கோவை: கழுதைகளுக்கு நடந்த திருமணம் – மழை வேண்டி நூதன வழிபாடு!
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் பாரம்பரிய முறைப்படி கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி மழை வேண்டி கழுதைகளுக்கு விமர்சமையாக திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர்.
லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பஞ்ச கல்யாணி முறைப்படி இத்திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தைப் போலவே பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி மணிகள் அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி புதுப்பெண் போல அலங்கரித்தனர். அதேபோல் ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலம் மற்றும் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளம் முழங்க பெண் கழுதைக்குத் தாலி கட்டப்பட்டு திருமணம் முறைப்படி அரங்கேறியது. திருமணத்தில் பங்கேற்ற கிராம மக்கள் மொய்ப்பணம் வழங்கி கழுதைகளை ஆசீர்வதித்தனர். தொடர்ந்து மறுவீடு அழைப்பு நிகழ்வு நடத்தப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவியபோது, கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால் நல்ல மழை பெய்ததாகவும், அதேபோல தற்போதும் ஊரில் நல்ல மழை பொழியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் அக்கிராம மக்கள் கூறினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


