அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?- அப்பாவு காட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரியில் கஞ்சா புழக்கம் குறித்து தகவல் அளித்ததாலேயே அமுதன் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டிற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவை தனியார் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக மாணவர் அமுதன் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் 20 பேர் கொண்ட மாணவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
அடுத்த 3 தினங்களில் சென்னை திருவெற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் தினேஷ் போதைப்பொருள் பயன்படுத்தியதை காட்டிக்கொடுத்ததாக சக மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கும்பல் 30 பேர் சேர்ந்து ஈவிரக்கமின்றி அடித்து கொன்ற சம்பவத்தை பார்க்கும்போது தமிழ்நாட்டு காவல்துறை பயனற்ற சினிமாவில் தோன்றும் காவல்துறையாக மாறி விட்டதோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது CM sir.
அதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் Neet கோச்சிங் சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய கொடுமை காவல்துறையை கையில் வைத்திருக்கும் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது ஒட்டுமொத்த காவல்துறையையும் உங்கள் நண்பர்களிடமே கொடுத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா CM sir?

தமிழ்நாட்டில் பெரும்பாலும் உங்கள் கட்சியினர் காவல்துறை ஒத்துழைப்போடு தங்கு தடையின்றி மாணவ-மாணவிகளிடம் போதை பொருட்களை விற்பனை செய்து வருவது உங்களுக்கு தெரியுமா? இதுவரை தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் உங்கள் கட்சியினர் மூலம் தமிழக மாணவ மாணவிகளை சீரழிக்க துணிந்து விட்டீர்களா CM sir?
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் கொடுத்தார். நீங்களோ மாணவ மாணவிகளைத் தேடி மதுவை கொடுக்குறீர்களே! கல்லூரிகளை போதைப் பொருள் விற்பனை மையங்கள் ஆக்கி வகுப்பறைகளை மது குடிக்கும் பார்-ஆக மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில் மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்குறீர்களே CM sir?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


