காவிரி நீர் கட்டண விவாதம்; தேசபக்தி சுண்ணாம்பா... சிமென்ட்டா? | அணை ஓசை 30

மேட்டூர் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் புதிய நிலப் பகுதிகளுக்கான பாசனத்திற்காக விடப்படும் காவிரி நீர் கட்டண ஒழுங்கு (3,01,000 ஏக்கர்களுக்கு) வருடம் ஒன்றுக்கு கீழ்க்கண்டவாறு சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

1. அரசு உலர் நிலம் – 99,474 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 15/-

2. ஜமீன்தாரி & இனாம் உலர் நிலம் – 1,19,999 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 15/-

3. ஜமீன்தாரி & இனாம் ஈரநிலம் – 64,349 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 7-8-0 (ரூ. 7, அனா 8)

4. அரசு ஆக்கிரமிப்பு ஈரநிலம் – 16,400 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 2/-

5. அரசு ஈர நிலம் (ஆக்கிரமிப்பு இல்லாத) – 1,768 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 6/-.

இவை அதிகம் என்றும் நீர் வரி இந்த அளவு கட்ட இயலாது என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பலத்த விவாதங்கள் சட்டமன்றத்தில் நடந்தேறியது. அது குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

எத்திராஜுலு நாயுடு: "எந்த அதிகாரத்தின் கீழ் அரசு ரூ. 15/- வசூலிக்கிறது?"

C.P.R (அரசுத் தரப்பு): "அந்தக் கட்டணம் செலுத்தினால் தான் தண்ணீர் கொடுக்கப்படும்."

C.V.V.: "மக்கள் தண்ணீர் வாங்க மறுத்தால்?"

C.P.R: "அவர்களின் தேவை அவர்களைத் தள்ளும். மறுத்தால் அரசு கட்டாயப்படுத்தாது. அவர்கள் பணம் செலுத்தினால் தண்ணீர் கிடைக்கும்."

காட்டமான கேள்விகள். நறுக்கு தெறித்தாற் போல பதில்கள் கூறப்பட்டன. மேலும் பல கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டன.

“ஜமீன்தாரி நிலங்கள் இந்த கட்டணத்தை ஏற்குமா?”

“வருவாய் வாரியம் விசாரணை செய்து, மக்கள் ஒருமித்தமாக சம்மதித்துள்ளனர் என அறிக்கை பெறப்பட்டுள்ளது.”

“ரூ. 15/- கட்டணத்தால் எவ்வளவு வருவாய் வரும்?”

“சுமார் ரூ. 5 லட்சம், ஆனால் இது தற்போதைய வருமானம் அல்ல. நீர் வந்தவுடன் விகிதங்கள் உயர்வதைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை.”

“குத்தகைதாரர்கள் இதை ஏற்பார்களா?”

“வருவாய் வாரியம் "சிரமமில்லை" என்று தெரிவித்துள்ளது”.

“தற்போதைய கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15/- அதிகமா?”

“ஆம், தற்போது ரூ. 5/- அல்லது ரூ. 7-8-0 தான் வசூலிக்கப்படுகிறது.”

“நீர்ப்பாசன சட்டம் கொண்டு வரப்படுமா?”

“ஆம், திட்டமிடப்பட்டுள்ளது. அது மாகாணமெங்கும் அமல்படுத்தப்பட்டாலும், அல்லது சாத்தியம் இல்லையெனில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் சட்டம் கொண்டுவரப்படும்” என்ற பதிலோடு விவாதம் முடிவு பெற்றது.

இந்த விவாதத்தின் மூலம், அரசு வருவாய் ஈட்டும் நோக்கில் திட்டமிட்ட விகிதங்களை உறுதியுடன் நிர்ணயித்தது என்பது தெளிவாகிறது.

பொறியாளர்கள் நியமனம்

மேட்டூர் அணை திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் நியமனங்கள் குறித்த விவாதம், அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டமை, குறிப்பாக பொறியாளர் பாஸ்கர அய்யர் என்பவரின் இடமாற்றம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

"பொறியாளர்கள் திரு. ஸ்டோனி, பாஸ்கர அய்யர், ஹார்ட், ராபர்ட்ஸ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு அடிக்கடி மாற்றம் ஏன்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“அது அதிகாரப்பூர்வ தேவைகளுக்காக. அவர்களின் திறமை அல்லது குணம் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் இல்லை." என்று பதிலளித்தார் சி.பி.ஆர்.

அணை ஓசை

மேட்டூர் திட்ட அலுவலக தலைமையகம், முதலில் கோயம்புத்தூர், பிறகு, 1926-ல் ஈரோடுக்கு மாற்றம், மேட்டூரில் அலுவலகம் தயாரான பின் அங்கு மாற்றப்பட்டது. இரண்டாவது கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டது.

இது குறித்து முக்கிய கேள்விகள் மற்றும் பதில்கள்:

“ஏன் இயந்திரப் பிரிவுக்கு தனி கண்காணிப்பு பொறியாளர் (ராபர்ட்ஸ் என்பவரின் நியமனம் குறித்த வினா இது)?”

“இயந்திரங்கள் அதிகம், விலை உயர்ந்தவை; தனி அதிகாரி தேவை.”

“செயற்பொறியாளர் இருந்தால் போதாதா?”

“இல்லை, சிறப்பு கண்காணிப்பு அவசியம்.”

“இயந்திரங்கள் அனைத்தும் வாங்கப்பட்டுவிட்டதா?

“ஏற்கெனவே Excavators, Drill, Boring machines முதலியன வாங்கப்பட்டுள்ளன; மீதி இயந்திரங்களுக்கு விவரக்குறிப்புகள் தயாராகின்றன.”

அப்போது பல உறுப்பினர்கள், ஏன் பாஸ்கர அய்யர் மாற்றப்பட்டார் எனக் கேள்வி எழுப்பினர்.

C.P.R. பதில்: “அது ‘அதிகாரப்பூர்வ தேவைகள்’ காரணமாக. அவரின் திறமை, குணம் குறித்து எவ்வித குற்றச்சாட்டு இல்லை.” மாற்றங்கள் அதிகாரிகளின் திறமையைப் பொருட்படுத்தாமல், “பொது சேவை தேவைகள்” அடிப்படையில் நடந்ததாக கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்கள்:

“குறுகிய காலத்தில் (1 வருடத்தில்) ஏன் மூன்று கண்காணிப்பு பொறியாளர்கள் மாற்றப்பட்டனர்?”

“உலகின் மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்திற்கு (6 கோடி ரூபாய் செலவில்) அதிகாரிகளின் “திறமை” முக்கியமா, அல்லது *பொது சேவைத் தேவையா* என்ற கேள்வி எழுந்தது.

“இந்திய அதிகாரிகள் தகுதியானவர்கள் தானே? அவர்களை ஏன் பரிசீலிக்கவில்லை?”

“நியமனங்களில் மூப்பு (seniority), செயல்திறன் (efficiency), பொதுச் சேவையின் தேவைகள் ஆகியவை அரசின் முக்கியக் கொள்கை என விவரித்தார் சி.பி.ஆர்.

C. V. V: "மற்ற அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் நல்ல காரணங்களுக்காக மாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறுவேன். ஆனால், பாஸ்கர அய்யர் ஏன் மாற்றப்பட்டார் என்பதை அது ரகசிய காரணங்களுக்காக இல்லாவிட்டால் .......

இடைமறிக்கப்பட்டு…

T. E. மோய்ர்: உறுப்பினர் அதிகாரியை குறிப்பிடும்போது திரு என்ற அடைமொழி இல்லாமல் பேசுவது சரியா? என்று ஆட்சேபித்தார்.

அவைத் தலைவர்: திரு. வெங்கடரமண அய்யங்கார், உறுப்பினரை திரு என்ற அடைமொழியுடன் அழைக்க உத்தரவிடுகிறேன் என்றார்.

திரு. வெங்கட்ரமண ஐயங்கார்(C. V. V): "நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தவறு செய்து விட்டேன், மன்னிக்கவும். அது ஒரு சிறிய பிறழ்வு! இனிமேல் திரு என்ற அடைமொழியோடு அழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன். திரு. பாஸ்கர அய்யர் அவர்களைப் பொறுத்தவரை நான் அவருக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. இனி அவரை திரு என்ற முன்மொழிவுடன் அழைப்பேன்".

"நான் கேட்க விரும்புவது அரசாங்கம் இதற்கான காரணங்களை விளக்க முடியுமா என்பதைத்தான். திரு. பாஸ்கர அய்யர் சமீப காலம் வரை அங்கு பொறுப்பில் இருக்கிறார். திரு. ஹார்ட் அவர் இடத்தில் வந்து பொறுப்பேற்கிறார். திரு. பாஸ்கர் அய்யர் வெளியேற்றப்படுகிறார். சில நாள்களிலேயே திரு. சுவாமிநாத ஐயர் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டு, திரு. ஹார்ட் வெளியே செல்கிறார். திரு. ஹார்ட் அவர்களுக்கு ஒரு காலி இடத்தை ஏற்படுத்த இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டனவா?

C. P. R: "பொதுமக்கள் நலன் கருதி இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்க்கிறேன். இந்த கேள்விகளின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். ஆனால் நியமன முடிவுகள் அரசின் விரிவான பரிசீலனையின் பேரில் எடுக்கப்படுகின்றன. தனிப்பட்ட இடமாற்றங்களின் காரணங்களை விரிவாகச் சொல்ல இயலாது”.

C. S. R. முதலியார்: "திரு. ஸ்டோனி, மேட்டூர் அணையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என தனிப்பட்ட விருப்பம் ஏதேனும் இருந்ததா?"

C. P. R: "இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க மறுக்கிறேன்". இப்படி அந்த விவாதம் முடிவடைந்தது.

குறிப்பு: ஏதோ தில்லுமுல்லு மற்றும் உள்குத்து அரசியல் நடந்திருப்பது என்பது தெளிவாக தெரிகிறது. ஆங்கிலேய அதிகாரிகளின் பதவி உயர்வுக்காக, இந்திய பொறியாளர்களின் பதவி வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாக புரிந்து கொண்டாலும் எதற்காக இடமாற்றங்கள் நடந்தன என்பது குறித்து ஆதாரபூர்வமாக தரவுகள் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்பட்டதால் இதில் நாம் ஒரு முடிவுக்கு வர இயலாது என்பதே யதார்த்த நிஜம்!

அணையின் இடமாற்றம்/ தொழிலாளர் முன்னுரிமை குறித்த விவாதம்

மேட்டூர் அணை தொடர்பான ஆரம்பகட்ட திட்டங்களில், அதன் இடம், உயரம், நீர்தேக்க திறன் பற்றிய பல்வேறு கேள்விகள் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டன. அப்போது பல முக்கியமான அம்சங்கள் வெளிப்பட்டன. முதலில், அணையின் முதல் முன்மொழிவு 80,000 மில்லியன் கன அடி நீர் சேமிப்பு திறனையும், 54.7 சதுர மைல் பரப்பளவு நீரில் மூழ்கும் தன்மையை கொண்டதாக இருந்தது. பின்னர் 1924 ஆம் ஆண்டில் மைசூர் அரசுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, 93,500 மில்லியன் கன அடி சேமிப்பு அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அணையின் உயரத்தை ஒன்பது அடி வரை அதிகரிக்கும் வாய்ப்பு உருவானது. அதேபோல், நீர் பரப்பளவு ஆறு சதுர மைல் கூடும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், மேட்டூர் அணையின் இடமாற்றம் காரணமாக, அதன் முழுமையான விளைவுகள் தெளிவாக அறியப்படவில்லை. புதிய நீர்த்தேக்க பகுதி எவ்வளவு பரவலாக இருக்கும் என்பதை அறிய, தரையியல் ஆய்வுப் பணிகள் (SURVEY) நடந்து கொண்டிருந்தது. அதற்கு முன் அரசு அளித்த இடைக்கால மதிப்பீட்டின் படி, அணையின் உயரம் சுமார் ஒன்றரை அடி கூடும் வாய்ப்பு உள்ளது. இதனால் மூழ்கும் நிலப்பரப்பு சுமார் 60.7 சதுர மைலாக விரிவடையும். எனினும், இந்த மாற்றத்தால் மைசூர் மாநிலத்தின் பகுதிகள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று அரசு உறுதி அளித்தது.

வெளியூர் - உள்ளூர் தொழிலாளர்கள்:-

அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்கள் ஏற்கெனவே அதிக அளவில் உள்ளதா என்பதை கண்டறிந்து இந்த மெட்ராஸ் மாகாணத்தின் மோசமான சூழ்நிலையை (பஞ்சம்) கருத்தில் கொண்டு வெளி மாகாணங்களில் இருந்து ஆட்கள் வருவதை தடுத்து இங்கு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் உத்தரவாதம் அளிக்க இயலுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. வெளியூர் தொழிலாளர்களுக்கு பதிலாக உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்தால் அது பயனுள்ளதாக சாதகமாக இருக்கும் என்று தான் நினைக்கிறோம் அரசு அவ்வாறு செய்யும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

வேறு மாகாண தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறித்த பிரச்னைகள் 2025/2026-ல் இருப்பதைப் போலவே 100 வருடங்களுக்கு முன்பே இருந்துள்ளது என்பது ஆச்சர்யத்தையும் தருகிறது.

சிமென்ட் டெண்டர் குறித்த ஒத்திவைப்பு தீர்மானம்

1927 நவம்பர் 1, மெட்ராஸ் சட்டமன்றத்தில் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கான சிமென்ட் கொள்முதல் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இது குறித்த விவாதம், வெறும் பொருள்களின் தேர்வு பற்றியது அல்ல. அது தேசபக்தி, தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டு ஆட்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் இணைத்த பெரிய சிக்கலாக இருந்தது. முதலில் அவைத்தலைவர் இந்த விவாதத்திற்கு அனுமதி மறுத்தாலும் பின்னர் அனுமதியளித்தார். இது ஒரு முக்கிய விவாதமாக அமைந்தது.

அப்துல் ஹமீது கான் முன்வைத்த கேள்விகள்:

மேட்டூர் அணை கட்டுவதற்கு சுமார் 1,53,000 டன் சிமென்ட், ஐந்து ஆண்டுகளில் தேவைப்படும் என தெரிகிறது. இதன் செலவு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆகும். நம் நாட்டிலேயே சிமென்ட் கிடைக்கும்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிப்பது ஏன்? மேலும், ஒரு லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகை விதிப்பதால், இந்திய நிறுவனங்களுக்கு போட்டி போட முடியாத நிலை ஏற்படும். எத்தனை இந்திய நிறுவனங்களுக்கு இதில் பங்கேற்கும் திறன் இருக்கும்? டெண்டர் கோரும் இந்த விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தியாவில் தரமான சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்து செலவுகள் அதிகமாவதால் போட்டியில் தோல்வி அடைகிறார்கள் என்ற கவலையை முன்வைத்தார்.

7000 மைல்களுக்கு அப்பால் வெளிநாட்டிலிருந்து பொருள்களைக் கொண்டு வர ஆகும் கப்பல் செலவை விட 700 மைல்கள் இந்திய ரயில்வே மூலம் கொண்டு வரும் செலவு அதிகம் என்பதிலிருந்து இந்திய உற்பத்தியாளர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள முடியும்! இதன் மூலம் தேச பக்தி கொண்ட “சட்ட உறுப்பினர்- (சி.பி.ஆர்)” சுண்ணாம்பை தேச பக்தி கொண்டு தேர்ந்தெடுத்து, சிமென்ட்டை புறம் தள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்திய தொழில்களை ஊக்குவிக்க வேண்டும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும், கூடவே, அரசு விரும்பினால் மேட்டூர் அருகிலேயே சிமென்ட் தொழிற்சாலை நிறுவலாம் என்றும் பரிந்துரைத்தார்.

அணை ஓசை

சுண்ணாம்பு Vs சிமென்ட்

பல உறுப்பினர்கள், சுண்ணாம்பு பயன்படுத்தும் பழைய மரபை சுட்டிக்காட்டினர். சாமி.வெங்கடாசலம் செட்டி மற்றும் ஆதி நாராயணன் செட்டியார் போன்றோர், எகிப்தின் நைல் நதி குறுக்கே கட்டப்பட்ட அணை, சீனப் பெருஞ்சுவர், விஜயநகர பேரரசின் கட்டடங்கள், நம் நாட்டின் பழைய பெரிய கோயில்கள் போன்ற வரலாற்று கட்டடங்கள் அனைத்தும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டதை விளக்கமாக எடுத்துரைத்தனர்.

சேலம் மாவட்டத்தில் மிகுந்த அளவில் சுண்ணாம்பு கற்கள், மணல், தொழிலாளர் வசதி உள்ளதால், உள்ளூர் வளங்களை பயன்படுத்தலாம் என்றும் சுண்ணாம்பு மலிவானது, அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் என்பதால், அது “தேசபக்தி” சார்ந்த தேர்வு என்றும் வாதிடப்பட்டது.

தேசபக்தி சுண்ணாம்பா? சிமென்ட்டா? எது என்கிற கேள்வி இங்கே எழுகிறது என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைத்தனர்.

சட்ட உறுப்பினர் C. P. ராமசாமி அய்யர் அளித்த விளக்கம்:

இந்திய அரசு நிபுணர்களின் ஆலோசனையின்படி சிமென்ட் கான்கிரீட் தான் சிறந்தது, சுமார் 4 ஆண்டுகள், கட்டப்படும் காலத்தைச் சேமிக்கும் என்று தெரிவித்தார். சிமென்ட்டை அரசு நிறுவனம் மூலம் தயாரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அதிக செலவாகும். அதனால் தனியார் டெண்டர் முறையே சிறந்தது என்றார்.

இந்திய சிமென்ட் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையான தரத்தை வழங்கும் நிலையில் உள்ளன. டன் ஒன்றுக்கு, ரூ. 60 விலையில் இந்திய சிமென்ட் கிடைக்கும், வெளிநாட்டில் அது ரூ.70க்கு மேல் தான் ஆகும் என்றும் ஒப்புக் கொண்டு பேசினார். எனவே, இந்திய சிமென்ட்டுக்கு ஆதரவு தரப்படும், ஆனால் போட்டி டெண்டர் முறையில் தான் செய்யப்படும் என உறுதி அளித்தார். உள்நாட்டில் இந்திய ரயில்வே மூலம் கொண்டு வரும் செலவு அதிகம் என்பதிலிருந்து இந்திய உற்பத்தியாளர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள முடியும் என்றும் ஒப்புக்கொண்டார்!

எதிர்ப்புகள் மற்றும் தாக்குதல்கள்

சி. வி. வெங்கடரமண அய்யங்கார், “சட்ட உறுப்பினர்” வெளிநாட்டு நிபுணர்களை மட்டும் நம்புகிறார், இந்திய பொறியாளர்களின் ஆலோசனையை புறக்கணிக்கிறார் என குற்றம் சாட்டினார். அவர் “மிகுந்த திறமையான மாயாஜாலக்காரர்” என்று ராமசாமி அய்யரை சாடினார். சிமென்ட்டை இறக்குமதி செய்வதன் மூலம்,

ஐரோப்பாவில் பட்டினியால் வாடாத மக்களுக்கு உணவு அளிக்க போகிறீர்களா? அல்லது பட்டினியால் வாடும் இந்திய மக்களுக்கு உணவளிக்க போகிறீர்களா என்பதே கேள்வி என்றார்!

தேவைப்பட்டால் அணை கட்டும் வேலை காலத்தில் சிறிது நீடித்து நம் நாட்டில் பட்டினியால் வாடும் பல தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க நீங்கள் ஏன் உதவக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். உறுப்பினர் சல்தானா உள்ளிட்டோர், பிரிட்டன் தனது தொழில்களை பாதுகாக்கும் சட்டங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியாவும் தன் தொழில்களை அதேபோல் ஊக்குவிக்க வேண்டும் என்றார்கள்.

J. A. சல்தானா:

“எதிர்க்கட்சியினரின் முகத்தில் சிரிப்பு தெரிகிறது. எங்கள் கருத்துகளை கிண்டலடிக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் உண்மையில் நாங்கள் இருட்டில் தட்டுத் தடுமாறி நடப்பதுபோல இருக்கிறோம். அரசு எங்களுக்கு போதுமான தகவலை வழங்கவில்லை. பிரிட்டிஷ் அரசு தனது தொழில்களை ஊக்குவிக்க எவ்வளவோ சட்டங்கள் கொண்டு வந்தது. நமது அரசு ஏன் இந்திய தொழில்களை அப்படி ஆதரிக்கக் கூடாது?”

மாண்புமிகு சட்ட உறுப்பினர் எங்களிடம் அவர் பல பொறியாளர்களிடம் ஆலோசனை செய்ததாக கூறினார். இங்கு ஏராளமான பொறியாளர்கள் உள்ளனர். ஆனால், பம்பாய் அரசுக்கு கீழ் உள்ள துறை அதிகாரியிடம் கலந்தாலோசித்து இருக்கிறார். அவர் இயல்பாகவே பிரிட்டிஷ் பக்கம் சாய்பவர். ஆனால், எம். சர் விஸ்வேஸ்வரய்யாவைப் போல இந்த விஷயத்தில் சரியான கருத்து சொல்லக்கூடிய இந்திய பொறியாளர் யாரையாவது அவரின் நம் மத்தியில் கலந்தாலோசித்திருக்கிறாரா?

எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் கேட்பது ஒரு அனுதாப மனப்பான்மையைத் தவிர வேறு இல்லை. நான் கேட்பதெல்லாம் எங்களிடம் மற்றும் மக்களிடம் கொஞ்சம் அனுதாபத்தை காட்டுங்கள் என்பதே!

நாங்கள் இருட்டில் கிடந்து தவிக்கிறோம் என்பதற்காக புதரை சுற்றி அடிப்பது போலவோ (Beating Around the Bush) எங்களைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

அணை ஓசை

“ஓர் உண்மை நிகழ்வைக் கூறுகிறேன். இங்கிலாந்தின் அரச குடும்பத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தட்டச்சு இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. ஒரு முறை மேன்மை தாங்கிய அரசர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு சென்றிருந்த போது அவர் வீட்டில் பயன்படுத்தப்படும் தட்டச்சு இயந்திரம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தட்டச்சு இயந்திரங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அரசர், எதிர்காலத்தில் ஆங்கிலேயரின் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசரால் அப்போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் ஆங்கிலேயரின் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதால் அது ஒரு முறையான உத்தரவு என்று பிரிட்டிஷ் நாட்டு மக்கள் மகிழ்ந்தனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட "ரெமிங்டன்" தட்டச்சு இயந்திரங்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதை விட உயர்ந்ததாகவும் மலிவானதாகவும் இருக்கலாம் என்றாலும் உள்ளூர் பிரிட்டிஷ் தொழில்களை ஊக்குவிக்க அவரது மாட்சிமை கட்டுப்பட்டதாக நான் நினைக்கிறேன். அதே கண்ணோட்டம் இப்போது இங்கு இந்த விஷயத்திலும் பயன்படுத்தப்பட வேண்டும்..” இப்படி உணர்ச்சி மிகுந்து கூறினார்.

C. E. வுட் (ஐரோப்பிய உறுப்பினர்)

“நாங்கள் கிண்டலடிக்கவில்லை. இந்திய பொருள்கள் சரியான நேரத்தில், சரியான விலையில் கிடைத்தால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று எவரும் சொல்லவில்லை. நமக்கு முக்கியம் – திட்டம் தாமதமடையாமல் மலிவாக முடிவது. இந்திய சிமென்ட் தரம் வெளிநாட்டு சிமென்ட்டுக்கு இணையானது என்று சாதகமாக கூறி இந்திய தயாரிப்பு சிமென்ட் தரமானது என்று ஒப்புக்கொண்டார்.”

வுட் மேலும் கூறியது. “எனது ஐரோப்பிய நண்பர்கள் இந்த விவாதத்தின் போக்கை கண்டு எள்ளி நகையாடினர் என்று திரு. சல்தானா நினைக்கிறார். எதிர் தரப்பு மாண்புமிகு உறுப்பினர்கள் எங்களது ஐரோப்பிய சகாக்கள் இந்த விஷயத்தில் அனுதாபம் காட்டவில்லை என்று கருதுகின்றனர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான முகபாவம் உடையவர்கள். அதனால் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்று தோன்றுகிறது. சுண்ணாம்பு, மணல், சாந்து, சிமென்ட் மற்றும் பலவற்றின் தகுதிகள் குறித்து நிபுணர்களாக தங்களை கருதிக்கொண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் பேசியதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கேளிக்கை இருந்தது உண்மைதான்!

இந்திய பொருள்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது உறுப்பினர்களின் எண்ணமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியப் பொருள்கள் சரியான நேரத்தில், திட்டம் தாமதம் ஆகாமல் நடைபெற, கிடைக்கும் பட்சத்தில் தாராளமாக நாம் அவற்றை உபயோகிக்கலாம். இந்திய பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை விட உறுதியாக விலை மலிவாக தான் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பொருளாதார கண்ணோட்டத்தில் அரசாங்கம் மலிவான பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்பது சரியானது.

திட்டம் காலதாமதம் அடையாமல் நிறைவேற்ற வழி வகை செய்யப்பட வேண்டும். முடிந்தால் இந்தியத் தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே எனது கரிசனம். ஆனால் ஒரு துறையின் நலனுக்காக திட்டத்தின் முன்னேற்றம் எக்காரணம் கொண்டு தடைபடுவோ, தாமதமாகவோ ஆகக்கூடாது” என்று முடித்தார்.

Dr. B. S. மல்லையா:

மாண்புமிகு திரு. ஹமீத்கான் எழுப்பிய விவாதம் சுண்ணாம்பா அல்லது சிமென்ட்டா எதை பயன்படுத்துவது?

சிமென்ட்டாக இருந்தால் அது இந்திய தயாரிப்பா அல்லது அரசாங்கமே சிமென்ட் தயாரிப்பதா? என்ற மூன்று விஷயங்களில் விவாதம் இதுவரை நடந்தது.

இது போன்ற பெரிய அணைகள் கட்டும் போது நேரம் மிகவும் முக்கியம். சிமென்ட் இறுகுவதற்கு 12 மணி நேரங்கள் மட்டுமே போதும். சுண்ணாம்பு கலவையில் பூசப்பட்ட கட்டடங்கள் நாளடைவில் சிதலம் அடைகின்றன.

நீருக்கடியில் வேலை செய்யும் போது அங்கு சிமென்ட் பயன்படுத்துவது மட்டுமே சரியாக இருக்கும். மாண்புமிகு சட்ட உறுப்பினர் கூறுவது போல நிபுணர்கள் உலக அளவில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இவர்கள் தான் ஜீலம் கால்வாய், சட்லஜ் நதி திட்டங்கள் மற்றும் சுக்கூர் பேரேஜ் போன்ற திட்டங்களை செயல்படுத்தியவர்கள்.

மிகவும் விலை குறைவான வேறு சிமென்ட் தேர்வு செய்யக் கூடாது. பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள அணையை கட்டும் போது அதன் வலிமை, தாங்கும் தன்மை இவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய சிமென்ட் நல்ல தரத்துடன் இருக்கும் போது இந்திய சிமென்ட் தயாரிப்பாளர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறையை விளம்பரங்களில் ஏன் சேர்க்கக் கூடாது? என்று வலியுறுத்திப் பேசினார்.

அணை ஓசை

உறுப்பினர்கள் சிமென்ட் 12 மணி நேரத்தில் உறுதியாகிறது. உப்பு நீரிலும் சிமென்ட் பலம் தக்கவைக்கிறது. அதனால் நவீன பொறியியல் முறையில் சிமென்ட் தான் சரியான தேர்வு என்ற வாதத்தை முன்வைத்தனர். பிரபல தொழிலதிபர் ராம்நாத் கோயங்கா வணிக நோக்கில், மேலாண்மை விஷயங்களை கூறியும் சிறப்பானதொரு உரை நிகழ்த்தி இந்திய சிமென்ட்டுக்கு ஆதரவளித்தார்.

திரு. ராம்நாத் கோயங்கா:

“இப்போது என்னை பேசத் தூண்டுகிறது. சிமென்ட் பிரச்னை முடிந்து போன பிரச்னை. நிபுணர்களின் கருத்து சிமென்ட்டுக்கு சாதகமாக உள்ளது. இப்போது நம்முன் உள்ள கேள்வி மாண்புமிகு சட்ட உறுப்பினர் இந்திய சிமென்ட் தவிர வேறு எந்த வெளிநாட்டு சிமென்ட் டெண்டரையும் ஏற்க மாட்டோம் என்ற உறுதிமொழியை கூற வேண்டும்.

இந்த அவை இவ்விஷயத்தில் ஏகோபித்த கருத்தாக ஒன்றாக உள்ளது. மேலும், சாதகமாக இருக்கும் இந்திய “ஷஹாபாத்” நிறுவனம் தவிர வேறு நிறுவனம் இந்தியாவில் ஏதேனும் இருக்கிறதா?

மாண்புமிகு சட்ட உறுப்பினர், இந்திய சிமென்ட் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை வெளிப்படையாக அறிவித்த பிறகு “ஷஹாபாத்” நிறுவனம் தங்களுக்கு சிமென்ட் விலை டன்னுக்கு ரூபாய் 70 தேவை என்று அதிகப்படுத்திக் கூறலாம். “ஷஹாபாத்” நிறுவனம் போட்டி விலையில் சிமென்ட் தருவதற்கு பதிலாக அது கூறும் விலைக்கு நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். ஏனெனில், சட்ட உறுப்பினர் இந்திய சிமென்ட் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை தருவதால் வேறு வழி இல்லை.

வேறு இந்திய சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்தவரை மேட்டூர் வரை ஆகும் போக்குவரத்து செலவு, சிமென்ட் செலவு விலையை விட கூடுதலாக ஆகும் என்பதே உண்மை! எனவே, இந்த சமயத்தில் இந்த அணையின் நன்மையை கருதி, வரி செலுத்தும் குடிமக்களின் நன்மைகளை கருதி மாண்புமிகு சட்ட உறுப்பினரிடம் இப்படியான உறுதிமொழியை கோரக் கூடாது. திட்டவட்டமான உறுதிமொழி கேட்பது தீங்கு விளைவிக்கும்.

மேலும், இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்த புள்ளி கூறினால் போதுமானது. அவ்வாறு கோரினால் “ஷஹாபாத்” நிறுவனம் தங்கள் இயந்திரங்களை தேவைக்கு ஏற்றவாறு அதிகப்படுத்த யோசித்து தேவையான அளவு உற்பத்தியை எடுத்து வழங்க முயற்சிக்கும்.

எனக்கு கிடைத்த தகவலின் படி “ஷஹாபாத்” நிறுவனம் வருடத்திற்கு ஐம்பதாயிரம் டன் சிமென்ட்டை உற்பத்தி செய்ய இயலும். அவர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தினால் மட்டுமே டெண்டரில் கூறியுள்ளபடி அளவு சிமென்ட்டை வழங்க முடியும். அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றால் உறுதியாக இதர செலவுகளுக்கு வழி ஏற்படுத்திக் கொள்வார்கள்.

எனவே, அனைவரது நலன்களை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் இரண்டு வருட காலம் ஒப்பந்தம் போடுவது விரும்பத்தக்கது. மற்றொரு விஷயம், ஒரு லட்சம் மதிப்பு தொகை சம்பந்தமானது. ஒரு லட்சம் டெபாசிட் செய்ய முடியாத ஒருவரை நம்பி ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தத்தை எப்படி தர முடியும் என்று யோசித்தீர்களா? ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய முடியாதவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தத்தை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது. வணிகத்தில் நீங்கள் எப்போதும் எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .

ஏனெனில், போர்ச்சூழல் ஏற்படும் போது, சில எதிர்பாராத சூழ்நிலைகளில் சிமென்ட் விலை டன்னுக்கு ரூபாய் 120 அல்லது ரூபாய் 150 வரை உயரக்கூடும். அந்த நேரத்தில் ஒருவர் தனது கடமைகளாக முன்வந்து முழுவதுமாக நிறைவேற்றி விடுவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?

ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்த முடியாத ஒருவரால் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அவரது கான்ட்ராக்ட் செயல்படுத்துவது இயலாத காரியம். எனவே, வைப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் குறைந்தபட்சமாக, ரூ. ஐந்து லட்சம் நல்லது என்று பரிந்துரைக்கிறேன்.

அணை ஓசை

இந்திய தயாரிப்பு சிமென்ட் பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்த அவை ஒத்த கருத்துடையதாக உள்ளது. திரு. உட் , ஐரோப்பிய தொகுதியில் இருந்தாலும், ஐரோப்பிய பிசினஸ் மற்றும் ஐரோப்பிய சிமென்ட் மீது ஆர்வம் இருந்தாலும் இங்கு இந்திய சிமென்ட் தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இந்த அவையில் மாற்றுக் கருத்து இல்லாததால் இந்திய சிமென்ட் தான் பயன்படுத்த வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன். இந்த சமயத்தில் வெளிப்படையான உறுதிமொழியை சட்ட உறுப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பது சரியல்ல எனவும் இந்த ஒரு காரணத்துக்காகவே குறிப்பிட்டுக் கூற இந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டேன்” என்று சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.

இந்த விவாதம் சுண்ணாம்பா அல்லது சிமென்ட்டா என்ற கேள்வியைத் தாண்டி, “தேசபக்தி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டு ஆதிக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பம்” ஆகிய அனைத்தையும் இணைத்தது. இறுதியில், அரசு சிமென்ட் தான் பயன்படுத்தப்படும், ஆனால் இந்திய சிமென்ட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தது.

இந்த அவையில் ஓயாமல் பெரிதாக விவாதிக்கப்பட்ட விடயங்களில் இது மிகவும் முக்கியமானது.

தொடரும்...

காவிரி நன்னீர் சிறப்பு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.