உடைந்த கண்ணாடிக்குஅ இவ்வளவு மதிப்பா? 100+ ஓவியங்கள்... பொள்ளாச்சி நண்பர்களின் வித்தியாசமான பிசினஸ்!

கண்ணாடி உடைஞ்சா அதைத் தூக்கிப் போடுவோம்... ஆனா, அதையே கலையாக மாற்றினால்? பொதுவாக உடைந்த கண்ணாடி என்றாலே அது தேவையில்லாத பொருளாகத்தான் பார்க்கப்படும். ஆனால், அந்த உடைந்த கண்ணாடியையே ஒரு கலைப்படைப்பாக மாற்றி வருகிறார்கள் பொள்ளாச்சியை சேர்ந்த இரு நண்பர்கள் பாலமுருகன் மற்றும் சந்தோஷ் குமார்.

நட்பில் தொடங்கி, கலையில் இணைந்த பயணம்.!

ஒரு வருடம் கற்றுக்கொண்ட திறனை வைத்து, இன்று 100-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஓவியங்களை உருவாக்கி வருகிறார்கள்.

இருவரும் முன்பு வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தபோதுதான் நண்பர்களாகியிருக்கிறார்கள். பின்னர், தங்களுக்குத் தெரிந்த ஓவியத் திறனை வைத்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்திருக்கிறது.

“நாங்க ஆரம்பத்துல பென்சில் ஆர்ட் பண்ணிட்டு இருந்தோம். அதிலேயே கிடைத்த அனுபவத்தோடு, புதுசா ஏதாவது ஸ்டார்ட் பண்ணலாம் என்று நினைச்சோம். அப்படித்தான் இமைக்கா என்ற பெயரில் ஆர்ட் ஸ்டூடியோவைத் தொடங்கினோம்.”

வீட்டிலிருந்து தொடங்கிய வேலை... ஸ்டூடியோவாக மாறிய பயணம்!

ஆரம்பத்தில் இவர்களது வேலை வீட்டிலிருந்தே நடந்திருக்கிறது. கமிஷன் அடிப்படையில் ஆர்டர்களை எடுத்து செய்து வந்துள்ளனர். அந்தப் பணியில் கிடைத்த அனுபவமும், தங்களுடைய ஓவியத் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, அடுத்தகட்டமாக சொந்தமாக ஒரு ஆர்ட் ஸ்டூடியோ தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.

பாலமுருகன்

ஸ்டூடியோவுக்கு மாத செலவு தனியாக சமாளிப்பதைவிட இருவரும் இணைந்து செய்யலாம் என்று முடிவு செய்து. ஆளுக்கு பாதி என வாடகையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முதலீடு பெரிதில்லை... திறமைதான் முக்கியம்!

இந்தத் தொழிலில் அதிக முதலீடு தேவையில்லை என்பதுதான் இவர்களின் முக்கியமான கருத்து. கண்ணாடி ஆர்ட்டைப் பொறுத்தவரை முதலீட்டைவிட, அதைச் செய்யத் தெரிந்த திறமைதான் முக்கியம் என்கிறார்கள். “இந்த கிளாஸ் பிரேக் ஆர்ட்டுக்கு பெருசா முதலீடு தேவையில்லை. இது முழுக்க நம்ம கைத்திறனைப் பொறுத்ததுதான்.” ஒரு ஓவியத்துக்கு கிடைக்கும் விலை, அதில் செலுத்தப்படும் நேரம் மற்றும் நம் கைத்திறன் பொருத்துதான் இருக்கும்.

“கையில் கலை இருந்தால், கண்ணாடியும் ஓவியம்தான்!”

ஒரு கண்ணாடியின் விலை சுமார் ₹500. ஆனால், ஒரு படைப்பை முடிக்க ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒரு ஆர்டருக்கு சுமார் ₹2,000 வரை வருமானம் கிடைக்கிறது. மாதத்துக்கு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வருமானம் மாறுபட்டாலும், சராசரியாக ₹20,000 வரை வருமானம் கிடைக்கிறது.

முகப் படங்கள் முதல் தெய்வ உருவங்கள் வரை!

திருமணப் பரிசாக தம்பதிகளின் புகைப்படத்தை வைத்து கண்ணாடி ஆர்ட் செய்து கொடுப்பது முதல் அரசியல் பிரமுகர்களுக்கான பரிசுகள் வரை பல ஆர்டர்களும் வருகின்றன. Instagram மூலமாகவும் தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

ஒருவரின் முகப் படங்களை மட்டும் செய்வது மட்டுமல்லாமல், விநாயகர், முருகர், வேல், மயில் போன்ற பல்வேறு வடிவங்களிலும் ஆர்டர்கள் வருகிறது.

ஒரு வருடம் கற்றுக்கொண்டு... பிசினஸுக்குள்!

இந்தக் கலையைப் பொறுத்தவரை, சுமார் ஒரு வருடம் கற்றுக்கொண்ட பிறகே தொழிலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக தனியாக எங்கும் சென்று பயிற்சி பெறாமல், தாங்களாகவே கற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

கண்ணாடியில் எந்த இடத்தில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கலையின் முக்கியமான நுட்பம். அதிகமாகத் தட்டினால் அந்தப் பகுதி ஆழமாகவும், லேசாகத் தட்டினால் குறைவாகவும் தெரியும். ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் அதைத் திருத்த முடியாது; அந்தக் கண்ணாடியே வீணாகிவிடும்.

“எதையுமே முழுசா கத்துக்காம அதை பிசினஸுக்குள்ள கொண்டு வர முடியாது. பென்சில் ஷேடிங் பண்ணிட்டு இருந்தபோதும் இந்த மாதிரி விஷயங்களை நாங்களே கத்துக்கிட்டோம்”

தற்போது பொள்ளாச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் வருவதோடு, வெளிப்பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறார்கள். கண்ணாடி என்பதால் போக்குவரத்தில் உடையும் வாய்ப்பு இருப்பதால், ஆரம்பத்தில் சில பொருள்கள் உடைந்ததாகவும், தற்போது பாதுகாப்பாக அனுப்புவதற்கான முறைகளைப் பின்பற்றுவதாகவும் சொல்கிறார்கள். கலைக்கு முதலீடு பணம் மட்டுமல்ல... திறமையும், அதைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் முயற்சியும் ஒரு முதலீடுதான் என்பதைக் காட்டுகிறது இந்த இரு நண்பர்களின் பயணம்.

கண்ணாடி ஓவியத்தோடும்... பல கலைகளுடனும் பயணம்!

கண்ணாடி ஓவியத்துடன் மட்டும் நின்றுவிடாமல், பென்சில் ஆர்ட் (pencil art), சார்கோல் (charcoal), வாட்டர் கலர்(water colour), வுட் பர்னிங் (wood burning), ரெசின் ஆர்ட்(Resin art) உள்ளிட்ட பல்வேறு கலைப் படைப்புகளையும் செய்து வருகின்றனர். வெவ்வேறு வகையான கலைப் பணிகளைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு, தங்களுடைய கலைத் திறனை பல்வேறு தளங்களில் விரிவுபடுத்தி வருகின்றனர்.

“ஒரு குறிப்பிட்ட திறமையை மட்டும் வைத்துக்கொண்டு நின்றுவிடாமல், காலத்துக்கு ஏற்ப நம்மை நாமே வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்பதுதான் இவர்களின் தொழில் பயணம் சொல்லும் பாடம்.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.