பாத்துக்கலாம் என்ற ஒற்றை வார்த்தை! – மூடநம்பிக்கைகளை உடைத்து தன்னம்பிக்கை விதைத்த தாய்க்கிழவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"ஆல மரத்து வேரு

எங்க அப்பத்தா-ன்னு பேரு! "

தாய்க்கிழவி படத்தில் வரும் ராதிகா அவர்களின் கதாபாத்திரம் எனக்கு அப்படியே என் அப்பத்தாவைத் தான் ஞாபகப்படுத்தியது.‌ எப்படி என்கிறீர்களா? இதோ சொல்கிறேன்...

என் அன்பு அப்பத்தா...

இளம் வயதிலேயே திருமணம். பத்து பிள்ளைகள். 

கைப்பிள்ளை இருக்கும்போதே கைம்பெண் ஆனது கொடுமை! 

அடுத்தடுத்து அடுக்கடுக்காய் சவால்கள். நெருக்கிய  நெருக்கடிகள். துரத்திய துன்பங்கள்‌. அனைத்தையும் தைரியம் என்ற‌ ஒற்றை ஆயுதம் கொண்டு வென்று நின்ற வீரமங்கை! 

பாரதி கண்ட புதுமைப் பெண்.‌ மூடப் பழக்கங்கள் பலவற்றை முறியடித்த மூதாட்டி. தாய்ப்பாலோடு தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்த உத்தமி. பிள்ளைகள், பேரன் பேத்தியர் அனைவரையும்  சவால்களை சந்திக்கும் சமத்தர்களாக வளர்த்த வழிகாட்டி.

பாசமோ, பாடமோ, 

அன்போ,  அரவணைப்போ, அடியோ, தடியோ, திட்டோ, கொட்டோ, அறிவுரையோ, தண்டனையோ, 

கொஞ்சலோ, கெஞ்சலோ - அனைத்தையும் சரியான‌ நேரத்தில் ப்ரயோகிப்பாள்.

தான் படிக்காவிட்டாலும் அனைத்து பிள்ளைகளையும் அவரவர் வழியில் சென்று படிக்க வைத்த பகுத்தறிவாதி. 

செட்டிநாட்டில் மிக பிரமாண்ட வீடு அவளுடையது. 

ஒரு முறை விவரம் தெரிந்த வயதில் அப்பத்தா வீட்டில் உள்ள கல் தூண்களை இணைக்கும் மரச்சட்டத்தில் வரிசையாக சாக்பீஸ் கோடு போட்டிருந்ததை கவனித்தேன். என்னவென்று கேட்டேன். பால் கணக்கு என்றாள்.‌ அதில் மூன்று பெரிய கோடுகளும், ஒரு சிறிய கோடும் இருந்ததைப் பார்த்தேன். மூன்றரை லிட்டர் பால் அன்றைய தினத்தில் வாங்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்து கொண்டேன். படித்தவர்கள் போடும் கணக்கு கூட தப்பலாம்.‌  இந்த படிக்காத மேதையின் கணக்கு...ம்ஹும்! 

நாமெல்லாம் ஸ்நாக்ஸ் வாங்கி வைத்தால், அதில் எரும்பு வராமலிருக்க லக்ஷ்மண் ரேகா கோடு, எரும்புப் பொடி என்றெல்லாம் போட்டு காப்பாற்றுகிறோம். என் அப்பத்தா என்ன செய்வாள் தெரியுமா? இனிப்பு பலகாரங்களை தூக்குச் சட்டியில் அடைத்து, அறையின் உட்கூரையில் குழந்தைகளுக்கான   தொட்டில் கம்பியில்  தொங்கவிட்டுவிடுவாள்! எரும்புகளோ பூச்சிகளோ நெருங்கக் கூட முடியாது.

அப்பத்தாவின் பத்து பிள்ளைகளில் 7 பெண்கள். 3 ஆண்கள். 

ஆடைகள் மீட்டர் அல்ல. ரோல் கணக்கில். இட்லி கணக்கு இரண்டு இலக்கங்களில் அல்ல. மூன்றில்! பலகாரங்கள் டின்களில். அரிசி, பண்டம் என அத்துனையும் மொத்த வியாபார கொள்முதல் தான்! 

வீட்டில் யாரேனும் ஒரு குழந்தை கணக்குப் பாடத்தில் சற்று வீக்காக இருந்தால், அப்பத்தா ட்யூஷனுக்கு உடனே ஏற்பாடு செய்து விடுவார். அந்த ஒரு வாத்தியார் அந்த ஒரு குழந்தைக்கு எடுக்கும் பாடத்தை, கடல் போன்ற அந்த விஸ்தாரமான வீட்டில்,  வாத்தியார் நடத்துவது  காதில் விழக்கூடிய வெவ்வேறு மூளைகளில் அமர்ந்து மற்றவர்கள்  ஓ.சி.யிலேயே பாடம் கற்றுக் கொண்டு விடுவர்! 

ஓரே க(பி)ல்லில், ஏழெட்டு மாங்காய்கள்! 

"மோரு, மோரு", என்று வீதியில் கூவி விற்கும் மோர்க்கார பாட்டி, குச்சி ஐஸ் அண்ணா, பதநீர் தாத்தா, முருங்கைக்காய் அக்கா அனைவருக்கும் மிக முக்கியமான ஒரே வாடிக்கையாளர் என் அப்பத்தா தான்! கூடையும் ஐஸ் பெட்டியும் இங்கு வந்தால் காலி ஆகிவிடுமே! 

பஞ்சாயத்திலும் கோர்ட்டிலும் கூட தீர்க்க முடியாத பலரின் சண்டை சச்சரவுகளை அசால்ட்டாய் தீர்த்து வைப்பாள் என் அப்பத்தா! 

பிறப்பும் இறப்பும் ஊரில் எந்த வீட்டில் நிகழவிருந்தாலும்,  நிகழ்ந்தாலும் உறவுக்காரர்களுக்கு முன்பாக,

என் அப்பத்தாவிற்கு  சொல்லி அனுப்பிவிடுவார்கள்! ஏனெனில் அங்கு அவள் பங்கு அளப்பரியது. 

கர்ப்பிணிப் பெண்ணிற்கும், தன் கடைசிக் கிடையில் இருப்பவர்க்கும் நாடியைப் பார்த்தே நாள் குறித்துவிடுவாள் என் அப்பத்தா! 

பிறப்பிற்கும் இறப்பிற்கும் 

பின்னர் உடனடியாக செய்ய வேண்டுவன யாவை? என்பதை அறிவுருத்துவதிலிருந்து,  அவர்களை அமைதிப்படுத்தி ஆறுதல் கூறுவது வரை அனைத்தும் என் அப்பத்தா தான்! 

உதவி செய்வது என்பது  அவளுக்கு அன்றாட நிகழ்வு. சுவாசத்தைப் போன்றது. 

தன் அனுபவப் பாடங்களை ஊருக்கு மட்டுமல்ல உற்றோரின் வாழ்விற்கும்  உரமாக்கினாள் அந்த தேவதை. 

தைரியத்தின் மறுபெயர். காலனுக்கான காலம் வந்த போது கூட அவள் கலங்கி நிற்கவில்லை. "பொறந்தவங்க எல்லாரும் ஒரு நாள் போகத் தானே வேண்டும்!", என்று தெளிவாகச் சொல்வாள். பயம் என்ற சொல்லை அவள் தன் அகராதியிலிருந்து நீக்கி பல காலம் ஆகியிருந்தது. 

நேர்மறை எண்ணங்கள் மற்றுமே ஊற்றெடுக்கும். எது வந்தாலும்,  கமலஹாசனின் இன்றைய வசனத்தை அன்றே உச்சரித்தவள் எங்கள் வீட்டுத் தாய்க்கிழவி... "பாத்துக்கலாம்!" 

"அச்சச்சோ... இப்படி ஆயிடுமோ?", "நாளைக்கு இப்படி நடந்தா என்ன பண்றது?!", "நம்ம வாழ்க்க‌ முடிஞ்சு போச்சா?", "நமக்குன்னே ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?!", "எல்லாம் விதி" - என்ற‌ எந்த ஒரு சராசரி பெண்ணின் புலம்பலும் அவள்‌ சொல்லி நான் கேட்டதில்லை! 

"வாழ்க்கையில்‌ எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.‌ தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது!" என்ற அவளின் அறிவுரை என்றும் ஏற்புடையது. 

ஊக்கமளிக்கும் தன்முனைப்பு பேச்சாளர்கள் பேசும் ஆயிரம் வசனங்களை விட இந்த ஒற்றை வரி வலியது என்பேன். தன்னம்பிக்கையின் ஊற்று - என் தாய்க் கிழவி! 

தெளிந்த முடிவுகள், தீர்க்கமான சிந்தனை, அயராத உழைப்பு இவை அவளின் அடையாளங்கள்.

நான் இதுவரை கூறியதை வைத்து அவள் கராரான பேர்வழி போலும் என்று நீங்கள் யூகித்திருந்தால்... அது தான் இல்லை! தாய்க்கிழவி ராதிகாவைப் போல் இவளுக்கும் வியக்கத்தக்க மறுபக்கம் உண்டு! 

அன்பையும்‌ பாசத்தையும் அவள் வழியில் காட்டிக்கொண்டே இருப்பாள்! அக்கறை எனும் மொழியிலும். 

பேரன் பேத்தியரை பிறர் முன்பு எப்போதும் உயர்த்திப் பேசி ஊக்கமளிப்பாள். "என் பேத்தி அப்பிடி சமைப்பா. பிரமாதமா படிப்பா. பேரன் எப்பயும் பஃஸ்ட் மார்க்", என்று புகழ்வதில் சிக்கனமே காட்ட மாட்டாள். 

"அப்பத்தா உனக்கு வேங்கரிசி மாவு ரெடி பண்ணி வச்சுருக்கேன். சாப்புடு" என்று ஊரிலிருந்து வந்ததும் ஊட்டி விடுவாள். கனிவையும் கண்டிப்பையும் சரி விகிதத்தில் பரிமாறுவாள். 

அவளின் 60+ வயதினில் சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் வந்து விட்டது. 

இன்சுலின் தினமும் போடும் அளவிற்கு! அதை நான் கற்றுக்கொண்டு  வீட்டிலேயே ஊசி போட்டு விடுவேன். "என் பேத்தி போட்டு விட்டா போட்டதே தெரியல. வலியே இல்ல. 

அந்த நர்ஸ் அம்மா கடாமாட்டுக்கு குத்தற மாதிரி குத்துறா!" என்பாள். (அதைக்கேட்டதும் பத்தாங்கிளாஸ் படித்த எனக்கு எப்படி குளுகுளு என்றிருந்திருக்கும்!) 

இரத்தப் பரிசோதனை ரிசல்ட்டினை வாங்கி வந்து படித்துக் காட்டுவேன். 

"அப்பத்தா!! சுகர் +++, பி.பி.யும் ஜாஸ்தியா இருக்கு. என்ன பண்ணீங்க?!", என்று கேட்டால்...மெதுவாக வார்த்தைகளை  முழுங்கிக்கொண்டே சொல்வாள்..."இல்ல. நேத்து பங்காளி வீட்டுல கல்யாணம். ஆத்தங்குடி பெருமாள் சமையல். நல்லா இருந்துச்சேன்னு...

ரெண்டே ரெண்டு வெள்ளப் பணியாரம், 2 வட, மூனே மூனு  கந்தரப்பம்...அவ்ளோ தான் சாப்டேன்" என்று குழைவாள்.

இங்கே...தாய்க் கிழவி படத்தில் ராதிகா மதுரை சென்று ஜிகர்தண்டா ருசித்த காட்சி ஞாபகம் வருகிறதா?

எங்கள் தாய்க் கிழவி பல சமயங்களில் இப்படி குழந்தையாய் மாறிவிடுவதும் உண்டு!!

இதை விட வேடிக்கை ஒன்று. எங்களுக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து எங்கள் அப்பத்தா முதல் மரியாதை ராதா தான்... ரவிக்கை அணிவதில்லை.

அவளின் 65 ஆவது வயதில், என் மூத்த அத்தையின் மகன், அப்பத்தாவின் மூத்த பேரன், தன் நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நண்பர்கள் அப்போது கேலி செய்த காரணத்தால், அப்பத்தாவிற்கு புதிதாக ரவிக்கை துணி எடுத்துக் கொடுத்து தைத்து அணிய வற்புருத்தினார்கள். 

இதுவரை ரவிக்கை அணியாத, இத்தனை வருடங்களாக அதற்காக

ஒருமுறை கூட  கூச்சப்படாத என் அப்பத்தா...முதன் முறை ரவிக்கை அணிந்த போது(!) வெட்கி நின்ற அழகை சொல்லி மாளாது! அவள் அன்று தவித்த தவிப்பைக் கண்டு எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை! 

வீட்டிற்கு யார் வந்தாலும்... அது வீதியில் கூவி விற்கும் வியாபாரியாய் இருந்தாலும் சரி, நண்பர்களாய் இருந்தாலும் சரி, விருந்தாளி ஆனாலும் சரி... காபியோ, மோரோ, உணவோ ஏதோ ஒன்று நிச்சயம் பரிமாறப்படும். 

ஏப்ரல், மே மாதங்களில் என் அப்பத்தா வீட்டு வாசலில் தண்ணீர்ப் பந்தல் அல்லது நீர் மோர்‌ பந்தல் இல்லாத வருடமே கிடையாது! (ம்ம்ம்...திருவருட்செல்வர் திரைப்படத்தில் வரும் நாவுக்கரசர் நீர் மோர்ப் பந்தல் நினைவிற்கு வருகிறதா?)

முழுப் பரிட்சையை முடித்து விட்டு மொட்டை வெயிலில் வீடு திரும்பும் பள்ளி மாணாக்கர்கள், எங்கள் வீட்டுப் பந்தலில் நின்று, அருந்தி, மகிழ்ந்து விட்டுச் செல்வது வாடிக்கை. 

இப்படி ஈகையின் இலக்கணமாயும் அவள்..! 

"ஒற்றை ஆளாய் என்ன‌ செய்து விடுவாள்?" என்று கேட்ட ஊருக்கு, "என்னால்‌‌ என்ன செய்ய முடியாது?" என்று வாழ்ந்து காட்டியவள்... எங்கள் வீட்டுத் தாய்க் கிழவி... என்‌‌ அப்பத்தா! 

அவளின் 

சுருங்கிய தோல் தந்த சுகமும்

நெருங்கிய போது கிடைத்த அரவணைப்பும்

வருந்திய போது தந்த ஊக்கமும்

பொருந்தி இருந்த அவளுடனான எங்கள்  வாழ்வும்

இன்று நினைத்தாலும் இனிக்கும்! 

- அலமேலு இராமநாதன், 

   கெருகம்பாக்கம், 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.