ஒரே பெண்ணுக்கு இருவர் போட்டி: நடுத்தெருவில் மோதிக்கொண்டதில் ஜாமீனில் வந்த ரெளடி குத்திக்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த கௌரவ் பங்கஜ் ரக்டே என்ற ரெளடியை கௌரவ் ரம்பாவ் ராவுட் என்ற ரவுடி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடுரோட்டில் குத்திக்கொலை செய்துள்ளார்.
நாக்பூரின் மிகவும் பரபரப்பான காம்ச்சு (Gamchu) கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கெளரவ் பங்கஜ் மீது, கொள்ளை, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் ஒன்பது வழக்குகள் உள்ளன. இதே போன்று கெளரவ் ரம்பாவ் மீது பல கொலை வழக்குகள் இருக்கிறது.
கெளரவ் பங்கஜ் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்தார். கெளரவ் பங்கஜ் வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற நேரத்தில் ராணியுடன் கெளரவ் ரம்பாவிற்கு அறிமுகம் ஏற்பட்டது.
காதலனை மாற்றிய காதலி
அந்த அறிமுகம் நாளவடைவில் காதலாக மாறியது. ராணி கிரிமினல் வாழ்க்கையில் இருந்து விலகி வாழ வேண்டும் என்று விரும்பினார். எனவே கெளரவ் ரம்பாவுடன் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். சமீபத்தில் ஜாமீனில் வந்த கெளரவ் பங்கஜ் அவர்களின் நட்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் கோபம் அடைந்தார்.
ராணியும், கெளரவ் ரம்பாவ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பார்ட்டி நடத்துவதாக கெளரவ் பங்கஜிற்கு தகவல் கிடைத்தது.
உடனே பார்ட்டி நடந்த இடத்திற்கு பங்கஜ் வந்தார். அவர் வீட்டிற்கு வெளியில் இருந்து கொண்டு ராணி இருந்த வீட்டின் மீது கற்களை வீசி எறிந்தார். குடிபோதையில் கெளரவ் பங்கஜ் ராணியையும், அவருடன் இருந்தவர்களையும் கடுமையாக திட்டினார். அதோடு வீட்டு ஜன்னல் கண்ணாடியையும் உடைத்தார். இதனால் கெளரவ் ரம்பாவும், அவனது கூட்டாளிகளும் வீட்டின் பின்புறம் வழியாக தப்பித்து ஓடினர். அவர்களை கெளரவ் பங்கஜ் விரட்டிச்சென்றார்.
இரு தரப்பினரும் நரேந்திரா நகர் பகுதியில் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் கெளரவ் ரம்பாவும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து கெளரவ் பங்கஜை அடித்து கீழே தள்ளினர். அதோடு பங்கஜிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரையே திரும்ப குத்தினர். பங்கஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களின் சண்டையை சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டனர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து கெளரவ் பங்கஜை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். போலீஸார் கெளரவ் ரம்பாவை விரட்டிச்சென்று கைது செய்து குத்துவதற்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


