கடனாளிகளாகும் பெரும்பான்மை இந்தியர்கள்... காப்பாற்ற என்ன வழி?
ஃபோர்ப்ஸ் (Forbes) தரவுகளின்படி, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அதே இந்தியாவில்தான், பெரும்பாலான குடும்பங்களின் மாதச் சம்பளம், அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்த நொடியே கடன் தவணைகளுக்குப் போய்விடுவதும் நடக்கிறது. ‘எக்ஸ்பர்ட் பேனல்’ நிறுவனம் நடத்திய கடன் சார்ந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் 60% பேர், தங்களது மாதாந்தர கடன் தவணைகள் மாத வருமானத்துக்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருப்பதாகக் கூறியுள்ளனர். 40% பேர் ஏற்கெனவே வாங்கிய கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு உடைக்கும் மிகப் பெரிய உண்மை, பெரும்பாலானவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காகக் கடன் வாங்குவதில்லை; மருத்துவச் செலவு, வேலை இழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடி, குடும்பத் தேவைகள், கல்வி, திருமணம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வாங்குகிறார்கள். இந்தியக் குடும்பங்களின் மிகப் பெரிய பலவீனம், அதிகச் செலவு செய்வது அல்ல; போதுமான சேமிப்பும் திட்டமிடலும் இல்லாததுதான்.
இந்தியாவில் தனிநபர் கடன்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. ‘Pre-approved Loan’, ‘Instant Credit’, ‘Buy Now, Pay Later’ போன்ற வசதிகள், தேவைக்கும் ஆசைக்கும் இடையிலான எல்லையைக் குறைத்துவிட்டன. ஆனால், கடன் பெறுவது எளிதாகிய அளவுக்கு அதைத் திருப்பிச் செலுத்தும் திறனும், நிதி ஒழுக்கமும் மக்களிடம் வளரவில்லை.
கடன் தவறல்ல. சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் அது வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும். அதை முறையாகக் கையாளத் தெரியாததால்தான் பலரும் மீளமுடியாத சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இதை உணர்ந்து, ஒவ்வொரு குடும்பமும் ஓர் எளிய விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மொத்தக் கடன், மாத வருமானத்தில் 40 சதவிகிதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடன் கைமீறினால், உடனடியாக செலவுகளைக் கட்டுப்படுத்தி அதிலிருந்து மீள முயற்சியுங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, பங்குச் சந்தைக் குறியீடு களிலோ, நிறுவனங்கள் பெறும் லாபத்திலோ மட்டுமில்லை. வளமான, நிம்மதியான குடும்பங்களின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. ஒருபக்கம், மக்களுக்கு நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லை. மறுபக்கம், மக்களின் வருமானத்தில் பெரும் பகுதியை கடன் தவணை, வட்டி, அபராதம் என விழுங்குகின்றன நிறுவனங்கள். முக்கியமாக, தவணை தவறியவர்களை மிரட்டுவது, அவதூறு ஏற்படுத்துவது, வீட்டுக்கே சென்று அச்சுறுத்துவது போன்ற சட்டவிரோதமான வசூல் நடைமுறைகளும் அதிகரித்துவிட்டன.
கடன்தாரர்கள் அதன் சுமையிலிருந்து விடுபடுவதில், அரசு, நிதி நிறுவனங்கள், மக்கள் என மூன்று தரப்புக்குமே பொறுப்புள்ளது. அந்தப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவோம். கடன் வட்டியால் மூச்சுத் திணறும் இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றுவோம்.
-ஆசிரியர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


