ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்... ஐ.நா சபை வரை அசத்தும் தமிழ்ப் பெண் சுஷ்மிதா கிருஷ்ணன்!

நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக் கூடிய களைச் செடிகள்.

அழகான மலர்களுக்காக ஹேஸ்டிங்கிசின் மனைவி மரியன் ஹேஸ்டிங்ஸால் இந்தியாவிற்கு வந்த இந்த ஆகாயத் தாமரை, நம் நாட்டு அழகை எல்லாம் காண முடியாதவாறு செய்து விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறு, குளம், ஏரிகளில் எங்கு எப்போது பார்த்தாலும் ஆகாயத் தாமரை மண்டிக் கிடக்கிறது. அதை பார்க்கும் போதெல்லாம் ஏதாவது செய்து, இதைக் கட்டுப்படுத்த முடியாதா என்ற எண்ணம் தோன்றும். அப்படி ஒரு பெண்ணுக்கு தன் சிறு வயதில் உருவான எண்ணம் தற்போது ஆகாயத் தாமரைக் காகிதமாக மாறி ஐ.நா. சபையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அந்த பெண்ணுடைய பெயர் “சுஷ்மிதா கிருஷ்ணன்”.

கோயம்புத்தூரில் பிறந்த இவர், 11 வயது இருக்கும்போது, திருச்சி வந்தார். திருவெறும்பூரில் தங்கி இருந்த பொது, அருகே இருந்த பெரியகுளத்தில் மெத்தை போல மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரையைக் காணும் போதெல்லாம் அதை எப்படி மொத்தமாக அகற்றுவது என்பது குறித்து அடிக்கடி சிந்தித்ததாகக் கூறினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பிரிவில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயின்றார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில்(IISc, Bengaluru), பயிற்சிக்கு காலத்தில் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்த போது, ஆகாயத் தாமரையை ஆராயத் துவங்கினார். கல்லூரிப் படிப்பின் 4 ஆவது ஆண்டில் ஐ. நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பின் உதவித்தொகையைப் பெற்று, தொழில் துறை ஆலோசகராகப் (Individual Consultant) பணியாற்றினார்.

TAGe (Talking Across Generations on Education) எனும் யுனெஸ்கோ அமைப்பின் ஒரு உரையாடல் அமைப்பில் ஆய்வுக்குழு உறுப்பினராக இந்தியாவின் சார்பில் உரையாற்றினார்.

இவ்வளவும், கல்லூரியில் இருக்கும் போதே !! அதே யுனெஸ்கோ நடத்திய ஒரு கேம் உருவாகும் போட்டியில் கலந்துகொண்டு, டைவர்சிட்டி(Diversity) எனும் கேமையும் உருவாக்கியுள்ளார். அந்த கேம் நிலையான வளர்ச்சி(Sustainable Development) பற்றியது என்று தெரிவித்தார்.

ஆகாயத்தாமரையைப் பயனுள்ள வகையில் மறு சுழற்சி செய்ய வேண்டும் என முடிவு செய்த சுஷ்மிதா, அந்தப் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள அமைப்புகள் குறித்து ஆராயத் துவங்கினார். அது குறித்து அவர் சொல்லும்போது, "வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேலும் மேற்கு வங்கம், பாண்டிச்சேரி முதலான இடங்களில் ஆகாயத் தாமரையின் மூலம் கூடைகள், பைகள் செய்யப்படுகின்றன.

ஆகாயத் தாமரை மூலம் பேப்பரும் ஒரு சிலர் செயகின்றனர். ஆனால், அதில், சாதாரண பேப்பர்களும் கலக்கப் படுகின்றன. ஆனால், எனது ஆகாயத் தாமரை பேப்பரில் துளியும் சாதாரண தாள்கள் கலக்கப் படுவதில்லை.

மேலும், இவ்வாறு இவர்கள் சிறிய அளவில் உருவாக்கும் போது 10 கிலோ அளவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதை உலர வைக்க மூன்று நாட்கள் ஆகிறது. அதற்குள், ஆகாயத்தாமரை பன்மடங்கு பெருகிவிடும். எனவே இதற்கு மாற்று வழி கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது உதித்தது தான் இந்த ஆகாயத் தாமரை தாள்"

அச்சடித்தலுக்குப் (Printing) பெயர்போன ஜெர்மனியில், ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள மர வேதியியல் ஆய்வகம் பிரசித்திப்பெற்றது. அங்கு சென்று தனது ஆகாயத்தாமரை தொடர்பான ஆய்வைத் தொடங்கினார் சுஷ்மிதா கிருஷ்ணன். ஜெர்மன் அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உலக நிலைத்தன்மைக் கழகத்தின் (International Sustainability Academy) ஊக்கத்தொகை ஒவ்வொரு வருடமும் உலகளவில் 12 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். 2024 இல் அந்த ஊக்கத்தொகையைப் பெற்ற ஒரே இந்தியர் இவர் தான்.

ஆகாயத்தாமரை மூலம் பேப்பர் உருவாக்க, அதை கூழாக்க வேண்டும் (Pulping). அதை, ஆய்வகத்தில், முனைவர். திரு. போடோசாகே மற்றும் பிரெடெரிக் ஸ்டெஃபன் ஆகியோருடன் இணைந்து செய்துக் காட்டினார். பிறகு அதைப் பல்வேறு முறைகளின் மூலம் இண்டஸ்ட்ரி ஸ்பெஷல் கிரேடு பேப்பராக(Industry Special Grade Paper) உருவாக்கி சாதனையும் படைத்தார்.

தனது கண்டுபிடிப்பின் தனித்துவங்களைப் பற்றி சொல்லும் போது, மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொன்னார்.

(1) கிரீஸ் ப்ரூஃப்- அதாவது சாதாரண டீ கடைப் பேப்பர்களைப் போல இதில் எண்ணெய் ஒட்டாது.

(2) இரசாயனம் அற்ற தாள் - சாதாரண தாள்களை உருவாக்கும் போது சல்ஃப்யூரிக் அமிலம் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆகாயத் தாமரை தாளுக்கு அது தேவைப்படவில்லை. ஆகையால், இது இரசாயனம் அற்ற தாளாக, சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் தாளாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

(3) நீர் சேமிப்பு - பொதுவாக, ஒரு A4 ஷீட் உற்பத்தி செய்ய 18 - 20 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், இந்த தாளை உருவாக்க 4 -5 லிட்டரே போதுமானது.

தற்போது, இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்து உள்ளார் சுஷ்மிதா. மேலும், “இந்த கண்டுபிடிப்பை ஒரு வணிக நோக்கில் கொண்டுபோக விருப்பம் இல்லை. இந்த தாளை உருவாக்கும் முறையை உள்ளூர் மக்களுக்கு (சுய உதவிக் குழுக்கள் போல) சொல்லிக் கொடுத்து அவர்கள் மூலம் அதை காகிதத் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல விருப்புகிறேன். இதனால் உள்ளூர் மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம்”என்கிறார் சுஷ்மிதா கிருஷ்ணன்.

இந்த ஐடியாவை ஐ.நா. சபையின் பல்வேறு கூட்டங்களில் வெளிப்படுத்தி பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதன் விவரங்கள் கீழ்வருமாறு:

(1) 2024 உலக உணவு மன்றம் (World food forum) - ரோம்

(2) நிலையான வளர்ச்சிக்கான உலக மாநாடு - (International confenerce on Sustainable Development) - ரோம்

(3) UNAOC Forum - வாழ்வாதார வளர்ச்சி

(4) 2024- ஜெனீவா IUCN

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நடத்திய தேசிய பசுமை திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (Green Skill Development Program) 2026 க்கான பாடத்திட்டத்தில் ஆகாயத் தாமரையை கூழாக்கி, உலர்த்தி காகிதம் தயாரிப்பது எப்படி என்றும் ஒரு பாடத்தொகுதி (module) இருந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தா டிரஸ்ட் எனும் அமைப்பில் உள்ள பெண்களுக்கு இம்முறையைக் கற்றுக்கொடுத்துள்ளார். சென்னைப் பட்டினப்பாக்கத்தில் உள்ள மீனவப் பெண்மணிகள் 50 பேருக்கு இந்த முறையைக் கற்றுக்கொடுத்திருப்பதும் பெருமிதம் கொள்ள வைக்கிறது. வருங்காலத்தில் பெண்கள் சுய உதவிக்குழுக்களாக மாறி இந்த முறையைக் கையில் எடுத்தால் சிறப்பான வளர்ச்சி காணலாம் என்றும் தெரிவிக்கிறார் அவர்.

மேலும் இந்த தொழில்நுட்பம் குறித்து சென்னையில் உள்ள கிரஸண்ட் பல்கலைக்கழகம், திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம் முதலிய கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவ மாணவியருக்குப் பயிற்சி வழங்கி உள்ளார். மொத்தம் இதுவரையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

இம்மாணவர்கள் முதல் நாளில் தாங்களாகவே சென்று, அருகில் உள்ள ஏரிகளில் இருந்து ஆகாயத் தாமரை எடுத்து வர வேண்டும். அதில் தான் அவர்கள் இந்த காகிதங்களை செய்வர் என்று பெருமையுடன் சொல்கிறார் அவர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.