Nagarjuna: மணிரத்னம் படத்தில் நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு - சொல்கிறார் நாகர்ஜூனா
நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தது தனது திரையுலகப் பயணத்திலேயே மிகவும் துணிச்சலான முடிவு என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், தனது மகன்களான நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் வழக்கமான கதைகளைத் தேர்ந்தெடுக்காமல், இதுபோன்ற துணிச்சலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய மூவரும் இணைந்து வெரைட்டி இதழுக்குப் பேட்டியளித்திருந்தனர். இதில் நாகார்ஜுனா பேசுகையில், "மணிரத்னம் சாருடன் கீதாஞ்சலி படத்தில் நடித்தது அந்த நேரத்தில் நான் எடுத்த மிகப்பெரிய துணிச்சலான முடிவு.
எனக்கு முன்பு முன்னணி நடிகர்கள் பலர் அந்தப் படத்தில் நடிக்கத் தயங்கிய நிலையில், நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
என் திரை வாழ்க்கையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக்கொள்ள கீதாஞ்சலி படம் எனக்கு மிகவும் உதவியது.
என் மகன்கள் நாக சைதன்யாவும் அகில் அக்கினேனியும் ஒரே மாதிரியான வழக்கமான கதைகளில் நடிக்காமல், இதுபோன்று துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் நடிகர்கள் அப்படித் துணிச்சலான முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.

1990-களில் சில படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்களுக்கு மீண்டு வர வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இப்போது திரையுலகம் அதிவேகமாக இயங்குகிறது. ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட விருப்பங்கள் இருக்கின்றன. இதனால் பெரிய ரிஸ்க் எடுப்பது சவாலாக மாறியிருக்கிறது. இருந்தாலும், துணிச்சலான முடிவுகள்தான் ஒரு நடிகனுக்குச் சரியான அடையாளத்தைத் தரும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1989-ல் வெளியான ‘கீதாஞ்சலி’ திரைப்படம் இந்த மாதம் ஆகஸ்ட் 28 அன்று ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


