DC: வாமிகா கொடுத்த ஐஃபோன்; லோகேஷ் அண்ணன் கொடுத்த கம்ஃபோர்ட் - ஜவஹர் சக்தி ஷேரிங்ஸ்!
லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் டிசி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் தேவதாஸ் கதாபாத்திரம் மற்றும் அவருடைய குழுவினரைச் சுற்றிதான் முழு படமும் நகரும்.
இந்தக் கேங்கில் ஒருவராக வரும் கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் ஜவஹர் சக்தி. பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறியவருக்கு, இன்று டிசி பெரிய வெளிச்சத்தைத் தேடித் தந்திருக்கிறது. ஜவஹர் சக்தியிடம் பேட்டி கண்டோம்.
நம்மிடையே பேசுகையில், "இந்தப் படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு எனக்குள்ள ஒரு பெரிய நம்பிக்கை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி தெலுங்கு, மலையாளம்னு மொழி தெரியாத ஆட்கள் கூட யார் யாரோ போன் பண்ணி விஷ் பண்றபோ, அடடா, இதுக்குத்தானே இவ்வளவு நாள் கஷ்டப்பட்டோம். இது நமக்கு உண்மையிலேயே கிடைச்சிருக்கா? இதை நாம அனுபவிக்கலாமா? இது இப்படியே தொடருமா?னு சந்தோஷமும் பதற்றமும் கலந்திருக்கு.
எவ்வளவு சந்தோஷப்படணுமோ, அவ்வளவுக்கு ஒரு சின்ன பயமும் கூடவே வருது. ஆனா ஒன்னு ப்ரோ, என்னோட 100% உழைப்பை நான் தொடர்ந்து போட்டுக்கிட்டே இருப்பேன்" என நம்பிக்கையாய் பேசத் தொடங்கியவர், "என் பேரு ஜவஹர் குமார், அப்பாவின் பெயர்தான் சக்தி. அப்பாவுக்கும் என் வெற்றியில பங்கு கிடைக்கணும்னு, அவருடைய பெயரையும் கூட சேர்த்துக்கிட்டேன்.
ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே மதுரையில இருக்கிற அரவிந்த் தியேட்டர், ஜெயம் தியேட்டர் ஸ்டால்கள்ல எல்லாம் வேலை பார்த்திருக்கேன். அப்போ காசு கொடுத்து படம் பார்க்கக் கூடாது, ஆனா நிறைய படம் பார்க்கணும்ங்கிறதுதான் என் ஆசையாக இருந்துச்சு. அதுக்காகத்தான் அந்த வேலைக்கே போனேன்.
ஒருமுறை, "தம்பி, நீ சினிமாவுக்கு போயேன்டா"னு என் அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. நான் சிரிச்சுக்கிட்டே, "அம்மா, காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான். இந்த மூஞ்சியெல்லாம் போய் சினிமாவுல நடிக்குமா, சும்மா இருங்கம்மா"னு சொல்லுவேன். ஆனா அம்மா விடாம, அதைத் தொடர்ந்து சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ ஒரு நாள் ஏரியால என் நண்பர் "நடிக்க வர்றியா?"னு கேட்டாரு. உடனே நான் முந்திக்கிட்டு, "நான் வர்றேண்ணே"னு சொன்னேன்.

அதுக்கு அவரு, "டேய் அங்கே உன்னை சமையல் வேலைக்குக்கூட எடுத்துக்க மாட்டாங்கடா, உன் மூஞ்சிக்கு எதுக்குடா வர்ற?"னு கேட்டார். எனக்கு, அவரு அப்படிச் சொன்னது மனசுல பயங்கரமா உறுத்திடுச்சு. ஏற்கெனவே அம்மாவும் நடிக்கப் போகச் சொல்லியிருந்தாங்களா? "சரிடா! இந்த மேடையில என்னதான் இருக்குனு ஒரு கை பாத்துருவோம்"னு முடிவெடுத்து களத்துல இறங்குனேன்.
அப்படி ஆரம்பிச்சதுதான் என் பயணம். இந்தச் சினிமா துறைக்கு வந்து 13 வருஷத்துக்கு மேல ஆச்சு ப்ரோ. குடும்ப சூழ்நிலை காரணமாக மதுரைக்கும் சென்னைக்கும் அலைஞ்சிட்டே இருந்தேன். இடையில முண்டாசுப்பட்டி, பொதுவாக என் மனசு தங்கம் மாதிரியான படங்கள்ல நடிச்சேன்.
கொரோனாவுக்குப் பிறகு அமைஞ்ச படங்கள்தான் கொட்டுக்காளி, கருப்பு, ரப்பர் பந்து, டிசி. இப்போ ஜவஹர் சக்தி என்னவா இருக்காருனு கேள்வி கேட்டால், அது எனக்கு இன்னமும் சரியா தெரியல. இப்பதான் விசிட்டிங் கார்டுல ஜவஹர் சக்தினு பேரையே பிரிண்ட் அடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்" என்றார்.
"அருண் மாதேஸ்வரன் அண்ணன் கொட்டுக்காளி பிரிவ்யூ ஷோல என்னை பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருந்தார். அவரு என் கை புடிச்சு, "டேய் தம்பி, நீ ரொம்ப அருமையா, லைவா பண்ணிருந்தடா"னு சொன்னாரு.
எனக்கு ஒரே ஷாக். அப்போ நான் அவர்கிட்ட, "அண்ணே, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், உங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்"னு சொன்னேன். "அப்படியா, சரி தம்பி, நான் கூப்பிடுறேன்"னு சொன்னாரு. பிறகு, டிசி ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க.

முதல்ல, அவர் என்னை படத்துல வர்ற மாப்பிள்ளை கதாபாத்திரத்துக்குதான் கூப்பிட்டாங்க. பிறகுதான் கருப்பு கதாபாத்திரம் கொடுத்தாங்க. ஒரு ஃபைட் சீன்ல நான் பாட்டிலால ஒருத்தரை அடிப்பேன். அந்த ஃபைட் பண்ணும்போது, பாட்டில் உடைஞ்சு என் மண்டையில இடிச்சு லைட்டா பிளட் வந்துருச்சு.
எல்லாரும், "ஓகேவா?"னு கேட்கும்போது, நான் தலையைக் கோதி பார்த்தா கையில் ரத்தம் வந்தது. உடனடியாக இயக்குநரும், "டேய், நீ ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வாடா"ன்னாரு. நான், "இல்லண்ணே இல்லண்ணே, டேக் முடியட்டும்"னு சொன்னேன். "டேய் ஓகேவாடா?"னு கேட்டாரு, "சின்ன உரசல்தான் அண்ணே, ஒன்னும் இல்ல"னு சொல்லி அடுத்த டேக்கையும் முடிச்சேன். அப்புறம் ஆஸ்பத்திரி போயி சின்னதா கட்டு போட்டுட்டு வந்து, மறுபடியும் நடிச்சேன்.
லோகேஷ் கனகராஜ் அண்ணன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குற ஒரு பிரமாண்ட இயக்குனர். அவரும் எங்ககூட ரொம்ப அழகாகப் பழகினார். ரொம்ப வருஷம் பழகிய நண்பர் மாதிரி பேசுவாரு. நம்மளை எப்பவும் கம்ஃபோர்ட்டா வச்சிருப்பாரு.
நாம தயங்கி ஒரு நாலு அடி தள்ளி நின்னாலும், பாத்துட்டு கூப்பிட்டு தோள்ல கை போட்டு பக்கத்துல நிறுத்திப்பாரு. வாய்ப்பு தேடுற இடத்துல இருக்குற நமக்கு அது எவ்வளவு பெரிய ஃபீல் தெரியுமா! அவர்கிட்ட நிறைய விஷயம் ஷேர் பண்ணுவேன்.
ஒரு முறை என்கிட்ட "கூத்துப்பட்டறைல நடிப்பு கத்துக்கிட்டியா?"னு கேட்டாரு. நான், "அண்ணே, கூத்துப்பட்டறைலாம் இல்லைண்ணே. அம்மா அப்பாகிட்ட வாங்குன திட்டா இருக்கட்டும், அவங்க காட்டுன பாசமா இருக்கட்டும், லவ் பண்ண பொண்ணு பண்ண துரோகமா இருக்கட்டும், இல்ல நான் அவளை அதிகமா லவ் பண்ணதா இருக்கட்டும்... இது எல்லாத்துக்குள்ளயும் ஒரு ஆக்டிங் ஸ்கில் இருக்குனு நம்புறேன். ரியல் லைஃப் எமோஷன்ஸைத்தான் நான் நடிப்புக்கு எடுத்துக்கிறேன்"னு சொன்னேன். "சூப்பர்டா!"னு பாராட்டினார்.

அதே மாதிரி ஒவ்வொரு டேக் முடிஞ்சதும், "நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா என்கிட்ட சொல்லிடுங்க, நான் உடனே மாத்திக்கிறேன்"னு சொல்லுவாரு. "நான்தான் ஹீரோ, நான் பண்றதுதான் ரைட்டு"னு நினைக்காம இதையெல்லாம் சொன்னது ரொம்ப புதுசா இருந்துச்சு.
வாமிகாவும் ரொம்ப ஜாலியாக பழகுவாங்க. எனக்காக ஐபோன் 17 ப்ரோ மொபைலை கிஃப்ட் பண்ணினாங்க. நீங்க நல்லா நடிக்கிறீங்க. இன்னும் நிறைய விஷயங்கள் பண்ணனும்னு வாழ்த்தி அனுப்பினாங்க" எனப் பகிர்ந்துக் கொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


