கைது வேண்டாம் ; சொல்லியும் கேட்காத முதல்வர் முதல் பி.கே வெற்றி, குஷியில் சீமான் வரை! | கழுகார்
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தை உடனடியாக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத முதல்வர், காஞ்சிபுரம் விசிட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்பியதும், காவல்துறையின் முக்கிய அதிகாரிகளை வரவழைத்து ஆலோசித்திருக்கிறார்.
இப்படி பேசியிருக்கிறாரே.. என்ன செய்யலாம் என முதல்வர் கருத்து கேட்டபோது, வழக்குப் போடலாம்... என்பதே அதிகாரிகள் தரப்பு பதிலாக இருந்திருக்கிறது.
சிறிது நேரம் யோசித்த முதல்வர், ஏன் உதயநிதியை கைது செய்யக் கூடாது? எனக் கேட்க, அதிர்ந்து போயிருக்கிறார்கள் அதிகாரிகள். எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்தால் ரிமாண்ட் செய்ய முடியுமா எனத் தெரியாது.. அவர்மீது என்ன வழக்குகளை பாய்ச்சுவது.. கைது செய்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை வரும்.. நீதிமன்றத்தில் குட்டு வாங்குவோம் என எடுத்துக் கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஆனால், எதற்கும் கன்வின்ஸ் ஆகாத முதல்வர், கைது செய்யுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்துதான் கைது சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
மேற்கு மண்டல த.வெ.க அமைச்சர்கள் யாரும் வாய் திறக்க வேண்டாம் என தொடர்ந்து எச்சரித்து வருகிறாராம் செங்கோட்டையன். மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் அருண் ராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் நீங்கலாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனில் தொடங்கி கதர்துறை அமைச்சர் விஜய் பாலாஜி வரையில், பலருமே அரசின் முக்கிய உள் விவகாரங்களை வெளியில் உளறிக் கொட்டி வருவதாக தலைமைக்கு தகவல் சென்றிருக்கிறதாம்.
ஜாக்கிரதையாக பேசுவதை விட பேசாமல் இருப்பதே நல்லது என அமைச்சர் செங்கோட்டையன் பலமுறை சொல்லியும், அவர்கள் யாரும் கேட்காததால், அண்மையில் தனியாக அழைத்து பாடம் நடத்தியிருக்கிறாராம். நம்மை பேச வேண்டாம் எனச் சொல்ல இவர் யார்? எனக் கொதிக்கத் தொடங்கிவிட்டார்களாம் மாண்புமிகுக்கள். செங்கோட்டையனை பேச வேண்டாம் என தலைமையிலிருந்து உத்தரவு வந்திருப்பதால்.. கொங்கு மண்டலத்திலிருந்து யாரும் பேசக் கூடாது? என நினைக்கிறாரா என முணுமுணுத்து வருகிறார்கள் மாண்புமிகுக்கள்!
தி.மு.க-வின் ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த தோப்பு வெங்கடாசலத்தின் பதவியை பறித்திருக்கிறது அக்கட்சித் தலைமை. தேர்தல் தோல்விக்குப் பிறகான அவரின் செயல்பாடுகள்தான் நீக்கத்திற்கான காரணமாகச் சொல்லப்பட்டாலும், முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக அவர் செய்த உள்ளடிதான் முக்கிய காரணமாம். மேலும், த.வெ.க செல்லும் மனநிலையில் அவர் இருந்தது மட்டுமில்லாமல், த.வெ.க-வுக்கு போக தி.மு.க-வினரை மூளை சலவை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நீக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் பேசிய தோப்பு, "என்னை பதவியில் நீக்கியதற்கான காரணத்தை தலைமைதான் சொல்ல வேண்டும். என்னை நீக்கியது எனக்கு நல்லதா... அல்லது கட்சிக்கு நல்லதா என்பதை காலம் பதில் சொல்லும். அதுவரை பொறுத்திருந்து பாருங்கள்" என சூட்சுமமாகப் பேசியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தலிலுக்கு அடிபோட்டு வரும் தோப்பு, தன்னுடைய ஆதரவாளர்களை ஆசை வார்த்தைகளைக் கூறி திரட்டி வருகிறாராம். இந்நிலையில், தோப்பு தனிமரம் ஆவாரா அல்லது தொகுதியில் தி.மு.க- வை தனிமரம் ஆக்குவாரா என்பது சீக்கிரம் தெரியவரும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
பீகாரின் பங்கிப்பூர் இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் வென்றிருப்பது தேசியளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 3.44% வாக்குகள் பெற்ற பிரஷாந்த் கிஷோரின் கட்சி, பா.ஜ.க-வின் கோட்டையிலேயே வாகை சூடியிருக்கிறது. இதைக் கேள்விப்பட்டு ரொம்பவே குஷியாகிவிட்டாராம் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டு கிடக்கும் கட்சியை மீட்டெடுக்க பிரஷாந்த் கிஷோர் பாணியில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கவுள்ளார் அவர்.

பூத் வாரியாக இப்போதே நிர்வாகிகள் நியமனத்தை முடித்திருக்கும் சீமான், இனி மெளனத்தை களைத்துவிட்டு த.வெ.க-வுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தவுள்ளாராம். அதேசமயம், என்னை வெற்றிபெறச் செய்து உள்ளே அனுப்புங்கள் என சூரியக்கட்சித் தலைவர்களிடமும் மனம்விட்டு பேசினாராம். நீங்கள் வேலையை தொடங்குங்கள்.. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கை அளித்திருக்கிறார்களாம் சூரியக் கட்சித் தலைவர்கள்.
த.வெ.க மருத்துவரணியின் ராணிப்பேட்டை மாவட்டப் பொறுப்பாளரும் சோளிங்கர் எம்.எல்.ஏ-வுமான கபில், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சையில் சிக்கினார். அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரியாளர்கள் சங்கங்கள் அச்சம்பவத்தை கடுமையாக சாடிய நிலையிலும், எந்தவித விளக்கமும் நடவடிக்கையும் எடுக்காமலும் கப்சிப்பென மெளனமாக இருந்தது த.வெ.க அரசு.
இந்தத் தாக்குதலுக்கு எம்.எல்.ஏ கபில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இந்தச்சூழலில், தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகத்தினர் மீது தி.மு.க-வினர் தாக்கியதாக செய்திகள் வெளியானது.

அதைத் தொடர்ந்து, "செய்தியாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது திமுக-விற்கு புதிதில்லை. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அராஜகச் செயல்களுக்கு இனி எந்தவித நியாயமும் கற்பிக்க முடியாது" என கொந்தளித்தார் அமைச்சர் ராஜ்மோகன். த.வெ.க எம்.எல்.ஏ-வே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டபோது அமைதியாக இருந்த அமைச்சர், தி.மு.க-வினர் தாக்கும்போது மட்டும் வெகுண்டெழுந்து குரல் கொடுத்து பார்பட்சமாக நடந்துகொள்கிறாரே... என விமர்சனங்கள் மேலோங்கி வருகின்றன!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


