Spider-Man: Brand New Day Review: பிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஹீரோவாக கலங்கடிக்கும் பீட்டர் பார்க்கர்!
இளசுகளும் பெருசுகளும் ஒரே அளவில் கொண்டாடும் ஸ்பைடர் மேன், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த படத்தின் முடிவில், பீட்டர் பார்க்கர் யார் என்பதையே உலகம் மறந்துவிடுகிறது. ஆண்ட் மேவின் மறைவு, காதலி எம்.ஜே., உயிர்த்தோழன் நெட் உட்பட யாருக்கும் தன்னை நினைவில்லை என்ற நிலையில், நியூயார்க்கில் தனியாக வாழத் தொடங்குகிறார் பீட்டர்.
தனிப்பட்ட வாழ்க்கையை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஸ்பைடர் மேனாக நகரத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதையே தனது முழுநேரப் பணியாக மாற்றிக்கொள்கிறார். அதிலேயே அவர் மூழ்கிக் கிடக்கிறார். இதனால் தனிமையிலேயே ஆண்டுகள் கழிய, அவர் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அவரது உடலிலும் சக்திகளிலும் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதே நேரத்தில், யாராலும் பார்க்க முடியாத ஒரு புதிய எதிரியால் நியூயார்க் நகரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது. அந்த எதிரி யார், அவரை ஸ்பைடர்மேன் தடுத்தாரா என்பதே இந்த ‘பிராண்ட் நியூ டே’.
தனியாகவே பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளியான ‘ஹோம்’ வரிசைப் படங்களில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸின் நிழலிலேயே இருந்தார் டாம் ஹாலண்டின் ஸ்பைடர்மேன். கடந்த படத்திலும் மல்டிவெர்ஸ், பழைய ஸ்பைடர் மேன்கள் மற்றும் அவர்களது வில்லன்கள் என ஒரு பிரமாண்டக் கதையின் ஓர் அங்கமாகவே அவர் இருந்தார்.
இந்த நிலையில், 2000-களில் நாம் ரசித்த, நியூயார்க் நகரத்தின் அன்றாடப் பிரச்னைகளைத் தீர்க்கும் எளிமையான ஸ்பைடர் மேன் கதையை மீண்டும் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘ஹோம்’ வரிசைப் படங்களில் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமில்லை என்றாலும், அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய OG ஸ்பைடர் மேன் ஃபிளேவர் அதில் மிஸ்ஸிங் என்பதே தீவிர ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது. அதை இந்தப் படத்தில் சரி செய்ய முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.
ஸ்பைடர் மேன் சூட் தொடங்கி, அவரது வாழ்க்கை முறை, ஸ்டண்ட்ஸ், நகரத்துடனான உறவு என அனைத்திலும் பழைய ‘ஃபிரெண்ட்லி நெய்பர்ஹுட் ஸ்பைடர் மேன்’ உணர்வைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதற்காக முற்றிலுமாக MCU-விலிருந்து விலகிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. இருப்பினும், ஒரு பெரிய MCU நிகழ்வுக்கான முன்னோட்டமாக மட்டும் இல்லாமல், முழுமையான தனித்துவமான ஸ்பைடர்மேன் கதையாகப் படம் இருக்கிறது.
சாதாரண மனிதனாக பீட்டர் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், ஸ்பைடர்மேனாக அவர் சுமக்கும் பொறுப்பையும் ஒன்றாக இணைத்திருப்பது படத்தின் முக்கியமான பலம். பீட்டர் பார்க்கருக்கும் ஸ்பைடர்மேனுக்கும் இடையேயான அடையாளப் போராட்டம் எழுதப்பட்டிருக்கும் விதமும் சிறப்பு.
முந்தைய படங்களில் இருந்த பதின்பருவ மாணவனின் உற்சாகம் குறைந்து, இழப்புகளையும் தனிமையையும் சுமக்கும் முதிர்ச்சியான பீட்டராகச் சிறப்பாக நடித்திருக்கிறார் டாம் ஹாலண்ட். ஸ்பைடர்மேனின் ட்ரேட்மார்க் குறும்பு, கோபம், பயம், விரக்தி, காதல் எனப் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, எம்.ஜே. தன்னை மறந்துவிட்டு வேறொரு வாழ்க்கையில் முன்னேறுவதைப் பார்க்கும் காட்சிகளில் பீட்டரின் வலியை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.
எம்.ஜே-வாக வரும் ஜென்டாயாவுக்கு முந்தைய படங்களைவிடக் குறைவான காட்சிகளே என்றாலும், கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். பீட்டர்–எம்.ஜே. இடையேயான காட்சிகளில் டாம் ஹாலண்ட் மற்றும் ஜென்டாயாவின் கெமிஸ்ட்ரி கூடுதல் எமோஷன் சேர்க்கிறது. இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், பேசாமல் ஒருவரை ஒருவர் பார்க்கும் தருணங்கள் என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
புதிதாக இணைந்துள்ள சேடி சிங்கும் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான மர்மத்தையும் அழுத்தத்தையும் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார். பனிஷராக ஜான் பெர்ன்தாலை படத்தில் சேர்த்த விதமும் அசத்தல். குற்றவாளிகளைக் கையாளும் விதத்தில் ஸ்பைடர் மேன் மற்றும் பனிஷர் இடையே உருவாகும் கொள்கை மோதல்கள் சுவாரஸ்யம். ஹல்காக மார்க் ரஃபலோவுக்கும் படத்தில் சிறிய, ஆனால் முக்கியமான பாத்திரம் இருக்கிறது.
இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டனுடன் இணைந்து, ஒளிப்பதிவாளர் பிரெட் பாவ்லாக் இந்த ஸ்பைடர்மேன் உலகத்திற்குச் செயற்கைத்தனம் குறைவான, சற்றே நெருக்கமான காட்சிமொழியைக் கொடுத்திருக்கிறார். நியூயார்க் நகரத்தை படத்தின் முக்கிய அங்கமாகவும் மாற்றியிருக்கிறார்கள். நகரத்தின் பரபர தெருக்கள், கட்டடங்களின் உச்சியில் அரங்கேறும் காட்சிகள், இரவு நேரச் சண்டைக்காட்சிகள் என அனைத்தையும் பிரெட் பாவ்லாக்கின் கேமரா அழகாகப் பதிவுசெய்திருக்கிறது. கட்டடங்களுக்கு நடுவே ஸ்பைடர்மேன் சுற்றித் திரியும் வெப் ஸ்லிங்கிங் காட்சிகளும் இந்தப் படத்தில் பிரெஷாக இருக்கின்றன.
வழக்கமான CG பிரமாண்டத்தை மட்டும் நம்பாமல், கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் ஸ்டண்ட் காட்சிகளையும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். மாறிவரும் ஸ்பைடர்மேனின் சக்திகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இறுதிக்கட்ட ஆக்ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட். கதையின் ஒவ்வொரு முடிச்சையும் படிப்படியாக அவிழ்த்து, கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கும் திரைக்கதையும் சிறப்பு.
சேடி சிங்கின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கிறது. அவரது பின்னணியை மர்மமாக வைத்து சஸ்பென்ஸை உடைக்கும் பாணி நன்றாக இருந்தாலும், அதன் காரணமாக அந்தக் கதாபாத்திரத்துக்குப் போதுமான நேரமும் அழுத்தமான பின்னணியும் கிடைக்காமல் போகிறது. இதனால் இறுதியில் அரங்கேறும் சில முடிவுகளும் மனமாற்றங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
அவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்து, MCU-வின் அடுத்த முக்கிய அத்தியாயத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்கள். அது எப்படி விரிவடைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மொத்தத்தில், வாழ்க்கை குறித்த புரிதல், பீட்டர் பார்க்கரின் உள்ளார்ந்த போராட்டங்கள், தனிமை, பொறுப்பு ஆகியவற்றைப் பேசும் அதே நேரத்தில், ஸ்பைடர்மேன் படங்களுக்கே உரிய குறும்பு, சாகசம், ஆக்ஷனையும் தவறவிடாமல் ஒரு முழுமையான படத்தை கொடுத்திருக்கிறார் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். இதுவரை வெளியான டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் படங்களிலேயே, ரசிகர்கள் எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படமாக இது இருக்கும்.
மொத்தத்தில், ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு இந்த ‘பிராண்ட் நியூ டே’ ஓர் அசத்தலான விஷுவல் மற்றும் எமோஷனல் ட்ரீட்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

