CJP: ``தவறான பாதையில் சென்ற நமது இளைஞர்களை நாம் மன்னிக்க வேண்டும் - பிரதமர் மோடி வீடியோ
கடந்த ஜூலை 23 அன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தின் போது, 25 வயது பெண் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரைக் குறித்து மிகவும் கடுமையான, நாகரிகமற்ற வார்த்தைகளால் அவதூறு முழக்கங்களை எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அவதூறு சம்பவத்தைத் தொடர்ந்து, நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு எதிராக பூஜ்ய எஃப்.ஐ.ஆர் (Zero FIR) பதிவு செய்யப்பட்டது.
அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், பொதுமக்களிடையே குழப்பத்தைத் தூண்டுதல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடம் டெல்லி என்பதால், மேல் விசாரணைக்காக இவ்வழக்கு டெல்லி பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்குத் மாற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நேற்று வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ``சமூகத்தில் நிலவும் வேதனையைத் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இது இளைஞர்களை அரவணைத்து அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய நேரம். ஜந்தர் மந்தரில் நான் மட்டுமல்ல, எனது மறைந்த தாயாரும் கூட அவதூறான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டனர். ஆனால், அவதூறுகள் எதையும் தீர்த்துவிடாது. தவறான பாதையில் சென்றவர்களை நாம் வழிநடத்துவோம். அவர்களைத் தண்டிப்பதோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதோ இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகாது.
நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். ஆனால், நமது மகள்கள் இத்தகைய அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு கலாச்சார அதிர்வாக உள்ளது. தவறான பாதையில் சென்ற நமது இளைஞர்களை நாம் மன்னிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் நம் குழந்தைகள். அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவது நமது கடமை. பற்கள் நம் நாக்கைக் கடித்தாலும் நாம் அவற்றை உதறித் தள்ளுவதில்லை. இரண்டும் நமக்குச் சொந்தமானவை. அதுபோலவே நமது இளைஞர்களும் நமக்குச் சொந்தமானவர்களே. நமது நாடு முன்னேறி வருகிறது, அவர்களும் அதனுடன் இணைந்து முன்னேற வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவோம்." என்றார்.

இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்த `காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், ``போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஆட்சேபனைக்குரியதாக இருந்தாலும், அதற்காக அரசின் குற்றவியல் சட்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கைது செய்வதைக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட நபரே தனிப்பட்ட முறையில் சிவில் அல்லது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர உரிமை உண்டு. ஆனால் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தவறானது." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


