ஆனந்த விகடன் இதழில் தொடங்குகிறது, நரன் எழுதும் ஆயிரம் சூரியன்கள் வரலாற்றுப் புனைவுத் தொடர்!
13ம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டிய வணிகர்களுக்கிடையே கடலின் நறுமணப் பாதையை யார் ஆள்வது என்ற போட்டி நடக்கிறது. அதுவரை சோழ வணிகர்கள்தான் கிழக்கின் கடலையும், மேற்கின் கடலையும் தங்கள் நாவாய்களால் கட்டி ஆண்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் 1216-ல் நடந்த தஞ்சைப் போரில் இருபத்தி இரண்டு வயதான மாறவர்ம சுந்தரபாண்டியன், ஐம்பத்தி ஏழு வயதான மூன்றாம் குலோத்துங்கனை தோற்கடித்த பின், ராஜராஜன் காலம் முதல் சோழ மன்னர்களின் தலையில் பெருமையுடன் ஏறியிருந்த மும்முடிச்சோழன் பட்டம் இறங்கியது.
இந்தப் போருக்குப் பின் தலைகீழாக மாறத் தொடங்கியது நாட்டின் வரலாறு மட்டுமல்ல. கடலின் வரலாறும் தான். நாட்டை வேண்டுமானால் மன்னன் ஆளலாம். ஆனால் கடலை ஆள்வது வணிகர்கள் தான். பல நூற்றாண்டுகளாக உலகின் எல்லா திசையிலிருந்தும் ஆயிரக்கணக்கானக் கப்பல்கள் கடலில் இறங்க காரணமாயிருந்தது மிளகு தான். மிளகின் கார சுவையும், அதன் மருத்துவ காரணங்களும் ஆயிரக்கணக்கான கப்பல்களை தென்னிந்தியாவை நோக்கி அழைத்து வந்தது.
மிளகில் காரமும் , சுவையும், தரமும் மிகுந்த முதல் தரமானது கரிமுண்டா என்று அழைக்கப்படும் மிளகு தான். கரிமுண்டா எப்போதும் எல்லோருக்கும் விற்கப்படுவதில்லை. உலகின் பெரிய பெரிய அரச குடும்பங்களின் சமையலறைகளிலும், விருந்து மேசைகளிலும் மட்டுமே அதைப் பார்க்க முடியும். கரிமுண்டா மிளகு, சேரநாட்டின் மலபார் மலைக் காடுகளின் உச்சந்தலையில் சன்னமாய் இயற்கையாய் விளைகிறது. பன்னிரண்டு முழம் நீளத்திற்கு குறைவில்லாத கொத்து கொத்தான ராஜ நாகங்கள் இந்த கரிமுண்டா மிளகுக் காட்டை பாதுகாக்கின்றன. என்னதான் அது சேர நாட்டின் காட்டில் விளைந்தாலும் இந்த கரிமுண்டா மிளகின் உரிமை மட்டும் சோழர்களுக்கு தான்.

இந்த வணிகப் பாதையை கட்டுப்படுத்துவதற்கு சேர, சோழ, பாண்டிய வணிகக் குழுவிற்கு நடுவே போட்டிகளும், சண்டைகளும், துரோகங்களும், மரண விளையாட்டுகளும் நிறைய நடக்கின்றன. மீண்டும் சோழ வணிகர்கள் எப்படி அவர்களிடமிருந்து கடலின் வணிக ராஜ்ஜியத்தை கைப்பற்றினார்கள் என்பதே ஆயிரம் சூரியன்கள் வரலாற்றுப் புனைவின் களம்.
இந்தப் புனைவை மிகப்பெரும் காட்சிச் சித்திரிப்புகளுடன் உயிரோட்டமாகப் படைத்தளிக்கும் நரன், விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2016 - ம் ஆண்டு விகடனின் இலக்கிய அடையாளமான விகடன் தடம் இதழில் அவரின் முதல் சிறுகதையான பெண்காது பிரசுரமானது. இதுவரை நான்கு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினான்கு இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.

விகடனில் இதுவரை ஏழுகடல் ஏழுமலை, வேட்டை நாய்கள் ஆகிய இரண்டு சிறந்த தொடர் கதைகளை எழுதியுள்ளார். காட்சி ஊடகங்களில் பரணியாற்றியுள்ள நரன், தற்போது Type Writer என்ற Script நிறுவனத்தை நடத்தி வருகிறார். .
தமிழ் வரலாற்றில் இழையெடுத்து உணர்வும் உயிர்ப்புமாக உருவாகியிருக்கும் ஆயிரம் சூரியன்கள் வரலாற்றுத் தொடரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆனந்த விகடனில் வாசிக்கத் தவறாதீர்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


