தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? - மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை மோடி-லிமிட்டேஷன் என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...

‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி.

தொகுதி மறுவரையறை

கடந்த ஏப்ரல் 17 அன்று இந்தியா கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.

ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?

- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!

- 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!

- எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.

- கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.

- சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.

இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள QUIT UNFAIR DELIMITATION MARCH பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!

நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைப்பயணம்.

மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் Unfair Delimitation பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.