800க்கு 538 மதிப்பெண் - 2வது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு; அலுவலர்கள் பெருமிதம்!

நாடு முழுவதும் 80வது சுந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார்.

சிறந்த மாவட்ட ஆட்சியர், சிறந்த மாவட்டம், மாநகராட்சி, பாராட்டுதலுக்குரிய பணிகளை முன்னெடுத்த தனி நபர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கெளரவித்தார்.

இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சி

அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சி மாநிலத்திலேயே இரண்டாவது சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மொத்தம் 24 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 12 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் சிறப்பான நிர்வாகத்தைச் செயல்படுத்தியமைக்காக மார்க் அடிப்படையில் இரண்டாவது சிறந்த மாநகராட்சி என்ற சிறப்பை தஞ்சாவூர் மாநகராட்சி பெற்றுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி பேசுகையில், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை, ஆற்றல்திறன், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு, பொதுசுகாதாரம் மற்றும் கல்வி, பொதுமக்கள் ஈடுபாடு, வெளிப்படைதன்மை, நகர்ப்புறத் திட்டமிடுதல், மின் ஆளுமை, பசுமை பரப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கம், திறன் மேம்பாடு, புதுமை படைப்புகள் மற்றும் அங்கீகாரம் போன்ற 12 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், 108 அளவுகோல்கள் வைக்கப்பட்டன.

800 மார்க் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்ந்தெடுப்பு நடந்ததில் தஞ்சாவூர் மாநகராட்சி 538 மார்க் எடுத்து தமிழகத்திலேயே இரண்டாவது சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில்

மநாகராட்சி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உழைப்பால் இது நடந்துள்ளது. குடிநீர் சப்ளை, பாதாள சாக்கடை திட்டம் போன்றவை இன்னும் மேம்படுத்தபட உள்ளது. அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவர் பெயிண்டிங் வரையப்படுகிறது.

இது போன்ற பணிகளால் இம்முறை இரண்டாம் இடத்தை அடைந்திருக்கிறோம். அடுத்த முறை முதல் சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுக்க கூடிய வகையிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை கோவை மாநகராட்சி பெற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.