``முதலமைச்சரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை - அன்புமணி ராமதாஸ்
சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``காவிரி பிரச்னையில் தி.மு.க தொடர்ந்து தமிழகத்திற்குத் துரோகம் செய்து வருகிறது. 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அழுத்தத்தால் அன்றைய முதல்வர் கலைஞர் வாபஸ் பெற்றார். அப்போது பெறாமல் இருந்திருந்தால் அப்போதே தீர்வு கிடைத்திருக்கும். 1971, 72, 73-ல் தமிழ்நாட்டின் அனுமதியின்றி கர்நாடகா ஹேமாவதி, கபினி, ஹாரங்கி ஆகிய 3 அணைகளைக் கட்டியது. அதற்குச் சட்டமன்றத்தில் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
1974-ல் 50 ஆண்டு கால ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை. 2007-ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் அதிகாரம் மிக்க காவேரி மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வழிவகை இருந்தும், தி.மு.க அரசு அதை மெத்தனமாகக் கிடப்பில் போட்டது. 2013-ல் ஜெயலலிதா அரசாங்க இதழில் வெளியிட்ட பிறகே சிக்கல்கள் நகர்ந்து, 2018-ல் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் கடந்த மார்ச் மாதம் யாருக்கும் தெரியாமல், மேகதாது நடுவர் மன்றம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு ரகசியக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆற்றின் பிரச்னைக்குத் தான் நடுவர் மன்றம் அமைக்கலாமே தவிர, அதில் கட்டப்படும் அணையின் பிரச்னைக்கு அமைக்க மாட்டார்கள்.
சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திருத்தம் கொண்டு வந்தார். நடப்பு ஆண்டில் சூப்பர் எல் நினோ தாக்கம் உள்ளதால், குடிநீர் மற்றும் விவசாயப் பிரச்னையைக் கையாள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கூட்டு முடிவெடுத்துச் சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அமைச்சர்கள் வரை சென்று அழுத்தம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் இது குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

கபினி மற்றும் குடகு மலைப் பகுதிகளில் பெய்த மழையால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதே தவிர, கர்நாடகா தானாகத் தண்ணீர் தரவில்லை. உச்ச நீதிமன்ற அட்டவணைப்படி ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. ஊட்டியில் பவானி ஆறு, நொய்யல், அமராவதி, பில்லூர் அணை போன்ற நீர்நிலைகள் உள்ளன. அதுமட்டுமின்றி நல்லார் பாம்பார், பாண்டியார் பொன்னம்புழா போன்ற திட்டங்கள் மூலம் கேரளாவுக்குச் செல்லும் தண்ணீரைப் பேச்சுவார்த்தை நடத்தி, 14 கி.மீ சுரங்கம் அமைத்துக் கொண்டு வந்தால் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றலாம்.
மேலும், காவிரி - குண்டாறு திட்டத்திற்கு ரூ.15,000 கோடி தேவைப்படும் நிலையில், ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம், சோழர் பாசன திட்டம், மேட்டூர் உபரி சரபங்கா திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தேவை.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் போக்கு, அரசு வேலைகளைத் தற்காலிகப் பணியிடங்களாகவும் தனியார்மயமாக்கும் திசையிலும் சென்று கொண்டிருக்கிறது. போக்குவரத்துத் துறையில் மின்சாரப் பேருந்துகளைத் தனியாரைக் கொண்டு இயக்குவது, மின்சார வாரியப் பணிகளைக் கான்ட்ராக்ட் விடுவது, துப்புரவுப் பணியாளர்களைத் தனியார்மயமாக்குவது போன்ற சூழல்கள் உள்ளன.

மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான ஐவர் குழுவின் பரிந்துரை விதிமுறைகளில் அரசு நிலங்களை விற்பது அல்லது லீஸ் விடுவது, பயன்பாட்டுக் கட்டணங்களை உயர்த்துவது, மது விற்பனை மூலம் வருவாயைப் பெருக்குவது போன்றவை இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 6.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தனியார்மயமாக்கல் சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிராக அமையும்.
கடந்த 19 ஆண்டுகளாகப் பாமக நிழல் வேளாண் பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறது. 13 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு 2021-ல் தனி வேளாண் பட்ஜெட் கொண்டு வரப்பட்டது. ஆனால், நடப்பு பட்ஜெட்டில் மொத்த பட்ஜெட் தொகையான ரூ4,63,000 கோடியில் 25% விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வேளாண் துறைக்கு ரூ.14,000 கோடி என மொத்தமாக ரூ.58,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டப் பங்களிப்புத் தொகையும் அடங்கும்.

தமிழ்நாட்டில் விளையும் 120 லட்சம் டன் நெல்லில் அரசு 40 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்கிறது. அதிலும் 18 லட்சம் டன் சேமிக்கும் வசதி மட்டுமே உள்ளதால் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. மேலும், மகாராஷ்டிராவில் ரூ.36,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல, தமிழ்நாட்டிலும் கூட்டுறவு வங்கி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒருபுறம் படிப்படியாக மதுவிலக்கு என்று கூறிவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவது, மது விற்பனைக்குச் செயலி கொண்டு வருவது, தனியார்மயமாக்குவது போன்ற முயற்சிகள் நடக்கின்றன.
கடந்த ஆண்டில் மது மூலம் ரூ.56,000 கோடி வருமானம் வந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகில் மூடப்பட்ட மதுக்கடைகள் மற்றும் சந்துக்கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. மேலும், சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதை வரவேற்றாலும், சமூக நீதி கணக்கெடுப்பிற்கு அறிவிப்பு மட்டும் வந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் அணுகுமுறை சரியான ஒன்றாகும்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

