காமன்வெல்த் போட்டி முடிந்ததும் மாயமான பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்; கிளாஸ்கோவில் என்ன நடந்தது?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth Games 2026) நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீரர் குத்ரத்துல்லா (Qudratullah) திடீரென மாயமான சம்பவம் சர்வதேச விளையாட்டு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் (Glasgow) நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய குத்ரத்துல்லா, தனது போட்டிகளை முடித்த பிறகு அவர்களது அணி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் பாகிஸ்தான் அணி தாயகம் திரும்பத் தயாரானபோது அவர் அறையில் இல்லாதது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் அதிக கவனம் ஈர்த்த விஷயம், அவரது பாஸ்போர்ட் (Passport), பயண ஆவணங்கள் (Travel Documents) மற்றும் விமான டிக்கெட் (Return Ticket) ஆகியவை அணி மேலாளரிடமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதுதான். இதையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு (Pakistan Boxing Federation) மற்றும் பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் (Pakistan Olympic Association) இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. கிளாஸ்கோ காவல்துறையினருடனும் அவர்கள் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் குத்துச்சண்டை நிர்வாகத்துக்குப் புதிதல்ல. 2022-ஆம் ஆண்டு பர்மிங்காமில் (Birmingham) நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின்போதும் இரண்டு பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போனதாகப் பதிவானது.
அதேபோல், 2024 உலக ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியின்போது (Olympic Qualifiers) இத்தாலியில் மற்றொரு வீரரும் மாயமான சம்பவம் நடந்தது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், வெளிநாட்டு போட்டிகளுக்குச் செல்லும் வீரர்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 36 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஒரு பதக்கத்தை வென்றது. மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை பாத்திமா செஹ்ரா (Fatima Zehra) வெண்கலப் பதக்கம் (Bronze Medal) வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருந்த நிலையில், தற்போது குத்ரத்துல்லாவின் மாயம் அந்த வெற்றியையே பின்னுக்குத் தள்ளும் அளவுக்குப் பேசுபொருளாக மாறியுள்ளது.
குத்ரத்துல்லா எங்கு சென்றார், அவர் விருப்பத்துடன் வெளியேறினாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


