TNPL: ஒருபக்கம் லாஸ்ட் ஓவர் திக் திக்; மறுபக்கம் `196 மிரட்டல்! - திருச்சி, நெல்லையின் தரமான வெற்றி
“இன்னும் மேட்ச் முடியலப்பா!” — ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்களை இப்படித்தான் சொல்ல வைத்தது.. ஒருபுறம் கடைசி ஓவர் வரை திக்... திக்... என நகர்ந்த நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் மோதலில் 19.5 ஓவரில் 163/8 எடுத்து இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
மறுபுறம் ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதத்தால் 196 ரன்கள் குவித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், திருப்பூரை 179/8 என கட்டுப்படுத்தி 17 ரன்களில் வென்றது.
TNPL 2026 தொடரின் 16வது மற்றும் 17வது லீக் போட்டிகள் நேற்று திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. பிற்பகலில் நடந்த முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
கோவை கிங்ஸுக்கு ஆரம்பமே அதிர்ச்சி!
வந்தார் சென்றார் என்பது போல் ராதாகிருஷ்ணன் தனது விக்கெட்டை விட சுரேஷ் லோகேஷ்வர், சச்சின் இன்னிங்ஸை மீட்டனர். இருவரும் 59 ரன்கள் சேர்த்த நிலையில், லோகேஷ்வரை 26 ரன்களில் யுதீஸ்வரன் வெளியேற்றினார். யுதீஸ்வரன் 3 விக்கெட் எடுத்து கோவையின் மிடில் ஆர்டரை ஆட்டம் காண வைத்தார்.
அதற்குப் பிறகு சச்சினின் பேட்டில் கொஞ்சம் வேகம் கூடியது. இடைவெளிகளில் பந்தை அழகாகத் தட்டி ரன்களை சேர்த்த அவர், கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த சச்சினுடன் கேப்டன் ஷாருக்கான் 24 பந்துகளில் 29 ரன்கள் சேர்க்க, கோவை 20 ஓவர்களில் 162/9 என போட்டிக்குப் போதுமான இலக்கை எடுத்தது.
ரிதிக் வந்ததும் வேகம் மாறியது!
163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. சந்தோஷ் துரைசாமி சீக்கிரமே வெளியேற, அஜிதேஷ், முகிலேஷ் இருவரும் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார்கள். ஆனால், கிஷோர் இருவரையும் முக்கியமான நேரத்தில் வெளியேற்றியதும் நெல்லையின் சேஸ் மீண்டும் தடுமாறியது.
“அட அவ்வளவுதானா?” என்று கோவை நினைத்த நேரத்தில்தான் ரிதிக் ஈஸ்வரன் பேட்டை சுழற்ற ஆரம்பித்தார்.
வேகப்பந்து வீச்சை காத்திருந்து அடித்த ரிதிக், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சரமாரியாக விளாசினார். 31 பந்துகளில் 69 ரன்கள் அதில் 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரிதிக்கின் பேட் மட்டும் “நான் இருக்கேன்!” என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தது.
ஆனால் 17வது ஓவரில் தீபன் லிங்கேஷ் ஒரே ஓவரில் கேப்டன் சோனு யாதவ், முகமது அத்னான் கான் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை மீண்டும் கோவையின் பக்கம் திருப்பினார். ரிதிக் இருந்தாலும், மறுபக்கம் விக்கெட்டுகள் ஒன்னொன்னா விழுந்தது. கடைசி மூன்று பந்தில் நெல்லைக்கு 5 ரன்கள் தேவை. ரிதிக் களத்தில் 69 ரன்களுடன் இருந்தார். 19ஆவது ஓவரில் மூன்றாவது பந்தை அடிக்க முயன்ற ரிதிக், லோகேஷ்வரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரிதிக்கின் விக்கெட் விழுந்ததும் கோவை வீரர்கள் “இப்போ நம்ம நேரம்!” என்று கொண்டாடத் தயாரானார்கள். ஆனால் சச்சின் ரதி நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.. 19.5 ஓவரில் 163/8. என நெல்லை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 31 பந்துகளில் 69 ரன்கள் விளாசி நெல்லையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரிதிக் ஈஸ்வரன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த போட்டி...
ஷ்யாம் சுந்தரின் சதத்தால் பிரம்மாண்ட ஸ்கோரை எட்டிய திருச்சி
இரண்டாவது போட்டியில் திருச்சி முதலில் பேட்டிங் செய்தது. கே.ராஜ்குமார் 33 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைக்க, ஜெகதீசன் கௌசிக் வந்த வேகத்தில் 10 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். நான்கு பவுண்டரிகள் அடித்த கௌசிக், “நான் வந்த வேலை முடிஞ்சது” என்பதுபோல வேகமாக வெளியேறிவிட்டார்.

ஆனால் மறுபக்கம் ஷ்யாம் சுந்தர் பந்து எங்கே கிடைத்தாலும் அதை எல்லைக்கோட்டை நோக்கி அனுப்பிய அவர், 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கிய அந்த இன்னிங்ஸ், 182-க்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டில் வந்தது. சதம் அடித்ததோடு நின்றுவிடாமல், கடைசி வரை நின்று அணியை 196 ரன்களுக்கு அழைத்துச் சென்றதுதான் அவரது இன்னிங்ஸின் சிறப்பு.
திருப்பூர் பக்கம் டி. நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தாலும், ஷ்யாம் சுந்தரை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் திருச்சி 20 ஓவர்களில் 196/6 என பெரிய ஸ்கோரை எட்டியது.
197 ரன்கள்... திருப்பூரும் பதிலடி கொடுத்தது. ஆனால்!
197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூருக்கு அமித் சாத்விக் 6 ரன்களில் வெளியேறியதும் சின்ன அதிர்ச்சி. ஆனால் துஷார் ரஹேஜா வந்ததும் ஆட்டமே வேறு மாதிரி மாறியது.
பவுண்டரிகளைவிட சிக்ஸர்களை நம்பிய அவர், 43 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். எட்டு சிக்ஸர் பறக்க திருச்சி வீரர்கள் பந்தை தேடிட்டே இருக்காங்க ஆனால் துஷார் மட்டும் அடுத்த பந்துக்குத் ரெடியாயிருக்கிறார்.
பிரதோஷ் ரஞ்சன் பாலும் 36 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க இருவரும் சேர்ந்து திருப்பூரை வெற்றிக்கு கிட்ட கொண்டு வந்தாங்க, ஆனால் 14.5-வது ஓவரில் துஷார் ரஹேஜாவை சரவண குமார் வெளியேற்றியதும் திருப்பூரின் வேகம் திடீரென குறைந்தது. அதிலும் ஜெகதீசன் பிடித்த கேட்ச் திருச்சிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு கே. ஈஸ்வரன் பந்தை கையில் எடுத்ததும் திருப்பூரின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. சாய் கிஷோரை 1 ரன்னில் வீழ்த்திய அவர், பின்னர் அனோவங்கர், மதிவண்ணன் ஆகியோரையும் வெளியேற்றினார். 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை முக்கியமான நேரத்தில் எடுத்து திருப்பூரின் சேஸுக்கு பெரிய பிரேக் போட்டுடார்.
கடைசியில் உதிரசாமி சசிதேவ் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்து போராடினார். 19வது ஓவரில் சிக்ஸர், அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் என திருப்பூர் மீண்டும் நம்பிக்கை கொடுத்தது. ஆனால் கடைசி ஓவரில் ஈஸ்வரன் அந்தக் கதவையும் அடைத்தார். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூரை 179 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி திருச்சி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் குவித்த ஷ்யாம் சுந்தர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளிப் பட்டியலில்...இந்த இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு, திருச்சி கிராண்ட் சோழாஸ் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நெல்லை ராயல் கிங்ஸ் 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


