தோட்டா இல்லை - விமான நிலையத்தில் டிரிக்கரை அழுத்திய சிவசேனா மாஜி கவுன்சிலர் - இருவர் காயம்

மும்பையில் சிவசேனா கவுன்சிலராக இருந்தவர் கமலேஷ் ராய். இப்போது கம்லேஷ் ராய் மகன் கவுன்சிலராக இருக்கிறார். கமலேஷ் ராய் லக்னோவிற்கு சென்றுவிட்டு மும்பை திரும்புவதற்காக லக்னோ விமான நிலையம் வந்தார். அவர் தன்னிடம் ஒரு துப்பாக்கியும், 21 தோட்டாக்களும் இருப்பதாக முன்கூட்டியே குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அவரையும் துப்பாக்கியையும் தனியாக எடுத்துச்சென்று மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில் ஒரு தோட்டா அவர்கள் இருந்த கட்டிடத்தின் மேற்பரப்பை தாக்கி அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் ரோஹித் மற்றும் சுமன் ஆகிய இரண்டு பேரையும் தாக்கியது.

உடனே அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கி

இச்சம்பவத்தை தொடர்ந்து கமலேஷ் ராய் உடனே கைது செய்யப்பட்டார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் நீது கூறுகையில், "அந்தப் பயணி தனது மனைவியுடன் மும்பைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இருந்ததுடன், அதை நாடு முழுவதும் எடுத்துச் செல்லவும் அனுமதி இருந்தது. நாங்கள் சம்பவ இடத்தில் ஆய்வை நிறைவு செய்துவிட்டோம். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சுமன் இது குறித்து கூறுகையில்,துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காக ராய் துப்பாக்கியின் விசையை (trigger) அழுத்தினார். அந்தச் செயல்விளக்கத்தின்போது துப்பாக்கி வெடித்ததில், எனது தொடை உட்பட இரு கால்களிலும் குண்டு பாய்ந்ததுஎன்று கூறினார். மற்றொரு பாதுகாவலரான ரோஹித் இது குறித்து கூறுகையில், பயணி துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மேகசினை (magazine) வெளியே எடுத்துச் சரிபார்த்தார். பின்னர் அவர் அதன் ட்ரிக்கரை (trigger) கீழ்நோக்கி அழுத்த, துப்பாக்கி வெடித்தது. இதனால் எனது இடது கையின் கடைசி விரலுக்கு அருகில் காயம் ஏற்பட்டதுடன், சற்று வீக்கமும் உள்ளது." என்றார். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.