Doctor Vikatan: புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும்?
Doctor Vikatan: என் வயது 56. நான் கடந்த 20 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தேன். பலமுறை அதை விட நினைத்துத் தோற்றுப் போயிருக்கிறேன்.
பெரிய போராட்டத்துக்குப் பிறகு இப்போது கடந்த ஒரு வருடமாக சிகரெட் பிடிப்பதில்லை. ஆனாலும் இத்தனை வருடங்கள் அந்தப் பழக்கத்தில் இருந்ததால் என் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்குமோ, நுரையீரல் செயல்பாடு குறைந்திருக்குமோ எனப் பயமாக இருக்கிறது.
பொதுவாக, புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகு நுரையீரல் எப்போது தன் பழைய நிலைக்குத் திரும்பும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒரு போதையிலிருந்து மீண்டிருக்கிறீர்கள். அந்த மன உறுதியை அப்படியே பின்பற்ற வாழ்த்துகள். புகைப்பிடிப்பதை நிறுத்திய அடுத்த நிமிடத்திலிருந்தே உடலுக்கு நன்மை நடக்கத் தொடங்கிவிடும்.
ஒரு நாளைக்கு 20 சிகரெட் பிடிப்பவர்கள், நான்கைந்து பாக்கெட் வரை பிடித்தவர்கள், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிகரெட் பிடிப்பவர்கள்கூட, அதை நிறுத்தி ஒருநாள் முழுவதும் புகைக்காமல் இருந்தால், அந்த ஒரே நாளில் அவர்களது உடலில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
முதல் வேலையாக காற்றுப்பாதை மற்றும் நுரையீரல் செயல்பாடு மேம்படும். சுவாசப் பாதை சுருக்கத்திலிருந்து விடுபட்டு (Relax) நெகிழ்வுத்தன்மை (Elasticity) கூடும். சிகரெட் பழக்கத்தைக் கைவிட்ட 2 வாரங்கள் முதல் 3 மாதங்களுக்குள் நுரையீரலின் செயல்பாடு (Lung Function) 30 சதவிகிதம் வரை அதிகரிக்கும், இதனால் அதிக ஆக்ஸிஜன் எளிதாகக் கிடைக்கும்.

சிகரெட்டின் வெப்பம், நிகோட்டின் மற்றும் கெமிக்கல்களால் மூச்சுப் பாதையில் உள்ள சிலியா (Cilia) என்ற ரோமம் போன்ற நுண் அமைப்பு அழிந்து போயிருக்கும். சிகரெட் பழக்கத்தைக் கைவிட்ட 1 முதல் 9 மாதங்களில் இந்த சிலியாக்கள் மீண்டும் வளர்ந்து (Re-growth), சளி மற்றும் மூச்சுப் பாதையில் உள்ள தேவையற்ற பொருள்களை வெளியே தள்ளும் வேலையைச் செய்யத் தொடங்கும்.
இதனால் புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடிய ஸ்மோக்கர்ஸ் காஃப் (Smokers Cough) எனப்படுகிற இருமல் குறையும்.
ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருந்தால் இதய நோய் (Heart Disease) வருவதற்கான அபாயம் குறையும். அதுவே ஐந்து வருடங்கள் புகைபிடிக்காமல் இருந்தால் ரத்த நாளங்கள் நன்கு விரிவடைந்து, பக்கவாதம் (Stroke) மற்றும் இதய நோய் அபாயங்கள் பெருமளவு குறையும்.
10 வருடங்கள் புகைபிடிக்காமல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும்.
புகைபிடிப்பதை நிறுத்துவது என்பது மக்கள் நினைப்பது போல அவ்வளவு கடினமானது அல்ல. அதன் பாதிப்புகளைச் சரியாகப் புரிந்துகொண்டாலே எளிதில் வெளியில் வந்துவிடலாம்.
மன உறுதி இருந்தால் அடுத்த சிகரெட்டிலிருந்தே இதை நிறுத்திவிடலாம். சமீபத்தில் அமோனியா வாயுவைச் சுவாசித்ததால் பல பேர் மருத்துவமனையில் சேர்ந்த செய்தியைப் பார்த்தோம். தொழிற்சாலைகளில் நச்சு வாயுவைச் சுவாசித்து பாதிக்கப்படும் இதுபோன்ற செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம்.
அப்படி இருக்கையில் சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் உள்ளிழுக்கும் ஒவ்வொரு புகையுமே நச்சுவாயுதான் என்பதை அவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்? எத்தனை வருடப் பழக்கமானாலும், புகைப்பழக்கத்தை உடனே கைவிடுவதுதான் நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


