`சட்டமன்றத்தில் அதிமுகவை விழுங்க நினைக்கும் தவெக? - எடுபடுமா விஜய்யின் மாஸ்டர் ப்ளான்?
தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைகளிலும் பிரசாரங்களிலும் அதிமுகவை விமர்சிக்காமல், அதிமுகவின் அடையாளமாக திகழும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர் விஜய் உட்பட தவெக-வின் முக்கியஸ்தர்கள். திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்தவும் பிளவுகளால் பலவீனமாக இருக்கும் அதிமுக அனுதாபிகளின் வாக்கை இழுக்கவும் தவெக இப்படியொரு யுக்தியை கையாண்டு வந்தது.
அது தேர்தலில் தவெக-வுக்கு கைகொடுக்கவும் செய்தது. கட்சிப் பொதுக்கூட்டங்களில் கையாண்ட அதே யுக்தியை இப்போது சட்டமன்றத்திலும் தவெக கையாள தொடங்கியிருக்கிறது. அதிமுகவை அப்படியே விழுங்க நினைக்கும் தவெகவின் திட்டம் கோட்டை வரை நீள தொடங்கியிருக்கிறது.
முதல்வர் விஜய்யின் இந்த மாஸ்டர் ப்ளான் தவெகவுக்கு கைகொடுக்குமா?
பட்ஜெட் கூட்டத்தொடர் ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இதில் தவெகவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் சொல்லும் விதம் இரண்டு விதமாக இருப்பதை பார்க்க முடிகிறது. திமுக எம்.எல்.ஏக்கள் எதாவது விமர்சனங்களை முன்வைத்தால் உடனே குறுக்கிட்டு அதற்கான பதிலை கொடுப்பதோடு காட்டமான விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.
அதேநேரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசும் போது தவெக அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடுவதில்லை. அப்படியே குறுக்கிட்டாலும் என்ன விஷயமோ அதற்கான பதிலை தரவுகளோடு கொடுத்துவிட்டு அமர்ந்து விடுகிறார்கள். (11.08.26 அன்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் நடந்த வாதம் மட்டுமே விதிவிலக்கு.)

காவிரி விவகார தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையின் போதுமே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை சீண்டும் வகையில் மட்டுமே முதல்வரின் பேச்சு இருந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.
அவையில் எல்லாருடைய கருத்துக்கும் சேர்த்து பதில் சொன்னால்தானே சரியாக இருக்கும் என பழனிசாமியே பேசினார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதில் சொல்லவே இல்லை. இது தேர்தலுக்கு தவெக பயன்படுத்திய யுக்தி. திமுகவை மட்டுமே தங்களின் பிரதான எதிரியாக நிலைநிறுத்திக் கொண்டு, வேறெந்த கட்சியையும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதே யுக்தியின் நீட்சியாகத்தான் அவையில் முதல்வரின் செயல்பாடும் இருந்தது.
அதேமாதிரி, தேர்தலுக்கு முன்பாக மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில், எம்.ஜி.ஆர் எப்பேற்ப்பட்ட மாஸான தலைவர். ஆனால், அந்தக் கட்சியின் இப்போதையை தலைமையை பாருங்கள்... என எடப்பாடியை பெயர் கூறிப்பிடாமல் விஜய் விமர்சித்திருந்தார். மேலும், எம்.ஜி.ஆரை தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கான முகமாகவும் பயன்படுத்திக் கொண்டார். இடையில் அவ்வபோது மேடம் ஜெயலலிதா... என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் புகழ்ந்து கொள்வார்.
செங்கோட்டையனின் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைக்க அனுமதித்ததும் அதிமுக அனுதாபிகளை மனதில் வைத்து நகர்த்திய காயே. அதிமுகவின் இப்போதைய தலைமை பலவீனமாக இருக்கிறது. தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அரவணைத்துக் கொள்ள மறுக்கிறது. உங்களுக்கு கவலையே வேண்டாம். என்னிடம் தவெக என்று ஒரு கட்சி இருக்கிறது.
அது அதிமுகவின் நீட்சிதான். எனக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மீது பெரும் பற்று உண்டு. அவர்களின் அபிமானிகளுக்கும் கட்சிக்குள் உரிய மரியாதை கிடைக்கும். நம்முடைய ஒற்றை எதிரியான திமுகவை வீழ்த்தத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக வந்திருக்கிறேன் இந்த செய்தியைத்தான் விஜய் தொடர்ந்து அதிமுக அனுதாபிகளுக்கு கடத்த நினைத்தார். தேர்தலில் இந்த யுக்தி கைகொடுக்கப் போய்தான் தவெகவுக்கு 35% வாக்கும் கிடைத்தது.

தேர்தலுக்கு பிறகும் தவெக இன்னொரு அதிமுகதான் என்பதை நிலைநிறுத்துவதில் விஜய் முனைப்புக் காட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அதிமுகவினரை சிவப்புக் கம்பளம் விரித்து கட்சிக்குள் அழைத்துக் கொள்கிறார். அவர்களுக்கு பதவியும் கொடுக்கிறார். அதிமுகவை முடிந்தளவுக்கு விழுங்கி செரித்து அரைநூற்றாண்டு காலமாக தமிழகத்தில் அதிமுக வகித்த இடத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டுமென விஜய் நினைக்கிறார். அந்த முயற்சிக்கான களமாக சட்டமன்றத்தையும் தவெக பயன்படுத்திக் கொள்கிறது.
அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் ஜெயலலிதாவின் ஆட்சியை நினைவுப்படுத்தி பேசுகையில், நடந்துகொண்டிருப்பதே அம்மாவின் ஆட்சிதான் என அமைச்சர் ஆதவ் அவையில் குறுக்கிட்டு பேசுகிறார். இது மிகப்பெரிய ஸ்டேட்மெண்ட். ஓ.பி.எஸ்க்கும் செங்கோட்டையனுக்கும் அவையில் வாதம் நடந்துகொண்டிருக்கையில் திடீரென எழுந்தரிக்கும் அமைச்சர் ராஜ்மோகன் செங்கோட்டையனின் சட்டைப்பையில் இருக்கும் ஜெயலலிதாவின் படத்தை பற்றி பேசுகிறார்.
அதை வைத்துக் கொள்ள அவர்களின் தலைவர் ஒப்புக்கொண்டதை அழுத்தி பேசுகிறார். சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அவ்வபோது எம்.ஜி.ஆருடன் அவர் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து அதை முதல்வர் விஜய்யோடு லாவகமாக இணைத்து எம்.ஜி.ஆரையும் விஜய்யையும் ஒரே தட்டில் வைத்துவிடுகிறார்.
நேற்று எடப்பாடி பழனிசாமி பேசிய எந்த விஷயத்திற்குமே அமைச்சர்கள் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தை எடப்பாடி பேசத் தொடங்கும் போதுதான் ஆதவ் எழுந்தரிக்கிறார். 2017 க்கு முன்பான அதிமுகவோடு எங்களுக்கு உடன்பாடு உண்டு. அதன்பிறகான அதிமுகவோடுதான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

நீங்கள் டெல்லியில் சரணடைந்து விட்டீர்கள். உங்கள் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல்தான் அதிமுகக்காரர்கள் தவெகவுக்கு வருகிறார்கள் என மிகத் தெளிவாக ஆதவ் பேசினார். தவெகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்ட பிறகும் அதிமுக குறித்து ஆதவ் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவில்லை.

தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஒற்றை எதிரி தவெகதான் பொசிஷனிங் செய்து போட்டியிலிருந்து அதிமுகவை விலக்கி வைத்தது தவெக. தேர்தலுக்கு பிறகும் தவெக அதே ஆட்டத்தை தொடர்கிறது. கூடுதலாக அதிமுகவை அப்படியே விழுங்கி திமுகவுக்கு எதிரான ஒற்றை பெரும் சக்தியாக நிற்க வேண்டுமென விஜய் விரும்புகிறார். அதனால்தான் அவையிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகழை தவெகவினர் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
1977 இல் நிகழ்ந்ததை போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றார் விஜய். சொன்னதை செய்து காட்டியிருக்கிறார். இப்போது 1977இல் மாற்றத்தை உருவாக்கிய அந்த அதிமுக கட்சியின் மறு உருவமே நாங்கள்தான் எனும் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்.
விஜய்யின் மாஸ்டர் ப்ளானுக்கு எடப்பாடியின் அதிமுக தக்க பதிலடி கொடுக்குமா? அரசியல் ஆட்டங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

