பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது?
பெரம்பலூர் மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்படி மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான மக்கள் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவனத்தில் ரூ. 77.60 லட்சம் முதலீடு செய்து, ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அதனால், தொடர்ந்து பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஏஜென்டுகள் சிலர், பொதுமக்களிடம் எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டி தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பிய மக்களின் செல்போனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் முதலீடு செய்யும்படி கூறினர்.
அதன்படி அன்னமங்கலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரை மொத்தம் ரூ.77.60 லட்சம் வரை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதாவது செயின் லிங்க் முறையில் ஒருவர் மற்றவரைச் சேர்த்துவிடும் எம்.எல்.எம் பாணியில் இந்த வலையில் சிக்கினார். அவ்வாறு ஆட்களைச் சேர்த்துவிடுபவர்களுக்குப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது எனக் கூறி, போலியான பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், பணம் எதுவும் வழங்கவில்லை. ஆனால் அவ்வப்போது, நிறுவனத்தின் சார்பில் நடக்கும் கூட்டத்தில், மக்களைக் கலந்து கொள்ளும்படி கூறினர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகள் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஏஜென்டுகள், முதலீடு செய்த மக்களுக்கு லாபத்தொகையும் கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அந்த நிறுவனம் தங்களை ஏமாற்றுவதை அறிந்த மக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஏஜென்டுகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
மேலும் பணம் செலுத்திய மக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏஜென்டுகளான வெங்கடேஷன் (வயது: 41), லட்சுமணன் (வயது: 39), அழகேசன் (வயது: 40) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், இந்த மோசடி வேளையில் தொடர்புடைய சுரேஷ் என்பவர் வெளிநாட்டில் வசித்து வருவதால், அவரை விசாரிக்க போலீஸார் முயற்சித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
எம்.எல்.எம் பாணியிலான மோசடி வலையில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

