`தமிழ்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், ஜன கண மன என மொத்தம் 12 நிமிடங்கள் நிற்கணுமா? - சசி தரூர் கேள்வி

கடந்த ஜூலை 29-ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30-ம் தேதி மக்களவையிலும் வந்தே மாதரம் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஆனால், இந்தத் திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்று சாடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.

"நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்ட வந்தே மாதரம் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வந்தே மாதரம்

இதன்படி, எந்தவொரு அரசு விழாவின் தொடக்கத்திலும் முடிவிலும், தேசிய கீதத்துடன் சேர்த்து தேசியப் பாடலையும் முழுமையாகப் பாட வேண்டும்.

இரண்டு பாடல்களையுமே பெரிதும் மதிக்கும் ஒருவனாகவும், தேசிய கீதம் முழுமையோடும் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்களைப் பாடத் தெரிந்தவனாகவும் (இதுவரை தேவைப்படாததால் மற்ற நான்கு சரணங்கள் எனக்குத் தெரியாது) இருந்துகொண்டு, நமது தீவிரப் பற்றாளர்கள் கவனிக்கத் தவறிய ஒரே ஒரு நடைமுறைச் சிக்கலை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மனித இயல்பு.

"ஜன கண மன" தேசிய கீதம் இசைக்கப்படும் போது, மக்கள் நியாயமான 52 வினாடிகள் மட்டுமே மரியாதையுடன் எழுந்து நின்று கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால், தேசியப் பாடல் முழுமையாகப் பாடப்பட 3 நிமிடங்களும் 10 வினாடிகளும் ஆகிறது.

இப்போது தமிழ்நாடோ, இந்த இரண்டுக்கும் முன்பாக மேலும் 2 நிமிடங்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என முடிவெடுத்துள்ளது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

ஒவ்வொரு விழாவின் தொடக்கத்திலும் முடிவிலும், மக்கள் மொத்தம் 6 நிமிடங்கள்—அதாவது கூடுதலாக 12 நிமிடங்கள்—ஒரே இடத்தில் மரியாதையுடன் அமைதியாக எழுந்து நிற்பார்கள் என்று உண்மையிலேயே நாம் எதிர்பார்க்கிறோமா?

மரியாதையையும் பொறுமையையும் சட்டத்தின் மூலம் திணித்துவிட முடியுமா?

தேசியப் பாடலுக்கு கூடுதல் மரியாதையை உருவாக்க வேண்டும் என்ற இந்த மசோதாவின் நோக்கம் நிறைவேறாது, மாறாக அதற்கு நேர்மாறான விளைவே ஏற்படும் என நான் அஞ்சுகிறேன்".

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.