ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியின் ‘டிக்ளாசிஃபைட்: ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வரவிருக்கும் ஆவணத்தொடருக்கான நேர்காணலில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் எல்லை தாண்டிய பதிலடி குறித்த முக்கிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ``கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று 26 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்குக் காரணமான பயங்கரவாதக் கட்டமைப்புகளை மட்டுமே இலக்காகக் கொண்டு அழிக்க இந்தியா முடிவெடுத்தது.

Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், `போய் மோடியிடம் சொல்லுங்கள், அவரால் முடிந்தைச் செய்யட்டும் என்று இந்தியத் தலைமைக்குச் சவால் விடுத்தனர்.
பஹல்காம் படுகொலைக்குப் பின் பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைச் சுருக்கிக் கொண்டு இந்தியா திரும்பினார். விமான நிலையத்திலேயே அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில், `தாக்குதலை யார் செய்தது? இதற்கு யார் பொறுப்பு? என்று பிரதமர் கேட்டார்.

இந்திய உளவு அமைப்புகள் மிகக் குறுகிய காலத்தில் குற்றவாளிகளைத் துல்லியமாகக் கண்டறிந்தனர். `அவர்கள் தரையிலோ, ஆகாயத்திலோ அல்லது பாதாளத்திலோ எங்கு ஒளிந்திருந்தாலும் வேட்டையாடுவோம். யாரையும் மன்னிக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது. இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாகக் கருதக் கூடாது. கிடைத்த துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், மே 7, 2025 அன்று ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது.

 மோடி
மோடி

வெறும் 23 நிமிடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆழமான பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதப்படுத்தப்பட்டன.
பாகிஸ்தான் திருப்பித் தாக்க முயன்றபோதிலும், இந்தியப் படைகள் இரக்கமற்ற பதிலடி மூலம் அவர்களைப் பின்னுக்குத் தள்ளின.

அணுஆயுத வல்லமை கொண்ட இரு நாடுகளுக்கிடையே சுமார் 88 மணி நேரம் நீடித்த இந்த எல்லை தாண்டிய மோதல், பரஸ்பர புரிதலுக்குப் பின் மே 10 மாலையில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ராணுவத் திறனுக்குச் சான்றாக அமைந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.