குமரி: போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டிப்பு? 3வது ​மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கூதானி பகுதியைச் சேர்ந்த அன்ஸிஜி (21) கல்லூரியில் செல்போன் பயன்படுத்தியதாகவும், அதை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவி அன்ஸிஜி கல்லூரி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை கல்லூரியைச் சேர்ந்தவர்கள் கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.​மாணவிக்கு கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு இருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி தனியார் ஆஸ்பத்திரியில் கூறியுள்ளனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவியை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தது. அங்கு மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்தார்.

நர்சிங் மாணவர்கள் போராட்டம்

இந்நிலையில் நர்சிங் மாணவியின் தாய் சோனியா (41) கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவான அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவிகள் உள்ளிட்டோர் இன்று போராட்டம் நடத்தினர்.

கேரள அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநரான அனில் ராஜ் மற்றும் தனியார் வங்கி ஊழியரான சோனியா தம்பதியின் மூத்த மகளான அன்ஸிஜி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று நர்சிங் கல்லூரியில் சேர்ந்த இவர், பல்கலைக்கழகத் தேர்விலும் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். எனவே மாணவியின் மரணத்துக்கு கல்லூரி நிர்வாகத்தின் டார்ச்சரே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்லூரி முதக்வர் ஷீஜா
கல்லூரி முதக்வர் ஷீஜா

இதுகுறித்து அன்ஸிஜியின் உறவினர்கள் கூறுகையில், "​உணவு சரியில்லை என்பதற்காகப் போராட்டம் நடத்தியதாகக் கூறி, மாணவி அன்ஸிஜியை 15 நாள்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்தனர். பின்னர் 50,000 ரூபாய் அபராதம் செலுத்திய பிறகே மீண்டும் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

அதன்பிறகும் பல்வேறு காரணங்களைக் கூறி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளது. கடந்த 14-ம் தேதி கல்லூரியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி மாணவர்கள் முன்னிலையில் அன்ஸிஜியைத் திட்டி, அவமானப்படுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.