BWF: உலக சாம்பியனையே வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி; முதல் நாளிலேயே 5-க்கு 5; இந்தியாவின் மிரட்டல் தொடக்கம்!
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 2026 BWF உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றான ‘ரவுண்ட் ஆஃப் 64’ போட்டியில், உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான சீனாவின் ஷி யூ கியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஆயுஷ் ஷெட்டிக்கு, இந்தப் போட்டி உலக சாம்பியன்ஷிப்பில் முதல் போட்டியாகும். மறுபுறம், எதிராளியான ஷி யூ கி உலகின் முதல் நிலை வீரர் மட்டுமல்ல... கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற நடப்பு சாம்பியனும்கூட.
இதற்கு முன்பு இருவரும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். அந்த மூன்று போட்டிகளிலும் ஷி யூ கியே வெற்றி பெற்றிருந்தார். குறிப்பாக, ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெறும் 42 நிமிடங்களில் ஆயுஷ் தோல்வியடைந்திருந்தார்.
ஆனால், இந்த முறை களம் வேறு... ஆட்டமும் வேறு!
முதல் ஆட்டத்தில் இருந்தே தனது அதிரடியான ஸ்மாஷ்கள் மூலம் ஷி யூ கிக்கு நெருக்கடி கொடுத்தார் ஆயுஷ். அதன் பலனாக முதல் ஆட்டத்தை 21-14 எனக் கைப்பற்றினார்.
இரண்டாவது ஆட்டத்தில் ஷி யூ கி தனது அனுபவத்தைக் காட்டினார். ஆயுஷின் அதிரடிக்குப் பதிலடி கொடுத்து 21-13 என அந்த ஆட்டத்தை வென்றார். இதனால் போட்டி வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டத்துக்குச் சென்றது.
மூன்றாவது ஆட்டத்தில் ஆயுஷ் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் 11-5, பின்னர் 16-5 என முன்னிலை பெற்றார். ஆனால், அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை ஷி யூ கி.
அடுத்த 12 புள்ளிகளில் 10 புள்ளிகளை வென்ற சீன வீரர், ஆயுஷின் முன்னிலையை வெறும் மூன்று புள்ளிகளாகக் குறைத்தார்.
மைதானத்தில் பதற்றம் அதிகரித்தது.
அந்த நேரத்தில் மன உறுதியை இழக்காமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடினார் ஆயுஷ். இறுதியில் மூன்றாவது ஆட்டத்தையும் 21-19 எனக் கைப்பற்றினார்.
இதன்மூலம் 21-14, 13-21, 21-19 என்ற கணக்கில் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான ஷி யூ கியை வீழ்த்தி, உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ஆயுஷ் ஷெட்டி. இந்தப் பரபரப்பான போட்டி மொத்தம் 73 நிமிடங்கள் நீடித்தது.
Ayush Shetty puts defending champion Shi Yu Qi to the test.#BWFWorldChampionships #NewDelhi2026 pic.twitter.com/ttifOXP2om
— BWF (@bwfmedia) August 17, 2026
வெற்றிக்குப் பிறகு பேசிய ஆயுஷ்,
ஷி யூ கி மீண்டும் போட்டிக்குள் வந்தபோது தனக்கு பதற்றம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சிந்துவும் வெற்றி... இந்தியாவுக்கு 5-க்கு 5!
ஆயுஷ் ஷெட்டி உலக சாம்பியனையே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், முதல் நாளில் களமிறங்கிய மற்ற இந்திய வீரர்களும் தோல்வியின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்து, சோஃபியா நோபிளை 21-7, 21-11 என்ற நேர் ஆட்டங்களில் வெறும் 29 நிமிடங்களில் வீழ்த்தினார்.
மேலும், ஹரிஹரன் அம்சகருணன் – எம்.ஆர். அர்ஜுன், த்ரீசா ஜாலி – காயத்ரி புல்லேலா கோபிசந்த், கவிப்ரியா செல்வம் – சிம்ரன் சிங்கி ஆகிய இந்திய இரட்டையர் ஜோடிகளும் தங்களது முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதன்மூலம் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவுக்குக் கிடைத்த ஐந்து வாய்ப்புகளிலும் ஐந்து வெற்றிகள் கிடைத்துள்ளன.
ஒருபக்கம் சிந்து உள்ளிட்ட வீரர்கள் வெற்றியுடன் பயணத்தைத் தொடங்க... மறுபக்கம் உலகின் முதல் நிலை வீரரையே வீழ்த்தி உலக பேட்மிண்டன் அரங்கில் தனது மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார் ஆயுஷ் ஷெட்டி!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


