மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம்

மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு முக்கிய ஆதரமாக விளங்குகிறது. மயிலாடுதுறை ரயில் சந்திப்பினை அதிநவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ரயில் சந்திப்பாக உயர்த்தும் நோக்கில் "அம்ரித் பாரத்" திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, எஸ்கலேட்டர், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை, கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ரூ.20 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புனரமைப்பு காரணமாக புதிய கழிவறைகள் கட்டப்பட்ட நிலையிலும், பழைய கழிவறைகள் அகற்றப்படாமல், பேருந்து நுழைவாயிலிலேயே இருந்து பேருந்துகள் வந்து செல்வதற்கு இடையூறாகவும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளன.

இது குறித்துப் பகுதி மக்களிடமும் பயணிகளிடமும் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``புதுசா பாத்ரூம் கட்டுனதும், பழச இடிச்சிடுறதா தான் சொன்னாங்க. ஆனால், புது பாத்ரூம் கட்டி ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்ப நாங்க பயன்படுத்துற பாத்ரூம் பஸ் ஸ்டாண்டுக்கு இடையூறாதான் இருக்கு. இதனால, வர பஸ் எல்லாம் பாத்ரூம்க்கு முன்னாடி நிக்குது, இல்ல பின்னாடி தான் நிக்குது. நடுவுல நந்தி மாதிரிதான் இந்த பாத்ரூம் இருக்கு. இப்படி இருக்குறதுனால, பஸ் எல்லாம் வந்து திரும்பவும் ரொம்ப சிரமமா இருக்கு. பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் நுழையிற பகுதியவே இந்த பாத்ரூம் அடைச்சு வச்சிருக்கு. முக்கியமான ரயில்கள் வரும்போது பயணிகள் கூட்டம், அதிக அளவிலான வாகனங்கள்னு கூட்ட நெரிசல் ஏற்படுது.

கட்டுன புது பாத்ரூம்ல உள்ள அளவுக்கு வசதி இதுல கிடையாது. சும்மா அவசரத்துக்கு பயன்படுத்தலாம், அவ்வளவுதான். எல்லா வசதியோட புதுசா பாத்ரூம்ம கட்டுனது பூட்டி வைக்கத் தானா? எங்களோட பயன்பாட்டுக்கு இல்லையா? சீக்கிரமா புதுக் கட்டடத்தை திறந்துடுங்க. அதுவும், இந்த பாத்ரூம் போலவே இலவசக் கட்டணத்திலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வாங்க. பின்னர் இடையூறா இருக்க பாத்ரூம இடிச்சிடுங்க" என்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் பேசுகையில், "பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக தற்போது உள்ள கழிவறை கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று ரயில்வே தரப்பில் கூறிய நிலையில், புதிய கழிவறை கட்டடம் கட்டிய பின்புதான் இதனை இடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேட்டுக்கொண்டதன் பேரில், புதிய கழிவறை கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால், பணிகள் முடிந்து ஆறு மாதக் காலம் ஆகியும் புதிய கழிவறை கட்டடம் திறக்கப்படவும் இல்லை; பழைய கட்டடம் அகற்றப்படவும் இல்லை. பழைய கட்டடத்தால், ஓட்டுநர்கள், பயணிகள் உட்பட அனைவருமே மிகுந்த சிரமமடைகின்றனர். ரயில்வே துறைக்கும் நகராட்சிக்கும் இடையே பரஸ்பர இணக்கமின்மையால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இது குறித்து ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வினோத்திடம் கேட்டபோது, ``பழைய கழிவறைகளை அப்புறப்படுத்துவது முழுவதும் நகராட்சி நிர்வாகத்தைச் சார்ந்தது. மேலும் புதிய கழிவறைக்குப் பாதாள கழிவுநீர் வடிகால் (UGD) இணைப்பு தர வேண்டி நகராட்சிக்கு மனு அனுப்பியுள்ளோம்" என்றார்.

தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சசிகலாவிடம் பேசியபோது, "பழைய கழிவறைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக நகராட்சி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறோம். புதிய கழிவறைகளுக்குப் பாதாள கழிவுநீர் வடிகால் (UGD) இணைப்பிற்காக ரயில்வே துறை சார்பாகச் சொத்து வரியும், சேவை வரியும் செலுத்த வேண்டும். எனினும் UGD இணைப்பிற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.