மேகதாது: நதிநீர் பங்கீடு அல்ல, நதிநீர் ஒத்துழைப்பு... நாம் நகர வேண்டிய நேரம்! - டி.கே.எஸ் பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த தென் மண்டல கவுன்ஸிலின் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார்.

தவிர தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார், "நான் கர்நாடகாவிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்காகவும் பேசுகிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதை தெற்கின் வழியாகவே செல்கிறது.

டி.கே சிவகுமார்- விஜய்

நமது ஐந்து மாநிலங்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் ஜிடிபி-யில் (GDP) கிட்டத்தட்ட 33 சதவீதப் பங்களிப்பை அளிக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு மூன்று ரூபாயிலும் ஒரு ரூபாய் தெற்கிலிருந்தே வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் இந்த இயந்திரத்திற்குள், கர்நாடகா மிகவும் வலிமையான உந்து சக்திகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒன்றிய அரசிடம் நாங்கள் கேட்பதெல்லாம் இதுதான் நாங்கள் வழங்கும் பங்களிப்பிற்கு ஏற்ப எங்கள் மீதும் அக்கறை காட்டுங்கள்.

இந்த அறையில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தண்ணீரை விட முக்கியமான வேறு எந்த வளமும் இல்லை. நமது நதிகள் அரசியல் எல்லைகளை அறிவதில்லை. காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணையாறு மற்றும் பாலாறு ஆகியவை தென்னக தீபகற்பத்தின் வாழ்வாதாரங்களாகும். நீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது.

நதிநீர் பங்கீடு என்பதில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நாம் நகர வேண்டிய நேரம் இது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கின்றன. நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.

முதல்வர்கள் டி.கே. சிவக்குமார் - விஜய்
முதல்வர்கள் டி.கே. சிவக்குமார் - விஜய்

ஒவ்வொரு நதிக்கரை மாநிலத்திற்கும் நியாயமான தேவைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நமது நிலைப்பாடு மூன்று கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. சமத்துவம், வெளிப்படைத்தன்மை, கூட்டுறவு. ஆனால் கூட்டுறவு என்பது இருவழியிலும் இருக்க வேண்டும். கர்நாடகா எப்போதும் தனது அண்டை மாநிலங்களின் உரிமைகளை மதித்து வருகிறது.

கிருஷ்ணா, மேல் பத்ரா மற்றும் நமது நதிகள் இணைப்பு குறித்த கர்நாடகாவின் குறிப்பிட்ட நிலைப்பாட்டைத் தொடரும் விவாதத்தின் போது இந்த மண்டலக் குழுவின் முன் வைப்பேன்.

தெற்கு வலுவாக இருக்கும்போது, இந்தியா மேலும் வலுவடைகிறது. எங்களோடு சேர்ந்து நடங்கள், எங்களுக்கு நியாயமான முறையில் நிதியளியுங்கள், தெற்கிற்கான உரிமையை வழங்குங்கள். நாங்கள் இந்தியாவிற்குப் பிரகாசமான எதிர்காலத்தைத் தொடர்ந்து வழங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் கர்நாடகா!" என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் கர்நாடக முதல்வர் மேகதாது அணை குறித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.