நான் கொடுக்காப்புளினு யாருக்கும் தெரியல; அந்த குழந்தை நட்சத்திரமும் நான்தான்! - நடிகர் வசந்த்
வதந்தி சீரிஸின் முதல் சீசனுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த சீரிஸில் பிரபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் வசந்த்.
வெயில் படத்தில் பரத்தின் சிறு வயது கதாபாத்திரம், ஆரண்ய காண்டம் படத்தில் கொடுக்காப்புளி கதாபாத்திரம் எனப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவர். குடும்பச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் தற்போது வதந்தி 2 மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.
நம்மிடையே பேசியவர், "இப்போ வதந்தி 2 சீரிஸ் வெளிவந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கு. நான் மறுபடியும் நடிக்க வந்து, இந்த சீரிஸ்ல பிரபாங்கிற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். நிறைய பேருக்கு நான்தான் ஆரண்ய காண்டம்ல கொடுக்காப்புளி பண்ணேன்னு தெரியல.
எல்லாரும் என்னைப் பிரபான்னுதான் பார்க்குறாங்க. ஒரு சில பேர் மட்டும்தான் நீங்க வெயில் படத்துல நடிச்சிருக்கீங்கதானே?னு கண்டுபிடிச்சு சொல்றாங்க. அதே மாதிரி ஆரண்ய காண்டம் படத்துல நடிச்சது நான்தான்னும் கண்டுபிடிச்சவங்களும் இருக்காங்க.
வதந்தி 2 சீரிஸ்ல நடிச்சப் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் சார் என்கிட்ட, "காவல்நிலையத்தில் சசிக்குமார் சாருடன் நீ பேசும் அந்த முதல் காட்சி ரொம்பவே எதார்த்தமா, சூப்பரா இருக்கு"னு பாராட்டுனாரு.

அதை டைரக்டர் சார் சொன்னது ரொம்பச் சந்தோஷமா இருந்தது. ஏன்னா, கிட்டத்தட்ட 8 வருஷங்களுக்கு அப்புறம் கேமரா முன்னாடி வந்து நிக்கிறேன். அதிலும் முதல் ஷாட்டே சசி சாருடன் எனும்போதே ஒரு தயக்கம் இருந்தது.
ஆனா, டைரக்டர் சார் கொடுத்த அந்தப் பாராட்டு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்தது." என்றவர், "இடையில் இத்தனை ஆண்டுகள் நடிக்காமல் போனதற்கு என்னோட குடும்பச் சூழ்நிலைதான் காரணம்.
காலேஜ் முடிக்கிற வரைக்கும் படங்கள் பண்ணிட்டுதான் இருந்தேன். ஆனா காலேஜ் முடிஞ்சதும் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பப் பையனுக்கு வர்ற அதே கேள்விதான் எனக்கும் வந்தது.
அப்பா வேலைக்குப் போகலையானு கேட்டார். நிறையப் பேருக்குச் சினிமா ஒரு வேலையாவே தெரியுறதில்லை. குடும்பச் சூழ்நிலை, தங்கச்சியோட எதிர்காலம், அப்பா அம்மாவைப் பாத்துக்கணும்ங்குற பொறுப்புனு இது எல்லாம்தான் என்னை ஒரு கார்ப்பரேட் வேலைக்குப் போக வச்சது.
வேலைக்குப் போனாலும் என் மனசு முழுக்கவும் சினிமாவையே சுத்திவந்துச்சு. சினிமா தொடர்பான காண்டாக்ட்ஸ் இருந்தது. ஆனால், அதை கையாள்வது ரொம்பவே கஷ்டம். ஆபீஸ் வேலையில் இருக்குறப்போ ஆடிஷன் கால்கள் வரும்.

போனை ஆபீஸுக்கு வெளியே வச்சிட்டுப் போறதால உடனே எடுக்க முடியாது. சாயங்காலம் வந்து பார்த்தா மிஸ்டு கால்ஸ் இருக்கும். திருப்பி கூப்பிட்டா எந்தப் பதிலையும் எதிர்பார்க்க முடியாது.
என்கிட்ட முறையான போர்ட்போலியோ கூட கிடையாது. யாராச்சும் போட்டோஸ் கேட்டா உடனே ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பிடுவேன். "சான்ஸ் கேக்குறீங்க, ஆனா உங்ககிட்ட ஒரு நல்ல போட்டோ கூட இல்லையா?"னுகூட கேட்டிருக்காங்க. அந்தந்த நேரத்துல ஏற்பட்ட பரபரப்புதான் இதெல்லாம்," எனப் பகிர்ந்தவரிடம், வெயில் பட வாய்ப்பு கிடைத்தது பற்றிக் கேட்டோம்.
அது பற்றி கூறுகையில்," வெயில் பட வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். நான் 3-வது, 4-வது படிக்கும்போதே கண்ணாடி முன்னாடி நின்னு வடிவேலு சார் மாதிரியே நடிச்சுப் பார்ப்பேன். அவர் சிரிச்சுக்கிட்டே அழுற காட்சிகளையெல்லாம் நானே செஞ்சு பார்ப்பேன்.
அதை என் அப்பாவும் கவனிச்சிருக்கார். அப்போ மதுரையில் ஒரு லோக்கல் சேனலில், ஒரு குறிப்பிட்ட வயது மற்றும் தோற்றத்தில் ஒரு சிறுவன் தேவை என்று வெயில் பட ஆடிஷன் விளம்பரம் வந்தது.
அதைப் பார்த்த என் அப்பா, நான் ஸ்கூலில் இருக்கும்போது வந்து "சொந்தக்காரங்க இறந்துட்டாங்க"ன்னு பொய்யைச் சொல்லி மதியமே என்னை அழைத்துக்கொண்டு போய், மாலையில் ஆடிஷனில் கலந்துகொள்ள வைத்தார்.
ரொம்ப நேரம் ஆடிஷன் போச்சு. அதுக்கப்புறம் என்னை தேர்வு பண்ணி, அன்னைக்கே என்னை விருதுநகர் கூட்டிட்டு போயிட்டாங்க.

அப்படித் தொடங்கியதுதான் இந்த சினிமா பயணம். அதுக்குப் பிறகு குருவி, துரோகி மாதிரியான படங்கள் பண்ணினேன். ஆரண்ய காண்டம் படத்துக்குப் பிறகு பூவரசம் பீப்பீ, வந்தான் வென்றான், அமரக்காவியம் மாதிரியான படங்கள்ல நடிச்சேன். ஆனால், அதுல நடிச்சது நான்தான்னு வெளில தெரியல.
இப்போ வதந்தி 2 வந்திருக்கு. இனி அடுத்தடுத்து வாய்ப்புகளுக்கு தொடர்ந்து முயற்சி பண்ணனும். குடும்பத்துக்காக வேலை, என்னுடைய ஆசைக்காக சினிமானு இனி இன்னும் பரபரப்பா ஓடுறதுக்கு ரெடியாக இருக்கேன்," எனக் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

