நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம்; ஒரு மாதம் கடந்து குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இந்தியத் திரைத்துறையில் தன் தனித்துவமான நடிப்பாலும் உழைப்பாலும் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 35-வது வயதில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல இயக்குநர் விக்ரம் பட்டின் கோஸ்ட் (Ghost) உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர், ஜூலை 15, 2026 அன்று அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்தார்.

அனன்யா ராஜின் மரணம் கடந்த ஜூலை 15-ம் தேதியே நிகழ்ந்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் ஒரு மாதத்திற்குப் பிறகே சமூக வலைத்தளங்களின் வாயிலாக இந்தச் சோகச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இறுதிச் சடங்குகள் அமைதியான முறையில் குடும்ப உறுப்பினர்களால் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

அனன்யா ராஜ்

குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் கடுமையான உடல், மனநலச் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். அதிலிருந்து மீண்டு வர ஒரு வீராங்கனையைப் போலப் போராடினார்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட மருத்துவக் காரணத்தை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறும், தங்கள் குடும்பத்தின் தனிமையை மதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மும்பையில் பிறந்து வளர்ந்த அனன்யா ராஜ், மாடலிங் துறையில் தன் கவனத்தைச் செலுத்திப் பின்னர் திரைப்படத் துறைக்குள் நுழைந்தார்.

2016-ம் ஆண்டு வெளியான 7 ஹவர்ஸ் டு கோ (7 Hours to Go) திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 2017-ல் வெளியான தி ஃபைனல் எக்சிட் (The Final Exit) திரைப்படத்திலும், 2019-ல் புகழ்பெற்ற இயக்குநர் விக்ரம் பட் இயக்கிய கோஸ்ட் (Ghost) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

இந்தி மட்டுமின்றி, தெலுங்கில் நவீன் சந்திரா நடித்த தக்கதேலே (Thaggede Le - 2022) திரைப்படத்தில் நடித்தார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் உருவான மதராஸி கேங் (Madrasi Gang) படத்திலும் முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.

டி-சீரிஸ், ஜீ மியூசிக், டைம்ஸ் மியூசிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் பல புகழ்பெற்ற சுயாதீன இசை வீடியோக்களிலும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.

அனன்யா ராஜ்
அனன்யா ராஜ்

அனன்யாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல திரையுலக அமைப்புகளும், சக நடிகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

வாழ்க்கையிலும் திரையிலும் சாதிக்க வேண்டிய ஒரு இளம் பெண், உடல் மற்றும் மனநலப் போராட்டங்களால் இவ்வளவு சீக்கிரம் மறைந்தது திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனப் பலரும் பதிவிட்டுவருகின்றனர்.

கனவுகளோடும் திறமையோடும் திரையுலகில் தன் வழியை அமைத்துக்கொண்ட அனன்யா ராஜ், இப்பூலவிகில் இல்லாமல் போனாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.