Doctor Vikatan: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது ஏன்?
Doctor Vikatan: என் உறவினருக்கு 35 வயது. அவருக்கு சிகரெட், குடி என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும், சமீபத்தில் வேறு பிரச்னைக்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கல்லீரலில் கொழுப்பு சேரும் ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது.
பொதுவாக, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். குடிக்காவிட்டாலும் பாதிப்பது ஏன்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை ஃபேட்டி லிவர் (Fatty liver) என்று சொல்கிறோம். இதில், ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் (Alcoholic fatty liver) மற்றும் நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் (Non-Alcoholic fatty liver) என இருவகை உண்டு.
குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு வரும். கொழுப்பு படிவது அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு வரை நிலைமை தீவிரமாகலாம். பாதிப்பு குறைவாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறதா, தீவிரமாக இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதைக் கண்டுபிடிப்பதில் சவால்கள் இருக்கலாம். கல்லீரல் செயல்திறன் டெஸ்ட்டிலும் ஆரம்பத்தில் அசாதாரண அறிகுறிகள் தெரியாது. போகப் போகத்தான் அதன் தீவிரம் தெரிய ஆரம்பிக்கும்.
ஆரம்பத்தில் இந்தப் பிரச்னை எந்த அறிகுறியையும் காட்டாது. தீவிரமான பிறகுதான் கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு படிவதால் ஏற்படும் விரிவடைதல் வலி (Capsule stretch) போன்றவை ஏற்படும். கல்லீரல் செயல்திறன் மோசமடையும். அடுத்தகட்டமாக கல்லீரல் செயலிழப்புவரை போகும் அபாயம் உண்டு.

ஒரு காலத்தில் ஃபேட்டி லிவர் குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் உண்மையில்லை. ரொம்பவே சீரியஸாக அணுகப்பட வேண்டிய பிரச்னை இது. சமீப வருடங்களில், கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதன் பின்னணியில், ஃபேட்டி லிவர் பாதிப்புதான் முதன்மையான காரணமாக இருக்கிறது.
குடிப்பழக்கத்தைத் தவிர்ப்பது, கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை முக்கியம். நீரிழிவும், கொலஸ்ட்ராலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். எனவே, குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பில்லை என நீங்களாகவே நினைத்துக்கொண்டு, அலட்சியம் செய்யாமல் உடனடியாக உங்கள் உறவினரை மருத்துவ ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


