவாக இருந்தாலும் தமிழக அரசு எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தையூரில் இளைஞர் பிரவீன்குமார் ஆணவக்கொலை – நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது!
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) August 22, 2026
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அருகே தையூர் சின்னம்மா நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரவீன்குமார், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு வீட்டின் அருகே (1/ pic.twitter.com/HEOfuinT7e
ஆணவக்கொலைகள் வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலும், ஒரே சாதிக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை உணர்ந்துதான் ஆணவக்கொலைகளைத் தடுக்கவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுகிறது.
இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


