தூதுவளை முதல் நித்திய கல்யாணி வரை! – மருத்துவத் தாவரங்களின் மகத்துவத்தை உலகறியச் செய்த இந்தியப் பெண்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அசிமா சட்டர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 1917-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் நாள் மருத்துவர்.இந்திர நாராயண் முகர்ஜிக்கும் கமலா தேவிக்கும் மகளாக பிறந்தார். தனது தந்தைக்கு தாவரவியல் துறையில் இருந்த ஆர்வமே பிற்காலத்தில் அசிமாவுக்கு மருத்துவத் தாவரங்கள் மீது ஈர்ப்பு வர முக்கியக் காரணமாக அமைந்தது. இவருக்கு சரஷி ரஞ்சன் முகர்ஜி என்ற இளைய சகோதரர் இருந்தார். அவர் பின்நாட்களில் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றார். மருத்துவத் தாவரங்கள் குறித்த அசிமாவின் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் அவரோடு இணைந்து பணியாற்றினார்.

பெண்கள் எளிதில் கல்வி கற்க முடியாத காலகட்டத்திலும், தனது விடாமுயற்சியால் வேதியியல் துறையில் மிக உயரிய கல்விப் படிகளை எட்டினார் அசிமா சட்டர்ஜி. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பெத்தூன் கொலிஜியேட் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியைப் பயின்ற அசிமா சட்டர்ஜி 1932-ஆம் ஆண்டு தனது மெட்ரிகுலேஷன் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இதற்காக வங்காள அரசின் கல்வி உதவித்தொகையையும் பெற்றார். 1934-ஆம் ஆண்டு பெத்தூன் கல்லூரியில் இடைநிலை அறிவியல் படிப்பை முடித்தார். இதிலும் சிறந்து விளங்கி பல உதவித்தொகைகளையும், மதிப்புமிக்க பதக்கங்களையும் வென்றார்.

இருபாலர் பயிலும் கல்லூரிகளில் படிப்பதை சமூகம் எதிர்த்த போதிலும், இவரது தாயாரின் ஆதரவால் 1936-ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் வேதியியல் பிரிவில் கௌரவப் பட்டம் பெற்றார். பாசந்திதாஸ் தங்கப்பதக்கத்தையும் வென்றார். 1938-ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற அசிமா பல்கலைக்கழகத்தின் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். 

அசிமாவின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பின் போது, இந்திய வேதியியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் பேராசிரியர் பிரபுல்ல சந்திர ராய், முனைவர் பட்ட ஆராய்ச்சியின் போது கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற கரிம வேதியியலாளரும் அசிமாவின் வழிகாட்டியுமான பேராசிரியர் பிரபுல்ல குமார் போஸ் ஆகிய இருவருமே அசிமாவின் ஊக்க சக்திகளாகத் திகழ்ந்தனர்.

அசிமாவுக்கு தாவர வேதியியல் மீதான ஆர்வத்தை விதைத்தவர் பேராசிரியர் பிரபுல்ல குமார் போஸ். அசிமா  இந்தியத் தாவரங்களில் உள்ள வேதியியல் மூலக்கூறுகள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்தார்.  தாவரங்களில் இருந்து கிடைக்கும் கலாய்டுகள் மற்றும் செடிகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப்பொருள் வகையான கூமரின்கள் ஆகியவற்றின் வேதியியல் அமைப்பு பற்றி ஆராய்ந்தார்.  இந்திய மூலிகைகளான தூதுவளை, வேப்பிலை, வில்வம் மற்றும் சர்ப்பகந்தி போன்ற தாவரங்களின் வேதியியல் பண்புகளை முதன்முதலில் துல்லியமாக பகுப்பாய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்காக 1944-ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 

முனைவர் பட்டம் பெற்ற பிறகு, உலகளாவிய விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்ற அசிமாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற காலடெக் நிறுவனத்தில் பின்னாளில் நோபல் பரிசு பெற்றவரும் பேராசிரியருமான லாஸ் பாலிங் உடன் இணைந்து உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் பால் காரர் உடன் இணைந்து ஆல்கலாய்டுகள் குறித்த தனது ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்தினார்.

1945-ஆம் ஆண்டில் பௌதிக மற்றும் மண் வேதியியலாளர் முனைவர்.பரதானந்த சட்டர்ஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பின் அசிமா முகர்ஜி, அசிமா சட்டர்ஜி என மாறினார்.  பரதானந்த சட்டர்ஜி ஹவுராவில் உள்ள பெங்கால் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றினார். இந்த தம்பதியருக்கு ஜூலி சட்டர்ஜி (திருமணத்திற்குப் பின் ஜூலி பானர்ஜி) என்ற ஒரே ஒரு மகள் இருந்தார். ஜூலி தனது தாயாரின் வழியைப் பின்பற்றி கரிம வேதியியலில் சிறந்து விளங்கி, பின்நாட்களில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

1967-ஆம் ஆண்டு அசிமா சட்டர்ஜியின் வாழ்வில் ஒரு பேரிடியாக அமைந்தது. அடுத்தடுத்த நான்கு மாத இடைவெளியில் அவர் தனது தந்தை இந்திர நாராயணையும், கணவர் பரதானந்த சட்டர்ஜியையும் இழந்தார். இந்த அடுத்தடுத்த இழப்புகளால் அதிர்ச்சியடைந்த அசிமாவுக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். பின்னர், அவரது மாணவர்கள் மற்றும் மகளின் ஆதரவோடு மீண்டு வந்து மீண்டும் தனது அறிவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

1940-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள லேடி பிரபோர்ன் கல்லூரியில் வேதியியல் துறையின் நிறுவனத் தலைவராக தனது பணியைத் தொடங்கினார். 1944-ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றினார். 1954-ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் உயர்விரிவுரையாளராக (ரீடர்) நியமிக்கப்பட்டார்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, அசிமாவுக்குப் போதிய ஆராய்ச்சி நிதியோ, நவீன உபகரணங்களோ கிடைக்கவில்லை. தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுக்கத் தேவையான ரசாயனங்களை வாங்கக் கூடப் பணம் இல்லாத சூழல் நிலவியது. அப்போது சோர்வடையாத அசிமா, சமையலறைப் பொருட்களைப் பயன்படுத்தியும், குறைந்த செலவிலான மாற்று வழிகளைக் கண்டுபிடித்தும் தனது மாணவர்களுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

1962-ஆம் ஆண்டில், அப்பல்கலைக்கழகத்தின் மிக மதிப்புமிக்க கைராப் பேராசிரியர் என்ற கரிம வேதியியல் தலைமை பதவியை அலங்கரித்தார். இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு துறையின் தலைவரான முதல் பெண்மணி இவரே ஆவார். இப்பதவியில் 1982-ஆம் ஆண்டு வரை மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.

மார்சிலியா மினூட்டா போன்ற தாவரங்களிலிருந்து வலிப்பு நோய்க்கான உலகத்தரம் வாய்ந்த ஆயுஷ்-56 மூலிகை மருந்தை உருவாக்கினார். அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ் (ஏழிலைப்பாலை) தாவரத்திலிருந்து மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் மருந்தை உருவாக்கினார். வின்கா ரோசியா எனப்படும் நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து புற்றுநோய்க்கு எதிரான வேதிப்பொருட்களைப் பிரித்தெடுக்கும் மருத்துவ ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

1975-ஆம் ஆண்டில், இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் முதல் பெண் பொதுத் தலைவராக) தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்தார். அறிவியல் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரால் 1982-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.