ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் - மாணவர்கள் அமைப்பு உறுதி
டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேர்வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் தலைவர் ரவீந்திர பாஸ்வான், ``JSSC தேர்வுகள், TDPL முகமை நடத்திய தேர்வுகள் மற்றும் அரசுப் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி அபய் திவாரியுடன் தொடர்புடைய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்வு வாரியங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்" ஆகிய என மூன்று முதன்மை கோரிக்கைகளை முன்வைத்தார். தங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று, ராஞ்சியில் உள்ள மாநில அரசு விருந்தினர் மாளிகையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நான்கு அமைச்சர்கள் அடங்கிய மாநில அரசுப் பிரதிநிதிகள் குழுவும், JPSC, JSSC தேர்வர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பேர் கொண்ட மாணவர் குழுவும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை விவாதித்தன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சர் தீபிகா பாண்டே சிங், ``மாணவர்களின் முதன்மை கோரிக்கைகள் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சில விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும். அதே வேளையில், போராட்ட களத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவி இடையூறு விளைவிக்க வாய்ப்புள்ளதால், மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது." என்றார்.
அரசின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த மாணவர் தலைவி நீது குஜூர், ``தங்களது மேடையில் தேச விரோத சக்திகளோ அல்லது டூல்கிட்களோ இல்லை. அரசுடனான இந்தச் சந்திப்பு நேர்மறையான சூழலில் நடைபெற்றது, சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசு ஆர்வம் காட்டுவது நம்பிக்கையளிக்கிறது. அரசு சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்புவதாகக் கூறியிருந்தாலும், கோரிக்கைகள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். முதலமைச்சரின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும்" எனக் குறீப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

