Meta: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு ரூ.4,750 கோடி அபராதம்! - ஏன் இந்த தண்டனை?
கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களால் சிறுவர், சிறுமியரின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பல குற்றச்சாட்டுகள் உலகெங்கும் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, நியூ மெக்சிகோ மாகாணத்தின் தலைமை வழக்கறிஞர் ராவுல் டோரஸ் (Raul Torrez) என்பவர் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக ஒரு மாபெரும் வழக்கைத் தொடர்ந்தார். மெட்டா நிறுவனம் தங்களின் லாபத்திற்காகவும், பயனர்களைத் தொடர்ந்து வலைதளத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் தங்கள் தளங்களை வடிவமைத்துள்ளது என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.
இதை விசாரித்த நீதிமன்றம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்திற்கு 567 மில்லியன் டாலர்கள் (சுமார் 4,750 கோடி ரூபாய்) அபராதம் விதித்து ஆகஸ்ட் 6, 2026 அன்று தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காகவும், அவர்களின் மனநலனைப் பாதித்ததற்காகவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாசுபடுத்தும் தொழிற்சாலை
நீதிபதி பிரையன் பீட்ஷெய்ட் (Bryan Biedscheid) தனது தீர்ப்பில் மெட்டா நிறுவனத்தை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கு ஒப்பிட்டுள்ளார். அந்தத் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் பொருள் விளம்பரங்கள் என்றும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பாதிப்புகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் அத்தொழிற்சாலை வெளியிடும் நச்சுப் புகை (Pollution) என்றும் விமர்சித்துள்ளார். அந்த நச்சுப் புகையைச் சுத்தம் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் மெட்டாவிற்கு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அபராதத் தொகை எதற்குப் பயன்படும்?
மெட்டா செலுத்த வேண்டிய இந்த 567 மில்லியன் டாலர் தொகையானது நேரடியாக அரசாங்க கஜானாவிற்குச் செல்லாது. இதில் பெரும்பகுதியான 420 மில்லியன் டாலர்கள், சமூக வலைதளங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியருக்கான மருத்துவ சிகிச்சை மையங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படும்.
மெட்டாவிற்கு விழும் இரண்டாவது அடி
இந்த 567 மில்லியன் டாலர் என்பது வழக்கின் இரண்டாம் கட்டத் தீர்ப்பாகும். இதே வழக்கின் முதற்கட்ட விசாரணையில் (மார்ச் 2026) நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் முறைகேடு செய்ததற்காக மெட்டாவிற்கு 375 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் மெட்டா நிறுவனம் நியூ மெக்சிகோ மாகாணத்திற்கு மட்டும் 940 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் 7,900 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும்.

புதிய கட்டுப்பாடுகள்
பணம் செலுத்துவது மட்டுமன்றி, பல புதிய நடைமுறை மாற்றங்களையும் மெட்டா கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள பதின்ம வயதினர் (Teenagers) இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு மாதாந்திர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.
நள்ளிரவில் அவர்களுக்கு நோட்டிபிகேஷன்கள் செல்லக் கூடாது.
முன் அறிமுகம் இல்லாமல் பெரியவர்கள் சிறுவர்களிடம் தொடர்புகொள்வதைத் தடுக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கை சரியா? தவறா?
இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானதே என்பது சமூக ஆர்வலர்கள், குழந்தை நல மருத்துவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாகும்.
தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பல ஆண்டுகளாகத் தங்கள் பயனர்களின் பாதுகாப்பை விட, லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சமூக வலைதள அல்காரிதம்கள் எந்த அளவுக்கு ஒருவரை அடிமையாக்குகிறதோ, அந்த அளவுக்கு நிறுவனங்களுக்கு லாபம். இதனால் சிறுவர்கள் ஆபாச உள்ளடக்கங்களுக்கு ஆளாவதும், பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குவதும் அதிகரித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு, பெரும் நிறுவனங்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. "நீங்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்" என்ற நிலைப்பாட்டை இது உருவாக்கியுள்ளது. மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநல சிகிச்சைக்கே பயன்படுத்த உத்தரவிட்டிருப்பது மிகச் சிறந்த, ஆக்கபூர்வமான அணுகுமுறையாகும்.
எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தாலும், அவை சமூகப் பொறுப்புணர்வுடனும் சட்ட விதிகளுக்கு உட்பட்டும்தான் செயல்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது. நிறுவனங்களின் லாபத்தை விட, வருங்காலத் தூண்களான குழந்தைகளின் பாதுகாப்பும் மனநலனும் பல மடங்கு முக்கியமானது. இது போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலமாகவே இணைய உலகை நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்ற முடியும். அந்த வகையில், நியூ மெக்சிகோ நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை வரவேற்கத்தக்க மற்றும் முன்மாதிரியான ஒன்று.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


