Vadhandhi 2: தம்பிகளா, எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணமெல்லாம் இல்லைப்பா! - சசிகுமார் கலகல
கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த வதந்தி வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் வருகிற 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த சீசனில் சசிகுமார், அனகா, அபர்ணா தாஸ், ரேவதி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய சசிகுமார், "படம் பண்றதுக்கும் வெப் சீரிஸ் பண்றதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. படம்னா ரெண்டரை மணி நேரம்தான், ஆனா வெப் சீரிஸ் அஞ்சு மணி நேரம் வரும்.
அதனால் வொர்க் லோடு ரொம்பவே அதிகம். பேசாம பேமெண்ட் கொஞ்சம் ஜாஸ்தி கேட்டிருக்கலாமோ?ன்னு கூட நான் அப்புறமா யோசிச்சேன். பகல்-இரவு பாராமல் உழைத்தால் மட்டும்தான் வெப் சீரிஸுக்கான கண்டென்ட்டைக் கொண்டுவர முடியும்.
இதுக்கு முழு காரணமும் டைரக்டர் ஆண்ட்ரூதான். அன்னைக்கு எத்தனை சீன் எடுக்கணுமோ, அத்தனையும் அவர் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கும்.

காலை 7 மணிக்கு என்ன எனர்ஜியோட வேலையை ஆரம்பிக்கிறாரோ, அதே எனர்ஜியோடதான் இரவு 12 மணிக்கும் இருப்பாரு.
அவருடைய அந்த எனர்ஜிதான் எங்க எல்லாரையும் ஓட வச்சது" என்றவர், அரசியலுக்கு வருவீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அமேசான் பிரைம்ல எல்லாமே மாறிடுச்சு. ஆனா நிருபர்களோட இந்தக் கேள்வி மட்டும் மாறவே இல்லை.
எங்களுக்குப் புரோட்டோகால் போடுற மாதிரி, இந்த மாதிரி கேள்விகள் கேட்கக் கூடாதுன்னு நிருபர்களுக்கும் அமேசான் ஒரு புரோட்டோகால் போடணும். (சிரித்துக் கொண்டே) தம்பிகளா, எனக்கு அரசியலுக்கு வர்ற எண்ணமெல்லாம் இல்லைப்பா. நான் நடிக்க வந்திருக்கேன். அதை மட்டும்தான் பண்றோம்!" என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


