``மோடியை விடவும் கொடுமையான செயலை ராகுல் செய்கிறார் எனும்போது.! - திமுக இரா.ராஜீவ்காந்தி பேட்டி

த.வெ.க அரசு அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து, கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி என கடுமையாக விமர்சித்தது தி.மு.க.

தொடர்ந்து வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க என அடுத்தடுத்த கட்சிகளும் த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்க... தமிழக அரசியல் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளது தி.மு.க.!

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றிருப்பது தமிழக அரசியலில், பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர தி.மு.க தயாராகிவிட்டது என த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்தச் சூழலில், தி.மு.க கொள்கைபரப்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இரா.ராஜீவ்காந்தியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

"ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில், தி.மு.க-வின் நிலைப்பாடு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறதே?"

"புதிய தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன்பாக குரல் கொடுத்த கட்சி தி.மு.க. இன்றைய முதல் அமைச்சர் விஜய், அன்றைக்கு இந்த சட்டத் திருத்தம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 2026 தேர்தலுக்கு முன்பாகக்கூட, இது ஒரு கற்பனை... மக்கள் பிரச்னையல்ல என்று கூறி அவரது அரசியல் அறியாமையைத்தான் வெளிப்படுத்தினார்.

மு.க.ஸ்டாலின்

இந்த சூழலில், ஒப்பந்தப்படி காவிரி நீர் வராமல், தமிழகம் காய்ந்துகிடக்கும் வேளையில், பிரச்னையை திசை திருப்பும் நோக்கத்துடன் எட்டப்பன் காங்கிரஸ் கட்சி ஆலோசனையின் பேரில் அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தை கூட்டியது த.வெ.க அரசு. இந்த அரசியல் சதி தெரிந்துதான் தி.மு.க எம்.பி-க்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேசமயம், புதிய மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, மக்கள் பிரச்னை என்ற அடிப்படையில் தீர்மானத்துக்கு ஆதரவளித்தோம்."

"ஆனால், புதிய மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு தி.மு.க ஆதரவளித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து த.வெ.க வலையில் சிக்கிவிட்டது தி.மு.க என்கிறாரே?"

"டாக்டர் கிருஷ்ணசாமி அவருடைய சந்தேகத்தை கூறியிருக்கிறார். 7.18 என்ற விகிதாசாரத்திலான நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும்; எந்தச் சூழலிலும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டில் தி.மு.க எப்போதுமே உறுதியாக இருக்கிறது!"

"காங்கிரஸ் கட்சியை எட்டப்பர் கட்சி என்று கடுமையாக விமர்சிக்கக் காரணம் என்ன?"

"கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எட்டப்பன் வேலையைப் பார்த்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், தேர்தலுக்குப் பிறகு எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார் ராகுல்காந்தி. உண்மையான எட்டப்பன் காங்கிரஸ்தான். எங்கள் கூடவே இருந்து கூட்டணியை சந்தேகத்துக்குள்ளான கூட்டணியாக்கி, நாங்கள் வெற்றி பெறுகிற தொகுதிகளை எல்லாம் கேட்டு வாங்கி, கடைசியில் எங்களைத் தோற்கடிக்க வைத்துள்ளது.

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

கொள்கைக் கூட்டணி என்று இவ்வளவு குழப்பத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி. இவர்களாலேயே கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கும் போதிய இடங்களைக் கொடுக்கமுடியாமல், வருத்தம் நேரிட்டது. இதற்கெல்லாம் காரணம் ராகுல்காந்தி மற்றும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற புதிய புரட்சியாளர்களின் அணுகுமுறைகள்தான். இந்த எட்டப்பர்களோடு வாழ்நாளில் இனி நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம்!"

"கடந்த கால தேர்தல் தோல்வியின்போதும், கூடா நட்பு கேடாய் முடியும் எனக்கூறிய தி.மு.க., மீண்டும் காங்கிரஸுடன் கைகோத்துக்கொண்டதுதானே?"

"2014-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் பா.ஜ.க-வின் மோடி. ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த வாஜ்பாயிடம் தமிழர் விரோத போக்கு இல்லை. ஆனால், இனப்படுகொலை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது, இந்தித் திணிப்பு, பொது சிவில் சட்டம் என மோடியின் ஆட்சியில் பா.ஜ.க-வின் அஜென்டாக்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகினறன என்கிறபோது, தேசிய அளவில் அதை எதிர்ப்பதற்கு மீண்டும் காங்கிரஸோடு கூட்டணி சேரவேண்டிய நிலை தி.மு.க-வுக்கு ஏற்பட்டதுதான். மோடியை எதிர்க்க உற்ற தோழனாக இருப்பார்கள் என காலத்தின் தேவையைக் கருதியே நம்பி கூட்டணி வைத்தோம்."

இரா.ராஜீவ்காந்தி
"தொடர்ந்து 3 முறையாக ஆட்சியில் வீரியத்துடன் அமர்ந்திருக்கும் பா.ஜ.க-வை எதிர்க்க, இப்போதும் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி தி.மு.க-வுக்கு தேவைப்படும்தானே?"

" ஆனால், மோடியை விடவும் கொடுமையான செயலை ராகுல்காந்தி செய்கிறார் எனும்போது, காங்கிரஸோடு எங்களுக்கு இனி ஒருபோதும் கூட்டணியில்லை என்கிற முடிவுக்கு வருகிறோம்.

ஃபாசிஸ்ட் மோடியை வீழ்த்துவதற்கு ராகுல்காந்தி சரியான தேர்வாக இருப்பார் என்று கருதித்தான், காங்கிரஸ் அறிவிக்கும் முன்பே அவரை பிரதம வேட்பாளராக தி.மு.க அறிவித்தது. ஆனால், இப்போதுதான் தெரிகிறது... முன்பு ஃபாசிஸ்ட் மோடி மட்டும்தான் இருந்தார். இப்போது எட்டப்பராக ராகுல்காந்தியும் இருப்பதால், இவர்களிருவருமே எங்களுக்கு ஒன்றுதான். காங்கிரஸ், பா.ஜ.க என இவர்களிருவருமே திராவிட இனங்களுக்கு எதிரானவர்கள்தான் என பெரியாரும் அண்ணாவும் ஏற்கெனவே எங்களுக்கு ஊட்டி வளர்த்த உணர்வுதான்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

காலவோட்டத்தில், பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான ஓர் இடைக்கால ஏற்பாடாக காங்கிரஸை நம்பி வந்தோம். ஆனால், காங்கிரஸ் இன்னும் திருந்தவில்லை. கூடயிருந்தே கழுத்தறுக்கிறவர்கள்தான் என்பதை கடந்த தேர்தல் முடிவிலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே இனி இவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற தெளிவும் எங்களுக்கு வந்துவிட்டது. திராவிட இனம் என்ற எங்கள் சித்தாந்தத்துக்கு உட்பட்டு எங்கள் மொழியையும் உரிமையையும் பாதுகாப்பதற்காக, இனி நாங்கள் தனித்தே போராடுவோம்; பா.ஜ.க., காங்கிரஸோடு கூட்டணியில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்."

"புதிய மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் வரும்போது, தி.மு.க வெளிநடப்பு செய்துவிடும் என்கிறார்களே... இல்லையென்று மறுக்க முடியுமா?"

"இரண்டு வருடங்களுக்கு முன்பு தொகுதி மறுவரையறை திருத்தம் குறித்து பா.ஜ.க பேச ஆரம்பித்தபோதே, இது தென்மாநிலங்களுக்கு எதிரான ஒன்று; இந்தி பேசாத மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் என்ற உண்மையை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எடுத்துரைத்தோம். மேலும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்து தோற்கடித்தோம்.

1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை கருத்தில்கொள்ளாமல், மகளிர் இட ஒதுக்கீட்டையும் உள்ளடக்கி, நம்முடைய 7.18 என்ற நியாயமான விகிதாச்சாரத்தை மீறி புதிய மசோதா தாக்கல் செய்யப்படுமானல், கடந்த முறையைப் போலவே தி.மு.க நிச்சயம் எதிர்த்து ஓட்டு போடும். ஏனெனில் எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே வெளிநடப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை!"

" தி.மு.க தலைவர்களை ஊழல் வழக்குகளிலிருந்து தப்புவதற்காக பா.ஜ.க-வுடன் அக்கட்சி கூட்டணி சேர தயாராகிவிட்டது; பா.ஜ.க-வின் கொத்தடிமையாக மாறிவிட்டது தி.மு.க என்றெல்லாம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாரே த.வெ.க அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்?"

" ‘கோ பேக் மோடி’, ‘பா.ஜ.க சனாதனிகள்’, ‘பா.ஜ.க மதப் பிரச்னை உண்டு செய்கிற கட்சி’, ‘பா.ஜ.க ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற பெயரில் இந்தியைத் திணிக்கிற கட்சி’, ‘ஒரே மதம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பை உமிழ்கிற கட்சி பா.ஜ.க’, ‘ஒரே உணவு, ஒரே உடை எனக்கூறி மாட்டுக்கறி உண்பவர்களையும் ஹிஜாப் அணிகிறவர்களையும் அடித்து விரட்டுகிற கட்சி பா.ஜ.க என்ற கருத்துவாக்கம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. காரணம்... சமூக நீதியை வலியுறுத்துகிற தி.மு.க-வின் வீரியமான பரப்புரை.

சிடிஆர் நிர்மல்குமார்
சிடிஆர் நிர்மல்குமார்

அதனால்தான் பா.ஜ.க-வினால் தமிழ்நாட்டுக்குள் அரசியல் செய்யவே முடியவில்லை. ஆக, இந்த அடிப்படையைத் தகர்க்கவேண்டிய கட்டாயம் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. எனவே, தங்களை எதிர்க்காத ஒரு சாஃப்ட் அரசை, தங்களது சீக்ரெட் ஏஜென்ட்டாக விஜயை தமிழ்நாட்டுக்குள் வளர்த்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதனால்தான் பா.ஜ.க ஆட்சி செய்கிற மாநிலங்களில்கூட தலையிடுகிற ஆளுநர், தமிழ்நாட்டில் மட்டும் எந்தவித இடையூறும் செய்யமாட்டார். பதிலுக்கு த.வெ.க அரசும் ஒன்றிய பா.ஜ.க-வுக்கு விசுவாசமாக எந்தவித எதிர்ப்பையும் மக்கள் மன்றத்தில் முன்வைக்காமல், பம்மிக்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு முறைகேடுக்கு எதிரான போராட்டத்தைக் கண்டிக்கிறபோதுகூட முதல்வர் விஜய், மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான மோதலைத் தவிர்த்திருக்கலாம் என்றுதான் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர... நேரடியாக ஒன்றிய அரசைக் கண்டிக்கப் பயப்படுகிறார்.

இரா.ராஜீவ்காந்தி

மத ரீதியிலான வெறுப்பை உமிழும் வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கக்கோரி ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவை, காங்கிரஸைவிடவும் கடுமையாக எதிர்த்தது தி.மு.க. ஆனால், இந்த விவகாரத்தில் த.வெ.க-வின் கருத்து என்ன என்பது குறித்து முதல்வர் விஜய் வாய் திறந்து பேசியிருக்கிறாரா? அப்படியென்றால், பா.ஜ.க-வுடன் மறைமுக கூட்டணியில் இருப்பது யார்? இதுகுறித்தெல்லாம் யாரும் த.வெ.க-வை நோக்கி கேள்வி எழுப்புவதில்லையே... ஏன்?

இந்த பின்னணி உண்மைகளையெல்லாம் மறைப்பதற்கான உத்தியாகத்தான், தி.மு.க-வை பா.ஜ.க-வின் அடிமை எனக்கூறி திசை திருப்புகிறார்கள் த.வெ.க-வினர்!"

"அப்படியென்றால், விரைவில் திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆவார் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு என்ன விளக்கம் சொல்வீர்கள்?"

"மேடைப் பேச்சுகளில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும். அந்த வகையில், அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவருடைய விருப்பத்தை அவரது ஸ்டைலில் பேசியிருக்கிறார். அது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீண்டும் சொல்கிறேன்... எட்டப்பன் காங்கிரஸோடு வாழ்நாளில் இனிமேல் நாங்கள் கூட்டணி இல்லை. ஆனால் அதைவிடத் தெளிவாக இருக்கிறோம். பாஜக என்கிற சனாதனிகளோடு எங்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.