காவிரி: ``ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்! - உச்ச நீதிமன்றம் அதிரடி
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரித் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். ``காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு எப்போதும் செயல்படுத்துவதே இல்லை. அணைகளில் 76% நீர் இருப்பு இருந்தும் தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 64 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 14 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.
கர்நாடகா தானாக முன்வந்து தண்ணீரைத் திறக்கவில்லை. கபினி/வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் கடவுளின் அருளால் அணைகளுக்கு வந்த உபரி நீரை மட்டுமே வழிநெடுகத் திறந்து விட்டுள்ளது. மழை நீரைக் கூட அவர்களால் முழுமையாகத் தேக்கி வைக்க முடியாமல் தான் திறந்து விட்டுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த வினாடிக்கு 12,000 கனஅடி நீர் என்பது மிகவும் குறைவானது.
ஆகஸ்ட் மாத விகிதாச்சாரப் பங்கு: 21.357 டி.எம்.சிஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் 31-க்குள் 36.635 டி.எம்.சி நீரைத் தமிழ்நாடு பெறுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். உரிய நீர் திறக்கப்பட்டிருந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 டி.எம்.சி-யாக உயர்ந்து, குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கும். லட்சக்கணக்கான விவசாயிகள் சாகுபடிக்குக் காத்துக் கொண்டிருப்பதால் உடனடி உத்தரவு தேவை" என அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்தார்
இதற்கு பதில் அளித்த கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ``தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள தரவுகள் அனைத்தும் தவறானவை. இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவிய ஆண்டாகும். காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன.
முதலில் 3,500 கனஅடி திறக்கச் சொன்னார்கள்; அதைவிட அதிகமாகவே திறந்தோம். இன்று (ஆகஸ்ட் 17) காலை 8 மணி நிலவரப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 12,000 கனஅடியை விடக் கூடுதல் தண்ணீரே தமிழ்நாட்டிற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. நாள் முழுவதும் இதே அளவு தொடரும். தமிழ்நாட்டிற்கு முழுமையாகத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காகவே மேகதாது அண கட்ட முயற்சிக்கிறோம்; ஆனால் தமிழ்நாடு அரசு அதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது.

ஏற்கனவே ஒழுங்காற்றுக் குழு மற்றும் மேலாண்மை ஆணையம் அமைத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றம் இதில் தனியாக விசாரிக்கத் தேவையில்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரண்டு மாநில அரசுகளிடமும் கேள்விகளை எழுப்பினர், "உங்கள் அணைகளில் அத்தனை நீரையும் சேமிக்க முடியாது என்பதாலும், கடவுள் கொடுத்த மழைநீரை முழுமையாகத் தேக்கி வைக்க முடியாது என்பதாலும் தானே தற்போது தண்ணீரைத் திறந்து விட்டுள்ளீர்கள்? ஏன் தேவையான நீரை முன்பே திறக்கவில்லை?" என கர்நாடகாவை நோக்கி நீதிபதிகள் வினவினர்.
"கர்நாடகா தேவைக்கு அதிகமான தண்ணீரைத் திறந்து விட்டிருப்பதாகக் கூறும்போது, நீங்கள் தண்ணீர் வரவில்லை என்று சொல்வது ஏன்?" என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, "மழையினால் வந்த உபரி நீரைத் தவிர வேறு நீரை அவர்கள் தரவில்லை" எனத் தெளிவுபடுத்தியது
இதனை அடுத்து உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள், ``இரு மாநிலங்களும் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. இந்த ஒரு வார காலத்திற்குச் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை (வினாடிக்கு 12,000 கனஅடி) கர்நாடகா கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இரு மாநிலங்களின் அறிக்கைகளையும் ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால், வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு (ஆகஸ்ட் 24, 2026) ஒத்திவைக்கப்படுகிறது.
அதுவரை கர்நாடகாவால் திறந்து விடப்பட்ட நீரின் முழுமையான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடுதல் நீர் கோரிக்கை [21,413 கனஅடி] உடனடி இடைக்கால உத்தரவாக ஏற்கப்படாததால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


