இம்சை அரசன் 23-ம் புலிகேசி : அரியணையில் ஒரு கோமாளி! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 14

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!

சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்து, அவனது மீசையை மழித்து, அடையாளத்தை மாற்றி, தங்கக் கிணற்றுச் சிறையிலே போட்டுவிட்டு, அவனது இடத்தில் தம்பி உக்கிரபுத்தன் மன்னனாகிவிடுகிறான். அந்தத் தங்கக் கிணறு என்பதே, புலிகேசி அவனுடைய ஆங்கிலேய நண்பர்களுக்காக, மக்களைப் பாடாய்ப்படுத்தித் தோண்டிக்கொண்டிருந்த ஒரு சுரங்கம்தான். ஒரு நாட்டின் மன்னனான தனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே புரியாமல், புலிகேசி திணறிக்கொண்டிருக்கும் அந்தக் காட்சிகள் ரசமானவை.

மண்ணையும், கல்லையும் தோண்டி மேலே கொண்டுபோய் போடுவதற்குள் புலிகேசிக்கு நாக்குத் தள்ளிப்போகும். “இந்தத் தங்கக்கிணறு திட்டத்தை ஆரம்பிச்சு வைச்ச என்னைய நானே செருப்பால அடிச்சிக்கணும். பாடாய்ப் படுத்துறானுகளே… யாரங்கே, அடேய் யார்றா அங்கே? குடிக்க தண்ணியாவது குடுங்கடா” என்று இன்னும் மன்னர் எனும் அதிகார நினைப்பிலேயே, புலிகேசி கதறிக்கொண்டிருப்பான். ஒருசமயம், சக சிறைவாசியான ஒரு கைதியுடன் பேசிக்கொண்டிருக்கையில், ‘ஆமா, உன்னை எதுக்காக சிறையில் போட்டாங்க?’ என்று கேட்பான்.

இம்சை அரசன் பிரச்னை

“நாடு இப்ப இருக்கிற நிலைமையில இந்தத் தங்கச்சுரங்கம்லாம் தேவைதானா என்று கேட்டேன். உடனே கெடா சட்டத்துல தூக்கி உள்ள போட்டுட்டான்”

கருத்து சுதந்திரம் அந்த லட்சணத்தில் இருந்திருக்கிறது புலிகேசியில் ஆட்சியில்!

“யாரு?”

“இந்த நாட்டை ஆண்டுகிட்டு இருக்கானே மாங்கா மடையன் புலிகேசி, அவந்தான். நீயே சொல்லுய்யா, இங்க அவனவனுக்குக் குடிக்கவே கஞ்சியில்ல, இதுல இப்படி வெட்டித்தனமெல்லாம் எதுக்குய்யா?”

“இங்கே உட்கார்ந்துகொண்டு ஆயிரம் பேசலாமடா. ஆனால், அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து பார்த்தால்தானடா அதன் வலி தெரியும். இந்த நாட்டின் அரசன், மாவீரன் புலிகேசியின் அறிவும், ஆற்றலும், சிந்தனையும், செயலும்தானடா இந்த நாட்டின் செழிப்புக்குக் காரணமாகயிருக்கிறது. இன்னொரு முறை அரசனை இப்படி அவதூறாகப் பேசினால் உன்னை சிறையில் தள்ளிவிடுவேன் கிராதகா”

என்று சொல்லிவிட்டு ‘அய்யய்யோ, நாமே சிறைக்குள்தான் கிடக்கிறோமா’ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொள்வான். அதாவது குடிக்க கஞ்சிக்கு வழியில்லை என்பது பொதுமக்களில் ஒருவனான அந்தக் கைதியின் கருத்து. நாடு செழிப்பாக இருந்துகொண்டிருக்கிறது என்பது நாடண்ட மன்னனின் கருத்து. எல்லா காலத்திலும் இதுதான் ஆளுபவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்குமான வித்தியாசமாக இருக்கிறது.

இன்னொரு நாள், காவலாளிகள் இருவர் பேசிக்கொண்டே செல்வார்கள்.

“யார் செய்த புண்ணியமோ, நம்ம அரசருக்கு நல்ல புத்தி வந்து நன்றாக நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்”

அதைக் கேட்ட புலிகேசி அதிர்ச்ச்சியுடன்,

”என்ன, அரசர் ஆண்டுகொண்டிருக்கிறாரா? எந்த அரசர்?”

“எந்த அரசரா? நமது புலிகேசிதானடா!”

”புலிகேசியா?”

என்று அதிர்ச்சியடையும் புலிகேசி, மேலும் விபரம் கேட்டதும்,

“தண்ணிப்பிரச்சினைக்கு அணையப்பரிடம் பேசியாச்சு, ஜாதிச் சண்டை மைதானத்தை இடிச்சாச்சு, அக்காமாலா குளிர்பானத்தை ஒழிச்சாச்சு, பிள்ளைகள் படிப்புக்கு பள்ளிக்கூடம் கட்டியாச்சு… உனக்கு வேறென்ன தெரியணும்?”

இம்சை அரசன் 24-ம் புலிகேசி | வடிவேலு

“ஆமா, இதெல்லாம் செஞ்சது யாரு?”

“23-ம் புலிகேசி”

“என்னது, 23-ம் புலிகேசியா?”

என்று மீண்டும் அதிர்ச்சியடையும் புலிகேசியின் வாயிலேயே காவலர்கள் குத்த வருவார்கள்.

மன்னர் கதைகள் தமிழ் சினிமாவுக்குப் புதிதானதல்ல, 1970-க்கு முன்பு வரை அப்படியான படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தன என்றாலும், இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்ற ஒரு கதை, இந்திய சினிமாவே அதுவரைக்கும் பார்த்திராத, மற்றும் எதிர்பார்த்திராத ஒரு கதையாக அமைந்துவிட்டது. இப்படியான ஒரு கதையமைப்புக்கு மேலை நாடுகளிலும் கூட முன்னுதாரணம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில்தான் 23-ம் புலிகேசி தனித்து நிற்கிறான்.

வரலாற்றில் பொறுப்பற்றவர்களாக, திறமையற்றவர்களாக, கோழைகளாக எத்தனையோ மன்னர்கள் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். ஆனால், இப்படி நகைச்சுவைத் தன்மை நிறைந்த ஒரு மன்னன் வாழ்ந்திருப்பானா என்பது சந்தேகமே! அப்படியே இருந்திருந்தாலும் வரலாற்றின் பதிவு செய்யப்படாத பக்கமாகத்தான் அது போயிருக்கும்.

இந்தப் படத்தின் அடிப்படை, அப்படியொரு ஜாலியான, நகைச்சுவைக் குணம்கொண்ட ஒரு மன்னன். அதற்கேற்பவே படம் முழுதும் புலிகேசியின் அட்டகாசங்கள் நிறைந்திருக்கின்றன. கூடவே அவன் கோழையாகவும், பொறுப்பற்றவனாகவும் இருக்கிறான். அதனால் நாட்டு மக்களுக்குச் சிரமம் நிலவுகிறது. அதோடு ஆங்கிலேயர் வல்லாட்சிக்குக் கப்பம் கட்டி சலாம் போடுபவனாகவும் இருக்கிறான். இதற்கெல்லாம் காரணமாக, ராஜகுருவான சங்கிலிமாயனின் சதி இருக்கிறது. சிறு வயதில் பிரிக்கப்பட்ட புலிகேசியின் சகோதரன் வந்து எல்லா சிக்கல்களையும் சரி செய்து, நிலைமையைச் சீராக்குகிறான். அவன் மூலமாக கதையும் ஒரு முடிவுக்கு வருகிறது.

கி.பி 1790-களில் நடப்பதான கதை. அது வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த காலம். தொடக்கக் காட்சியொன்றில் வரி வாங்கிச் செல்ல வெள்ளையர் தளபதி நிக்சன் வருவான். அவனை ஆரத்தழுவி வரவேற்பான் புலிகேசி.

“உங்ள மாதிரி எல்லோரும் குட் பீப்பிளா இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும், ஆனா அப்டியில்ல புலிக்கேசி” என்று சலித்துக்கொள்வான் நிக்சன்.

“அப்படி யாரு வரிகொடுக்காமல் வம்பு செய்வது? என்னிடம் சொல், நான் அதட்டி வைக்கிறேன்” என்று சொல்வான் புலிகேசி.

“வேற யாரு, கட்டபொம்மன்தான்”

அந்த வார்த்தையைக் கேட்டதுமே ஒரு விநாடி உச்சி முதல் உள்ளங்கால் முதல் வரை ஆடிப்போய், மூச்சு வாங்கிவிடும் புலிகேசிக்கு!

இப்படிப் படம் நெடுக ரசனையான, நகைச்சுவைக் குவியலாக குவித்து வைத்திருப்பார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய சிம்புதேவன். படம் தொடங்கும் போதே, ’நள்ளிரவு, ஆந்தைகள் பிளிறும் நேரம்’ என்று குறிப்பு வரும். எந்த ஊரில் ஆந்தைகள் பிளிறுகின்றன என்று அவரைத்தான் கேட்க வேண்டும்.

முதல் காட்சியில் மாமன்னர் மொக்கையப்பர், மந்திரி சங்கிலிமாயன் என்ற எழுத்துக் குறிப்புகள் வரும்போதே, தூரத்தில் நிற்கும் காவலாளிக்கும், ’அரண்மனைக் காவலன்’ என்று குறிப்பு வரும். அப்போதே தெரிந்துவிடுகிறது நாம் எப்படிப்பட்ட படத்துக்கு வந்திருக்கிறோம் என்று. ஆனால், அதன் தொடர்ச்சியாக, ‘அரண்மனைப் பல்லி’ என்று வட்டம் போட்டுக் காண்பித்து, நீங்கள் நினைப்பதைவிடவும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகத்தான் இருக்கும் என்பதை சிம்புதேவன் சொல்லிவிடுகிறார்.

சிம்புதேவன் அடிப்படையில் ஓர் எழுத்தாளர், ஒரு கார்டூனிஸ்ட், ஒரு நகைச்சுவையாளர். இந்தக் கூட்டுத்திறமையே அரிதான ஒன்றுதான். 2000-க்கு சற்று முன்னும் பின்னுமாக ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளியான புலிகேசி ஜோக்ஸ்தான் இந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடக்கம். முன்னதாக பிரபல கார்டூனிஸ்ட்டும், பத்திரிகையாளருமான மதன், ரெட்டைவால் ரெங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா போன்ற பல ரசனையான கேரக்டர்களை உருவாக்கி அவற்றைத் தொடர் ஜோக்ஸாக உருமாற்றியிருந்தார். விகடனில் வெளியாகி மிகவும் புகழ்பெற்ற ஜோக்ஸ் தொடர்கள் அவை.

அதை அடியொற்றியே சிம்புதேவனின் இந்தத் தொடர் ஜோக்ஸ், ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டு, பெரும் வரவேற்பையும் பெற்றன. கூடவே டைம் மிஷினை அடிப்படையாகக் கொண்டு கி.முவில் சோமு எனும் காமிக்ஸ் தொடரையும் சிம்புதேவன் உருவாக்கியிருந்தார். அந்த அனுபவங்களால்தான் அவரால் இப்படியொரு கதையை யோசிக்கவும், அதைச் சாத்தியப்படுத்தவும் முடிந்திருக்கிறது. சிம்புதேவன் புலிகேசியைத் தொடர்ந்து அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், புலி போன்ற முற்றிலும் புதுமையான கதைகளைச் சினிமாவாக எடுத்திருந்தாலும், 23-ம் புலிகேசிக்கு இணையாக இன்னொன்று உருவாகவில்லை என்பதே நிஜம்.

புலிகேசியின் மிகச்சிறப்பான அம்சம் அதன் ஒளிப்பதிவும், கலை இயக்கமும். ஒளிப்பதிவைச் செய்தவர் ஆர்தர் ஏ வில்சன். ரிதம், அன்பே சிவம் போன்ற படங்களில் அற்புதமான ஒளிப்பதிவைத் தந்தவர் அவர். இப்படி ஒரு காமெடி படம் என்றதும், அதைக் கலர்ஃபுல்லாகப் பண்ணினாலும் தவறில்லை என்ற யோசனை எழுந்திருக்கலாம். ஆனாலும், மிகத் துணிச்சலாக முழு படத்தையும் செபியா டோனில், அழுத்தமான வண்ணங்கள் இல்லாமல் ஒளிப்பதிவு செய்து, 200 வருடப் பழமையான உணர்வைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருந்தார்.

பி.கிருஷ்ணமூர்த்தி கலை இயக்கத்தைச் செய்திருந்தார். காமிக்கல் உயர்வு நவிற்சி பக்கமும் போய்விடக்கூடாது, அது லைவ் ஆக்‌ஷன் உணர்வைக் கெடுத்துவிடும். அதற்காக ரியலிஸ்ட்டிக்காகவும் செய்துவிட முடியாது, முதன்மையாக இது ஒரு காமெடிப் படம். நிச்சயம் சிம்புவின் முழுமையான ஆலோசனை இருந்திருக்கும் என்றாலும், புலிகேசியின் செங்கோல் அளவு, அவனது மீசையின் அளவு, அவனது சிம்மாசனத்தின் விளையாட்டுத்தனம், தளபதி அகண்டமுத்துவின் கொண்டையின் அளவு என எல்லாவற்றிலும் இடம் வலம் நழுவாது மிகக் கச்சிதமாக ரியலிசமும், காமிக்கல் சென்ஸும் இரண்டறக் கலந்திருந்தது.

இசை சபேஷ்-முரளி. பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன். மாணிக்க விநாயகம் பாடிய, ’ஆடி வா, பாடி வா’ பாடல் புலிகேசியின் உல்லாச வாழ்க்கையையும், திப்பு பாடிய ‘பூட்டிய சிறையினை உடைப்போம்’ பாடல் உக்கிரபுத்தனின் நோக்கத்தையும் வெளிப்படுத்தின. பின்னணி இசையின் சிறப்பைப் புலிகேசிக்கும், உக்கிரபுத்தனுக்குமான தீம் இசையிலிருந்த வேறுபாட்டிலேயே உணரமுடிந்தது.

நகைச்சுவைக் காட்சிகள் புலிகேசியைச் சுற்றி வந்தாலும், உக்கிரபுத்தனைச் சுற்றி எப்போதும் சீரியஸான காட்சிகளும், உணர்வுகளுமே சுற்றிக்கொண்டிருக்கும். குறிப்பாக இறுதியில் சில பரபரப்பான காட்சிகள் இருந்தன. பின்னணி இசை அந்த வேறுபாடுகளை எந்தச் சிக்கலுமில்லாமல் வெளிப்படுத்தியிருந்தது.

வடிவேலு, நாசர் போன்று பெரிய பாத்திரங்கள் செய்தவர்கள் மட்டுமல்லாது, சிறு காட்சிகளில் வந்துபோன நடிகர்களும் கூட இந்தப் படத்தின் அடிப்படை உணர்வை கச்சிதமாக உள்வாங்கி நடித்திருந்தனர். நாசர் முற்றிலும் புதுமையான ஒரு காமிக்கல் முகபாவத்தோடு சங்கிலிமாயனைக் கொண்டு வந்தார். இளவரசுவுக்கு, புலிகேசிக்கு ஜால்ரா அடிக்கும் மங்குனிப்பாண்டியன் பாத்திரம். ஸ்ரீமனுக்கு தளபதியாக நாட்டுக்காக சிந்திக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம்.

விஎஸ்.ராகவன், நாகேஷ், மனோரமா, எம்என் ராஜம், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பழம்பெரும் நடிகர்களும் கேமியோ ரோல்களில் படத்துக்குச் சிறப்புச் சேர்த்திருந்தனர். மோனிகா, தேஜாஸ்ரீ, மனோபாலா, தியாகு, முத்துக்காளை, சிங்கமுத்து, போண்டாமணி, சிசர் மனோகர் போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.

வடிவேலுவுக்கு ஹீரோவாக இது முதல் படம். இதில், 23-ம் புலிகேசியாகவும், உக்கிரபுத்தனாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். வடிவேலு தன் காலம் முழுதும் ஒரு நகைச்சுவை நடிகராகவும், ஒரு எண்டர்டெயினராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் என்றாலும் அவர் முதன்மையாக எல்லாக் கதாபாத்திரங்களையும் சிறப்பாக ஏற்று நடிக்கக்கூடிய ஒரு தேர்ந்த நடிகர். பிற்காலத்தில் அவர் நடித்த மாமன்னன், மாரீசன் போன்ற படங்கள்தான் அதற்கு உதாரணம். அதன் முன்னோட்டமாகவே இந்தப் படத்தின் உக்கிரபுத்தன் பாத்திரம் அமைந்திருந்தது.

புலிகேசியாக ஒருபுறம் அவரது கிரவுண்டில் அடித்து ஆடிக்கொண்டே, இன்னொரு புறம் ஒரு ஹீரோவாக, பொறுப்பான பாத்திரத்தில், சீரியஸான காட்சிகளையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். தொடர்ந்து இன்றுவரை அவ்வப்போது தெனாலிராமன், எலி, கேங்கர்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், காமெடியில் இம்சை அரசனைப் போன்ற ஓர் இம்பாக்ட்டை அவரால் நிகழ்த்த முடியவில்லை.

சமீபத்தில், இந்தப் படத்தின் தொடர்ச்சியாக உருவாகவிருந்த, ’24-ம் புலிகேசி’ படம் கைவிடப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் வடிவேலுவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை செய்திகளின் மூலம் ஊகிக்க முடிகிறது. ஒரு சிறந்த நடிகர் முடிவெடுக்கும் திறனிலும், மற்ற விசயங்களிலும் சிறப்பானவராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், இழப்பு ரசிகர்களாகிய நமக்குதான்.

ஒரு நல்ல அரசன் எப்படி இருக்கக்கூடாது என்பதைக் குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் காட்டிச் சிரிக்க வைத்ததுதான் இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் வெற்றி.

பொறுப்பற்ற ஆட்சி, வெளிநாட்டு சக்திகளுக்குக் அடிபணியும் கோழைத்தனம், சாதிப் பிரச்சினை, கல்வியின் முக்கியத்துவம், கருத்துச் சுதந்திரம் என சமூகத்தின் பல பிரச்சினைகளை இந்தப்படம் நகைச்சுவைக்குள் இயல்பாகப் பொதிந்து வைத்திருக்கிறது. அதனால்தான், இந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி, வெறும் காமெடியனாக மட்டுமே காலத்தில் கரைந்துபோய்விடாமல், தனக்கென ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.!

(தொடரும்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.